tamilnadu

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராஜஸ்தான் ஆளுநர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1991-92 காலகட்டத்தில் முதல்வராக பதவி வகித்தவர் கல்யாண் சிங். முதல்வர் என்ற வகையில் மசூதி இடிப்பை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததற்காக, ஆட்சிக் கலைப்புக்கும் ஆளானவர். தற்போது, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் 23-ஆம் தேதி அலிகார் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் கல்யாண் சிங், “நாம் அனைவருமே பாஜக தொண்டர்கள் தான்; இந்த தேர்தலில் பாஜக மகத்தான வெற்றிபெற வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்க வேண்டும்; மீண்டும் ஒருமுறை மோடி பிரதமராக வர வேண்டும்; இது நாட்டுக்கு மிகவும் முக்கியம்” என்று பேசியுள்ளார். அனைவருக்கும் பொதுவாக நடந்து கொள்ள வேண்டிய ஒரு ஆளுநர், தனது பதவிக்குரிய கண்ணியத்தை மீறி, பாஜக-வுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தது, கடும் விவாதத்தைக் கிளப்பியது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி ஆளுநர் கல்யாண் சிங்கை கடுமையாக கண்டித்துள்ளது.“நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்மீது சிறிதளவிலாவது மரியாதை இருந்தால் ஒருகணம் கூட தாமதிக்காமல் ஆளுநர் பதவியில் இருந்து கல்யாண் சிங் விலக வேண்டும்;

இல்லாவிட்டால் அவரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.