டெஹ்ரான்
மேற்காசிய நாடான ஈரானில் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. தினமும் 10-க்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் பலியாகி வரும் நிலையில், வெள்ளியன்று ஒரே நாளில் 17 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 1,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி ஈரானில் கொரோனா தாக்குதலுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 4,500-யை தாண்டியுள்ளது. இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பாத்தேமேஹ் ரஹ்பர் (55) என்ற பெண்மணி கொரோனா தாக்கத்தால் சனியன்று உயிரிழந்தார். இவருடன் சிகிச்சை பெற்று வந்த 10-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர். தினமும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதால் ஈரான் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சம் கொள்கின்றனர்.