புதுதில்லி, மே 11-பெப்சிகோ நிறுவனம், தங்களுடைய லேஸ் சிப்ஸ் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்திடும் குஜராத் விவசாயிகளுக்கு எதிராகப் போட்டிருந்த அனைத்து வழக்குகளையும் விலக்கிக்கொண்டுவிட்டது. இது, தங்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என விவசாய சங்கங்கள் கொண்டாடுகின்ற அதே சமயத்தில், எதிர்காலத்தில் இத்தகைய ரக உருளைக்கிழங்குகளை விவசாயிகள் பயிரிடுவதற்கு அவர்களுக்குள்ள உரிமைகள் குறித்துதிட்டவட்டமான நிலையினை மத்திய, மாநிலஅரசுகள் எடுத்திட வேண்டும் எனவும் கோரியுள்ளன.மன்னிப்புக் கேட்க வேண்டும்விவசாயிகள் சார்பில் வழக்கு தொடுத்திருந்த வழக்குரைஞர் ஆனந்த் யாக்னிக், இவ்வாறு விவசாயிகளை நீதிமன்றத்திற்கு இழுத்தடித்ததற்காக பெப்சிகோ நிறுவனம் விவசாயிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும்என்றும் வலியுறுத்தினார். அவர் மேலும், “பெப்சிகோ நிறுவனம் விவசாயிகளை மிரட்டிப் பார்த்திருக்கிறது, எனினும் விவசாயிகள் இந்நிறுவனத்திடம் சரணடைந்துவிடவில்லை,” என்றும் கூறினார்.விவசாயிகளின் விதை உரிமையைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட பீஜ் அதிகார் மஞ்ச் என்னும் நிறுவனம் கூறுகையில், ‘‘இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நிலை என்னஎன்பது குறித்து மத்திய அரசு எதுவும் கூறாமல் மவுனமாக இருக்கிறது,” என்றும் இதுகுறித்துக் கேட்டால் “வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருப்பதால் எதுவும் சொல்வதற்கில்லை என்று தப்பித்துக் கொள்கிறது’’ என்றும், இப்போது ‘‘இதுபோன்ற வழக்குகள்ஏற்கத்தக்கதல்ல என்பது இப்போது தெளிவாகிவிட்டது’’ என்றும் அதன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(ந.நி.)