மூணாறு:
ராஜமலை நிலச்சரிவில் புதையுண்ட வர்களில் மேலும் 3 சடலங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீட்கப்பட்டன. இதோடு உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது. காணாமல் போன 12 பேரை தேடும் பணி 10 ஆவது நாளாக ஞாயிறன்றும் தொடர்ந்தது.
கேரள மாநிலம் மூணாறு ராஜமலையில் பெட்டிமுடி கண்ணன் தேவன்தேயிலைத் தோட்டத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் லயங்களில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பங்களில் 85 பேர் சிக்கினர். 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு படையினர், பொதுமக்கள் நடத்திய மீட்பு நடவடிக்கையில் வெள்ளியன்று வரை 55 சடலங்கள் மீட்கப்பட்டன. சனியன்று தனுஷ்கா (2) என்கிற சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது. ஞாயிறன்று சின்னத்தாயி (68), முத்துலட்சுமி (22) ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன. சம்பவ இடத்தில் இருந்து ஆற்றின் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராவல் பங்க் என்னுமிடத்தில் சரளைக் கற்களில் புதைந்த நீலையில் காணப்பட்டன.
மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி தலைமையில் மீட்பு நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. நிலச்சரிவில் சிக்கிய அனைவரையும் கண்டுபிடிக்கும் வரை தேடுதல் பணியைதொடர்வது என மூணாறில் கூடிய சிறப்புக் குழு முடிவு செய்துள்ளது. ஆறுகளை மைய்யப்படுத்தி தேடுதல் நடைபெற்று வருகிறது. ஆறுகளில் பரிச்சயம் உள்ள இடமலக்குடி ஆதிவாசி இளைஞர்களை இதில் இடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது. மண்ணினுள் மனித உடலை கண்டறிவதற்கான கருவிகளும் பயன்படுத்தப்படும்.
வாலிபர் சங்க தலைவர்கள்
ஞாயிறன்று பெட்டிமுடி நிலச்சரிவு நடந்த பகுதியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர்கள் ஏ.ஏ.ரஹீம், எஸ்.சதீஷ் உள்ளிட்டதலைவர்கள் பார்வையிட்டு. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
நாயின் பாசம்
பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 2 வயது சிறுமியின் சடலத்தை மீட்க அவளுடன் பாசமுடன் விளையாடி வந்த நாய் உதவியது. இரண்டே வயதுள்ள தனுஷ்காவுக்கு அவர்களது வீட்டில் வளர்க்கும் நாய் குவியுடன் நல்ல நட்பு. தனது பாசத்துக்குரிய அந்த குடும்பம் மண்ணுக்குள் புதையுண்டிருந்ததை குவி உணர்ந்து கொண்டது. மீட்புக்குழுவினருடன் குவியும் அவர்களை மோப்பம் பிடிக்க தொடங்கியது. சனியன்று சம்பவ இடத்திலிருந்த 5 கிலோ மீட்டர் தூரத்தில் ஆற்றுநீர் சுற்றி வளைத்திருந்த ஒரு மரத்தை நோக்கி குரைத்துக் கொண்டிருந்தது. மீட்புக்குழுவினர் அங்கு சென்று அழுகிய நிலையில் மரத்தில் சிக்கி இருந்த தனுஷ்காவின் சடலத்தை மீட்டனர். ஆனாலும் குவி அங்கேயே சுருண்டு படுத்துக் கிடந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.