tamilnadu

img

ரோடியர் மில் மூடல்: கிரண்பேடி மீது முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி:
ரோடியர் மில் மூடப்படுவதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியே காரணம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.செய்தியாளர்களை சந்தித்த முதல் அமைச்சர் நாராயணசாமி,” இப்போது செவ்வாய்க்கிழமை பரீட்சார்த்தமாக முழு ஊரடங்கை அமல்படுத்துகிறோம். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்கள், மருத்துவர்கள், அதிகாரிகளிடம் பேசி வருகிறோம்” என்றார்.
ரோடியர் மில் பிரச்சினை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளன. விஜயன் கமிட்டி பரிந்துரையின் பேரில் 3-வது யூனிட்டை நடத்துவது, மற்ற பிரிவுகளை சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்து அதன் பரிந்துரையின்படி செயல்படுவது என்று முடிவு செய்தோம். இதனையே முதல் கோரிக்கையாக வைத்து ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம் என்றும் அவர் கூறினார்.

மில்லை இயக்குவது தொடர்பான கோப்புக்கு  கிரண்பேடி ஒப்புதல் அளிக்காமல் மில்லை மூடவேண்டும் என்கிறார். இதுதொடர்பான அமைச்சரவையின் முடிவினை எதிர்த்து மத்திய அரசுக்கு கோப்பினை அனுப்பினார். நாங்கள் மில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கவேண்டும் என்றோம். தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்களை பட்டானூரில் உள்ள மில்லுக்கு சொந்தமான இடத்தை விற்று கொடுக்க முடிவு செய்தோம். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக முடிவு செய்து மில்லை மூட உத்தரவிட்டுள்ளார்.இதை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். ரோடியர் மில் மூடப்பட்ட நிலையிலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் அளிக்க ஒவ்வொரு ஆண்டும் ரூ.24 கோடி நிதி ஒதுக்கி தந்தோம். இந்த ஆண்டு கூட ரூ.14 கோடி ஒதுக்கி உள்ளோம். கடந்த ஆண்டு அந்த நிதியை தரவிடாமல் ஆளுநர் தடுத்து நிறுத்தினார். ரோடியர் மில் மூடப்படுவதற்கு முழு காரணமும் கிரண்பேடி தான் என்றும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.

ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகத்தை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி மில்லை தொடர்ந்து நடத்த அனைத்துக் கட்சி தலைவர்களுடன் மத்திய ஜவுளித்துறை அமைச் சரை சந்தித்துப் பேசினோம். அவர்களும் ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்வதாக கூறினார்கள். எங்கள் அரசு தொழிலாளின் பக்கம் நிற்கிறது. ரோடியர் மில்லுக்கு சொந்தமான பட்டானூர் நிலத்தை விற்க அனுமதிக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளோம். ரோடியர் மில் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளதாகவும் கூறினார்.