புதுதில்லி:
பொதுமுடக்க கால சிரமங்கள் காரணமாக பணிக்கு வரமுடியாமல் போன தொழிலாளர்களுக்கு, ஆப்சென்ட் போட்டு, ரயில்வே நிர்வாகம் அவர்களின் சம்பளத்தை பிடித்துள்ளது.மும்பை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 800-க்கும் மேற்பட்ட மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்கள் பணிக்கு வரவில்லை என்று குறிப்பிட்டு ரயில்வே நிர்வாகம் சம்பளம் தர மறுத்துள்ளது. இது ஊழியர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மும்பையைச் சேர்ந்த 48 வயதாகும் கேங்மேன் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், “நான் பத்லாபூரில் வசிக்கிறேன். நாங்கள் வசிக்கும் கட்டடம் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் சிலருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் தடுப்புகள் வைத்து வெளியேற விடாமல் மூடி விட்டனர். இதன்காரணமாகவே என்னால் பணிக்கு செல்ல முடியவில்லை; ஆனால், எனது சம்பளத்தைப் பிடித்துக் கொண்டார்கள்” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான ரயில்வே ஊழியர்கள் நகருக்கு வெளியேதான் வசித்து வருகின்றனர். அவர்கள் நகருக்கு வருவதற்கே போதிய போக்குவரத்து வசதிகள் ஏதுமில்லை. டிராக் மேலாண்மை செய்யும் ஊழியர்களும் இவர்களில் அடங்குவர். அவ்வாறிருக்கையில் அவர்களின் சம்பளத்தைப் பிடித்தது சரியானதல்ல என்ற ரயில்வே தொழிற்சங்கங்களும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.“ஏப்ரல் மாதத்திலும் பெரும்பாலானோருக்கு குறைந்தபட்ச ஊதியமே வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் சம்பளம் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் கடின உழைப்பால் தான் ரயில்வே நிர்வாகத்தால் ரயில்களை முறையாக இயக்க முடிகிறது. ஆனால் அவர்களது குடும்பத்தின் மீது அக்கறை காட்டாமல் நிர்வாகம் இவ்வாறு தடாலடி நடவடிக்கையில் இறங்கி ஊழியர்களை வஞ்சித்து இருக்கிறது. தற்போதைய இக்கட்டான சூழலில் எப்படி அவர்கள் குடும்பம் நடத்த முடியும்?” என்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.