tamilnadu

img

மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திட பொது முதலீடே தீர்வு

புதுதில்லி:
மக்களின் வாங்கும் சக்தியை  அதிகரித்திட, பொது முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்க ளவை உறுப்பினர் எளமரம் கரீம் கூறினார்.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் புதனன்று நாட்டின் பொருளாதார நிலை மீது குறுகிய கால விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று எளமரம் கரீம் பேசியதாவது:

நம் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இது ஒன்றும் சுழன்றுவரக்கூடிய ஒரு நெருக்கடியல்ல. இது இந்த முதலாளித்துவ அமைப்பின்நெருக்கடியாகும். நம் உள்நாட்டு உற்பத்தி விகிதம் மிகவும் கீழ்நிலைக்குச் சென்றிருக்கிறது.விவசாய உற்பத்தி, தொழில் உற்பத்தி, கட்டுமானத் தொழில் என அனைத்தும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இவ்வாறாக, நம் பொருளாதார வளர்ச்சி அனைத்துத் துறைகளிலும் இறங்கு முகத்தில் இருந்து வருகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு செங்குத்தான முறையில் உயர்ந்திருக்கிறது. நான்கு கோடி தொழிலாளர்களுக்கு வேலை அளித்து வந்த – நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீத அளவிற்குப் பங்களிப்பினைச் செலுத்தி வந்த - ஆட்டோமோபைல் தொழிலும் ஆழமான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. சுமார் 49 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை  அளித்துவந்த உற்பத்தித் தொழில்துறையும் (manufacturing GDP)  கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இத்துறைகளில் பணியாற்றிவந்த பத்து லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.இந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம், மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததாகும்.

மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத நிலை தொடருமானால், தொழில்துறையும் உற்பத்தித்துறையும் தங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள முடியாது.மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திட நாட்டின் பொது முதலீட்டின் மூலம் நமக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பிட வேண்டும். இதன் பயனாக, கணிசமான அளவிற்கு வேலைவாய்ப்பு பெருகும். அதன்மூலம் மக்கள் மத்தியில் வாங்கும்சக்தி ஏற்படும். அவர்களிடம் வந்த பணம் செலவழிக்கப்படும்போது, நாட்டின் தொழில்துறைகளும் உற்பத்தித்தொழில் பிரிவுகளும் மீண்டும் புத்துயிரூட்டப்பட்டு வேலைகள் தொடரும்.ஆனால் அரசாங்கம் இதைச் செய்வதற்குப் பதிலாக, சமீபத்தில் அரசாங்கம், கார்ப்பரேட்டுகளுக்கும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கும் மேலும் சலுகைகளை வாரிவழங்கியிருக்கிறது. 70 ஆயிரம் கோடி ரூபாயை ரியல் எஸ்டேட் வர்த்தகப் புள்ளிகளுக்கும், அந்நிய முதலீட்டாளர்களுக்கும் அள்ளித் தந்திருக்கிறது. மக்கள் இன்றைய தினம் வீடு வாங்க முடியாமல் இருக்கிறார்கள். ஏனெனில், அவர்களிடம் வீடு வாங்குவதற்குப் பணம் இல்லை.

உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்குள் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது, நாம் எப்படி ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியும்? இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கம் மேலே கூறியவாறு கார்ப்பரேட்டுகளுக்கு சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு  மேலும் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது.  இப்படிச்செய்ததன்மூலம், நம் நாட்டின் சந்தையை எப்படி நீங்கள் ஊக்குவித்திட முடியும்? நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக நம் தொழில்துறையில், தொழிலாளர் வர்க்கத்தின் கட்டமைப்பே நிலைகுலைந்து போய் கிடக்கிறது. நிரந்தரப் பணியிடங்கள் குறைந்துகொண்டிருக்கின்றன. ஒப்பந்த ஊழியர்கள், நாட்கூலி ஊழியர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்கங்கள் பலவீனப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டுபேர சக்தி பலவீனப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவற்றின் விளைவாக, நாட்டில் செல்வம்ஒருசிலர் கைகளுக்குச் சென்று அடைந்துகொண்டிருக்கிறது. இந்தியா, ஏற்றத்தாழ்வான பொருளாதார வளர்ச்சியுடைய மாபெரும் நாடாக மாறியிருக்கிறது. இவற்றின் விளைவாக, மக்கள் தொகையில் கணிசமாக உள்ள தொழிலாளர்களிடம் பண்டங்களை வாங்கும் அளவுக்கு பணம் இல்லை.ஜவுளித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்த துணிகள் விற்பனையாகவில்லை என்று கூறுகின்றனர்.மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் அளவிற்கு அரசாங்கம் கொள்கை முடிவுகளை எடுத்திட வேண்டும். இந்தத் திசைவழியில் இயங்குவதன் மூலம் மட்டுமே நாம் நம் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வினைக் காண முடியும்.இவ்வாறு எளமரம் கரீம் கூறினார்.

கே.கே. ராகேஷ்
இவ்விவாதத்தில் கலந்துகொண்டு கே.கே. ராகேஷ் (சிபிஎம்) பேசியதாவது:நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏற்கனவே ஐந்து சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இது மேலும் வீழ்ச்சி அடையும் என்றேஅனைத்துவிதமான ஆய்வுகளும் கூறுகின்றன. நீங்கள் என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள்? ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்குவேலை அளிப்போம் என்றீர்கள். ஆனால் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, நம் நாட்டில் ஒவ்வோராண்டும் ஒரு கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வேலையில் உள்ள தொழிலாளர்களின் ஊதியங்களும்கடுமையாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன.எனினும் நம் அரசாங்கத்தில் உள்ள  முக்கியமானவர்களே, நாடு  2025இல் ஐந்துடிரில்லியன் டாலர் இலக்கினை எய்திடும் என்று திரும்பத்திரும்ப அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.விவசாய நெருக்கடியும் தொடர்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது இரட்டிப்பாகி இருக்கிறது. நம் வங்கிகள் மிகவும் ஆழமான நெருக்கடியில் இருக்கின்றன. இந்த அரசாங்கத்திடம் என் கோரிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்குப் பதிலாக, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திட அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதேயாகும்.இவ்வாறு கே.கே.ராகேஷ் கூறினார்.