புதுதில்லி:
மத்திய பாஜக அரசானது, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம்(ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா,விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பிரச்சனை அடிப்படையில் பாஜக-வை ஆதரிக்கும் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம், சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பாஜக கூட்டணியிலேயே இருக்கும் சிரோமணி அகாலிதளம் போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.தற்போதைய மசோதாக்களால், விவசாயத்துறை தனியார்மயமாகும், கொள்முதல், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்தை அரசாங்கம் கைகழுவும் என்று விமர்சித்து வருகின்றன.இந்த 3 மசோதாக்களில் முதல்மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதே, நாடாளுமன்றத்தில் அதனைஎதிர்த்து கூட்டணிக் கட்சியான அகாலிதளம் வாக்களித்தது. எஞ்சியுள்ள இரண்டு மசோதாக்களையும் இதேபோல எதிர்ப்போம் என்றதுடன், “விவசாயிகள் நலனுக்கு எந்த தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்” என்று சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் நாடாளுமன்றத்தில் எச்சரித்து இருந்தார்.இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அகாலிதளம் கட்சியின் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் வியாழனன்று தனது அமைச்சர் பதவியையேதிடீரென ராஜினாமா செய்தார்.
தனது பதவி விலகல் குறித்து, டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஹர்ஷிம்ரத் கவுர்பாதல்- அதில், “விவசாயிகளுடன் அவர்களது மகளாகவும், சகோதரி யாகவும் உடன் நிற்பதிலேயே பெருமை அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஹர்ஷிம்ரத் கவுர் பாதல், மத்திய பாஜக அரசில் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்து வந்தார்.