tamilnadu

img

பிரேம்சந்தின் முன்மொழிவுகள் - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 13

...நேற்றைய தொடர்ச்சி

பிரேம்சந்த் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்தினர்: “இதுவரை உருது, இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே படைத்தருக்கிறோம். இவை ஆரம்ப நிலையில் தமது கடமையை - பெருமைக்குரிய பணிகளைச் செய்துள்ளன. கலாச்சாரத்தையும் அரசியலையும் பிரிக்க முடியாது. மொழியில் நாம் இன்றும் தேர்ச்சியோடும் அர்த்தமுள்ளதாகவும் எழுதவேண்டும். மாற்றத்தை நோக்கி நாம் பயணம் தொடர்வோம். வாழ்வின் எதார்த்தங்களை இறுகப்பற்றி நிற்போம். காதல் தோல்விகளைப் பற்றி அல்லது நமது மனதிற்கு அதிசயமாய் தெரிவதை சுயதிருப்திக்காக எழுதக்கூடாது. வாழ்க்கைப் பிரச்சனைகள், சமூக மதிப்புகள், நமது சமூக விமர்சனம் படைப்புகளில் வேண்டும். இவை இல்லாமல் அது இலக்கியமாகாது. கீழ்நிலையிலுள்ள ஒடுக்கப்பட்ட, சுரண்டப்படும் மக்களுக்காக நாம் வாதாட வேண்டும். மனித இயல்பு, மனநிலை பற்றிச் சித்தரித்தால் அதில் மாற்றத்திற்கு வழிகூற வேண்டும். உண்மையான மனிதர்களைப்பற்றி எழுத வேண்டுமே தவிர கற்பனை மனிதர்களை சிருஷ்டிக்கக் கூடாது. எலும்பும் சதையுமான மனிதனையே தேட வேண்டும். தாய் நாட்டின் மீதான தேசபக்தியுடன் சர்வதேச மனிதத்துவமும் இணையவேண்டும். நமது பூமி செழிப்பானது. வளமான விதைகள் நம்மிடமுள்ளது. மாக்சிம் கார்க்கி, ரோமெய்ன் ரோலந்த், ஹென்றி பார்புஸ்ஸி போன்ற மகத்தான எழுத்தாளர்கள் தங்கள் விதைகளை உலகம் முழுவதும் தூவிச்  சென்றிருக்கிறார்கள். நமது இந்திய எழுத்தாளர்கள் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பிற்போக்கு சக்திகள் நமது பாரம்பரியமான மூடநம்பிக்கைகளை விதைத்து வருகின்றன. அவற்றையே சமூகத்தில் நிலை பெறச்செய்ய முயற்சிக்கின்றன. வாழ்வின் நடைமுறை எதார்த்தங்களை அவை நிராகரிக்கின்றன. அடிப்படையற்ற கற்பனைகளை விதைக்கின்றன. இதனால் மனித உடல் ரத்தசோகையால், மனமும் சிந்தனையும் முடமாகி வக்கிரத் தத்துவத்தில் ஊறிக்கிடக்கிறது. எனவே இந்திய எழுத்தாளர்கள் இதில் முறிப்பை ஏற்படுத்த வேண்டும். இந்திய சமூகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப் புரிந்து அறிவியல் கண்ணோட்டத்தில் தங்கள் படைப்புகளை உருவாக்க வேண்டும். இலக்கிய விமர்சனங்களையும் எழுதவேண்டும். அது பொதுவான பிற்போக்கு மற்றும் திரிபுவாதப் போக்குகளை பலவீனப்படுத்தி குடும்பம், மதம், பாலுறவு, யுத்தம், சமூகம் பற்றிய புதிய கருத்துக்களை, வெளிக்கொணர வேண்டும். அவை வகுப்புவாதம், நிறவெறி, மனிதனை மனிதன் சுரண்டுவதை எதிர்ப்பதாக இருக்கவேண்டும். பிற்போக்கான வர்க்கங்கள் சமூகத்தைப் பின்னோக்கி இழுப்பதைத் தடுத்து கலைகளை மக்களுக்குத் தேவையான முறையில் எதார்த்த வாழ்வைப் புரியவைத்து எதிர்காலத்துக்கான பாதையை மக்களுக்கு நாம் விரும்பும் முறையில் போதிக்கவேண்டும். 

இந்திய நாகரீகத்தின் சிறந்த பாரம்பரியங்களை நமது விமர்சனத்திற்கு உட்படுத்தி, அது நமது நாட்டில் ஏற்படுத்திய விளைவுகளை அம்பலப்படுத்தும் படைப்புகளை உருவாக்க வேண்டும். அவை பிற்போக்கில் உழன்று கிடக்கும் மக்களைப் புதிய இந்திய இலக்கியத்தின் பக்கம் திருப்பவேண்டும். அது மக்களை அறியாமையிலிருந்தும், அரசியல் சூன்யத்திலிருந்தும் மீட்க வேண்டும். காரணமின்றி செயலற்ற தன்மையால் முடங்கிக்கிடக்கும் மக்களை பிற்போக்காளரிடமிருந்து மீட்க வேண்டும். நமது விமர்சன உணர்வு, பிற்போக்கு இயக்கங்களையும் அவர்களது சடங்குகளையும் பார்த்தால் நமக்கு இயங்கத் தோன்றும். இவற்றுக்கெதிரான மாற்றங்களை நாம் உருவாக்கினால் நாம் முற்போக்காளர்களாக ஏற்கப்படுவோம்”.

