tamilnadu

img

‘கொடுத்து வைத்த’ இந்திய மக்கள்... அனிமேஷன் படக்காட்சி மூலம் ஆசனம் கற்றுத்தருகிறார் பிரதமர்!

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி, 2014 முதல் 2019 வரையிலான 5 ஆண்டு ஆட்சியில், எதில் தீவிரம் காட்டினாரோ, இல்லையோ, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா நாளாக, ஐக்கிய நாடுகள் அவை மூலம் அறிவிக்கச் செய்வதில் அவ்வளவு தீவிரம் காட்டினார். 

மேலும், நாடு முழுவதும் யோகா நாளைக் கடைப்பிடிக்க உத்தரவிட்ட மோடி, ஒவ்வொரு சர்வதேச யோகா நாளின் போதும், யோகா செய்து அதன் வீடியோக்களை மறக்காமல் வெளியிட்டு வந்தார். ஒருமுறை மோடி வெளியிட்ட பிட்னெஸ் வீடியோ, சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் ஆன சம்பவமும் நடந்தது.இந்நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள மோடி, ஜூன் 21-ஆம் தேதி வரவுள்ள யோகா தினத்திற்கு, 15 நாட்களுக்கு முன்பே தயாராகி விட்டார். இந்த முறை, தான் மேற்கொண்ட யோகா பயிற்சியை, அனிமேஷன் வீடியோவாக வெளியிட்டு நாட்டு மக்களை அசத்தியுள்ளார். 

இதில், முதல் நாளில் வெளியிட்ட வீடியோவில், ‘திரிகோண ஆசனம்’ எனும் யோகா பயிற்சியை செய்வது எப்படி? என்று மக்களுக்கு மோடி செய்து காட்டி இருந்தார். இதற்கு கிடைத்த வரவேற்பை (?) தொடர்ந்து, தற்போது ‘தடாசனம்’ என்ற யோகாசனத்தையும் அனிமேஷன் வீடியோவாக வெளியிட்டு பார்வையாளர்களை ஈர்த்துள்ளார்.
அதுமட்டுமன்றி, “தடாசனத்தை முறையாக செய்யப்பழகினால் மற்ற யோகாசனங்களை மிக சுலபமாக செய்ய முடியும்” என்றும்; “இந்த ஆசனம் குறித்த விவரங்களை தனது வீடியோ மூலம் அறிந்து கொள்ளுங்கள்” என்றும் பயிற்சியாளராக மாறி, ராம்தேவுக்கே போட்டியாக எழுந்துள்ளார்.

நாட்டில் வேலையில்லாத ஆண்கள் - பெண்களின் எண்ணிக்கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1 சதவிகிதத்தை எட்டியிருப்பதும், ஜிடிபி 6.8 சதவிகிதமாக சரிந்துள்ளதும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை 4 சதவிகிதத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.