tamilnadu

img

ராமர் கோவில் கட்ட அனுமதி

பாபர் மசூதி இடிப்பு சட்டவிரோதம்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி, நவ.9- அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட அனு மதி வழங்கி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சனியன்று தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகோராவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதி பதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக சனிக்கிழமை யன்று தீர்ப்பு வழங்கியது. இந்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற ஐந்து நீதிபதி களும் ஒருமித்த தீர்ப்பை அளிப்பதாக தலைமை நீதிபதி கூறினார்.\

அந்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக் குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதுவரை சர்ச்சைக்குரியதாக இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு இன்னும் மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும். மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை புதிதாக ஏற்படுத்த உள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்திருக்கும் உச்சநீதி மன்றம், அதே நேரம் பாபர் மசூதி இடிக்கப் பட்டது சட்டவிரோதம் என்றும் சுட்டிக்காட்டி யுள்ளது. வக்ஃபு வாரியம் ஏற்றுக் கொள்ளும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் ஒதுக்கு மாறும் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி யில் இருந்த 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பரிவாரங்களால் இடிக்கப்பட்டது. ராமர் பிறந்த இடத்தைக் கைப்பற்று வதாகக் கூறி, இந்துத்வா கரசேவகர்கள், பாபர் மசூதியை இடித்தனர். இதனால் ஏற்பட்ட மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கா னோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டம் அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்த னர். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அர சியல் சாசன அமா்வு விசாரித்தது.

சமரசக்குழு

இந்த விவகாரத்தில் சமரசத் தீா்வு காண்ப தற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் நியமித்தது. அந்தக் குழுவின் சமரசப் பேச்சு வார்த்தையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்பட வில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்ப டையில் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி யது. வழக்கில் மூன்று தரப்பினரின் அனைத்து வாதங்களையும் அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. அதையடுத்து 40 நாட்கள் நடை பெற்ற விசாரணைக்கு அக்டோபா் 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

அன்றைய தினம், உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்த குழு, சமரசப் பேச்சு வார்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவு களையும், தீா்வுகளையும் அறிக்கையாக முத்திரையிட்ட உறையில் உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பர் 17-ஆம் தேதி யுடன் ஓய்வுபெறவிருப்பதையொட்டி அதற்குள்ளாக இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சனிக்கிழமையன்று தீர்ப்ப ளித்துள்ளது.

ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடக்கூடாது

தீர்ப்பில் சர்ச்சைக்குரிய அம்சங்களும் உள்ளன

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

மதம்சார்ந்த இடங்களை மீண்டும் தாவாவுக்கு உட்படுத்தி, பயன்படுத்திக் கொள்ளாத விதத்தில் இந்தச் சட்டத்தின்கீழ் அனைத்துத்தரப்பினரும் நடந்துகொள்வதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

புதுதில்லி, நவ.9- பாபர் மசூதி இடப்பிரச்சனை தொடர் பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கேள்வி எழுப்பக் கூடிய சர்ச்சைக்குரிய சில அம்சங்களும் இருக்கின்றன. எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு மதநல்லிணக்கத்தை சீர்குலைத்திடும் விதத்தில் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக கையில் கூறியிருப்பதாவது:

அயோத்தி தொடர்பாக நீண்ட கால மாக இருந்து வந்த தாவா மீது உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பினை அளித்தி ருக்கிறது. தாவா நிலத்திலிருந்து 2.77 ஏக்கர் இடத்தை ஓர் அறக்கட்டளை மூலமாக ஒரு கோவில் கட்டுவதற்காக இந்துக் களுக்கு ஒப்படைத்திருக்கிறது. மேலும் இதற்குப்பதிலாக ஒரு மசூதியைக் கட்டு வதற்காக ஐந்து ஏக்கர் நிலத்தை சன்னி வக்ப் வாரியத்திற்கு அளித்திட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது. இந்த ஆணையின் மூலமாக, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அரசமைப்புச்சட்ட அமர்வாயம், வகுப்புவாத சக்திகளால் பயன்படுத்தப் பட்டு வந்த மற்றும் மிகப் பெரிய அளவில் வன்முறை வெறியாட்டத்திற்கும் உயிரி ழப்புக்கும் காரணமாக இருந்த, இந்தத் தாவாவிற்கு முற்றுப்புள்ளி வைத்திடக் கோரியிருக்கிறது.

பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு தீர்வினை எட்டமுடியவில்லையெனில், நீதித்துறையின் தீர்ப்பால் இந்தப் பிரச் சனை தீர்க்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் கூறிவந்திருக்கிறது. இரு தரப்பினரும் முரண்டுபிடித்து வந்த பிரச்சனைக்கு இந்தத் தீர்ப்பு ஒரு தீர்வினை அளித்தி ருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்த தீர்ப்புரையில் கேள்வி எழுப்பக்கூடிய விதத்தில் சர்ச்சைக்குரிய சில அம்சங்க ளும் இருக்கின்றன.

பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

நீதிமன்றமே, 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதானது சட்டத்தை மீறிய செயலாகும் என்று கூறியிருக்கிறது. இது ஒரு கிரிமினல் நடவடிக்கை மற்றும் மதச்சார்பற்ற கொள்கையின் மீதான தாக்குதலுமாகும். பாபர் மசூதி இடிக்கப் பட்டது தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை விரைவுபடுத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் நீதிமன்றம் 1991ஆம் ஆண்டு மத வழிபாட்டு இடங்கள் சட்டத்தையும் மெச்சிப் பாராட்டியிருக்கிறது. மதம் சார்ந்த இடங்களை மீண்டும் தாவா வுக்கு உட்படுத்தி, பயன்படுத்திக் கொள்ளாத விதத்தில் இந்தச் சட்டத்தின்கீழ் அனைத்துத்தரப்பினரும் நடந்துகொள்வதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மதநல்லிணக்கத்தை சீர் குலைத்திடும் விதத்தில் ஆத்திரமூட்டல் நட வடிக்கைகளில் எவரும் ஈடுபடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.    (ந.நி.)