புதுதில்லி:
ஜேஎன்யு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தனது எதிர்ப்பைக் காட்டும்,அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் களில் ஒருவரான சி.பி. சந்திரசேகர், மத்தியஅரசின் புள்ளிவிவரக் குழுவிலிருந்து விலகியுள்ளார்.புள்ளிவிவரங்கள் மற்றும் நிரல் அமலாக்க அமைச்சகமானது, பொருளாதார புள்ளிவிவரங்களுக்கான நிலைக்குழுவை அமைத்தது. முன்னாள் தலைமை புள்ளிவிவர நிபுணர் ப்ரோணாப் சென் தலைமையில், பொருளாதாரத்தின் “தரவு மூலங்கள்,குறிகாட்டிகள், கருத்துக்கள் அல்லது வரையறைகள் மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பான விரிவான கட்டமைப்பை மறு ஆய்வுசெய்ய இக்குழு அமைக்கப்பட்டது. புள்ளிவிவர அமைப்பில் “அரசியல்தலையீடு” குறித்த கவலைகள் எழுந்த பின் னர் இந்த குழு உருவாக்கப்பட்டிருந்தது. இதில், ஜேஎன்யு பல்கலைக்கழக பேராசிரியர் சி.பி. சந்திரசேகரும் இடம்பெற்றிருந்தார்.
நவம்பர் 2019-க்கான தொழிற்துறை உற்பத்தி குறியீட்டுத் தரவை (ஐஐபி) இறுதிசெய்வதற்கும், புதிதாக அமைக்கப்பட்ட குழுவின் எதிர்கால நிகழ்ச்சி நிரலை அமைப்பதற்கும், ஜனவரி 7-ஆம் தேதி இந்த குழு தனது முதல் கூட்டத்தை நடத்தவிருந்தது. இந்நிலையில்தான், ஜனவரி 6-ஆம் தேதிஇரவே சி.பி. சந்திரசேகர், புள்ளிவிவரக் குழுவிலிருந்து விலகியுள்ளார்.“இந்தியாவில் புள்ளிவிவர அமைப்பின்வலுவான தன்மை குறித்து இந்த அரசாங்கம் கவலைப்படவில்லை என்பது எனதுஉறுதியான எண்ணம். ஜனவரி 5-ஆம் தேதிநடந்த ஜேஎன்யு சம்பவம், இந்த அமைப்பின்மீதான நம்பிக்கையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது” என்று சி.பி.சந்திரசேகர் கூறியுள்ளார்.மேலும், “நாம் இப்போது வேறு உலகில் வாழ்கிறோம் என்பதையும், நம்பிக்கையை இழந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்துபணியாற்றுவது கடினம் என்ற எண்ணத்தையும் எனக்கு ஏற்படுத்தியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.