நமது இயக்கத்தின் குறிக்கோள்

1. பல்வேறு மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை - அந்தந்த பிராந்தியங்களை ஒருங்கிணைத்து மாநாடுகளை நடத்தவேண்டும். அவற்றில் புதிய இலக்கிய வெளியீடுகளை வெளியிடவேண்டும். அமைப்பின் பொதுவான அடிப்படைக் கண்ணோட்டத்துடன் அகில இந்திய இணைப்பை ஏற்படுத்த வேண்டும். இதன் லட்சியங்களை முரண்படாமல் அந்த பிராந்தியங்களில் இயங்கவேண்டும்.

2. முதலில் இந்திய நகரங்களில் அமைப்பை நிறுவிடவேண்டும்.

3. முதலில் படைப்பிலக்கியங்களை உருவாக்குவதோடு, உலகின் முற்போக்கு இலக்கியங்களைத் தங்கள் மொழியில் பெயர்க்கவேண்டும். கலாச்சாரப் பிற்போக்குத் தனங்களை எதிர்க்கவும், இந்திய சுதந்திரம் சமூகப் புத்துருவாக்கம் செய்யவும் இது பயன்படும்.

4. முற்போக்கு எழுத்தாளர்களின் முயற்சிகளைப் பாதுகாக்க வேண்டும்.

5. நமது எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திர உரிமைக்காகப் போராட வேண்டும்.

- பிரேம் சந்தின் இந்த முன்மொழிவுகளை அரசியல் வேறுபாடுள்ள எழுத்தாளர்களும் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். 

மேலும் இரண்டாம் உலகப்போர் பாசிச சர்வாதிகாரிகளால் தூண்டப்படுவது குறித்தும் மாநாடு எச்சரித்தது. அப்போது இத்தாலியின் சர்வாதிகாரி, அபிசீனியா மீது போர் தொடுத்து அந்நாட்டைக் கைப்பற்றினார்.

“ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே போட்டியும் பூசலும் உருவாகியுள்ளது. இது உலக மக்களின் இதயங்களில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நாம் போரை வெறுக்கிறோம். அமைதி நிலவ விரும்புகிறோம். இந்த ஏகாதிபத்தியப் போரில் இந்தியா பங்கேற்கக் கூடாதென்றும் வலியுறுத்துகிறோம்” என்றும் மாநாட்டில் கூறப்பட்டது.         “தாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் எனும் கருத்தோட்டமுள்ள எழுத்தாளர்களும் உள்ளனர். ஆனால் உணர்வுள்ள எழுத்தாளர்கள் அவன் அல்லது அவனைச்சுற்றி நடந்த, நடக்கிற, நடக்கப் போகிறவை பற்றிய அறிவுடன் திகழவேண்டும். இந்தியாவில் அந்நியராட்சியிலிருந்து விடுதலை, கடந்த காலத்திய கேடுகளைக்களைந்து வாழ்வு, கலாச்சாரத்தை, சிந்தனையை நவீனப்படுத்தல் அவசியமாகும். அதே சமயம் அழகியல், சுவைபட எழுதும் ஆற்றல் எழுத்தாளர் கலைஞர்களுக்கு அவசியம்” என்றும் மாநாடு அழைப்பு விடுத்தது.

உலகில் பாசிசம், யுத்தம் என்பது நமது தலைக்குமேல் கத்தியாய் தொங்குகிறது. மனித சமூகத்தின் கழுத்தை அறுக்கத் துணிகிறது. நமது மாநாட்டின் முடிவுகளை சர்வதேச எழுத்தாளர் காங்கிரசும் ஏற்றுக் கொண்டது. அதனை ஏற்று ரவீந்திர நாத் தாகூர், சரத் சந்திர சாட்டர்ஜி, பி.சி.ராய், ஜவகர்லால் நேரு, பிரமாத சவுத்ரி, ராமானந்த சாட்டர்ஜி, நந்தலால் போஸ் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டது. 1943-ல் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் 4வது மாநாடு மும்பையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் சஜ்ஜத் ஜாகீர் தனது அறிக்கையில் “அரசியல் களம் போலவே நாட்டில் எழுத்தாளர் இயக்கமும் தேக்கமடைந்துள்ளது. இலக்கியத் தேக்கத்தை உடைத்தெறிய வேண்டும்” என்று கூறினார். ஆனால் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கம் பிளவை ஏற்படுத்தியது. சிலர் அமைப்புக்கு எதிரிகளாகவே மாறினர். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலமது. சர்வதேச, தேசிய அரசியலிலும் மாற்றம் ஏற்பட்டது. இத்தகைய சூழலிலும் அமைப்பின் ஒற்றுமையை ஜாகீர் வலியுறுத்தினார். இரண்டாம் உலகப் போருக்கும் பின்பு 1947-ல் அதிகாரம் வெள்ளையக் கரங்களிலிருந்து இந்தியர் கைக்கு மாறியது. இதைத் தொடர்ந்து வேறுபட்ட, முரண்பட்ட கருத்தோட்டங்கள் எழுத்தாளர்களிடையே அதிகரித்தது. எனவே மார்க்சிஸ்ட்டுகள் மட்டும் இயங்கும் கலாச்சார அமைப்பாக மாறியது. ஐம்பதாண்டகளுக்குப் பின்பு அது ‘சஹமத்’ என்ற அமைப்பாக உருவாகியுள்ளது.