இன்று குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் மக்களைப் பாதிக்கும் திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் எதிராக குரல் கொடுத்தார்கள். கொந்தளித்தார்கள். போராடினார்கள். இப்போது சொல்வதைப் போலவே அப்போதும் மாணவர்களுக்கு எதற்கு அரசியல்? அவர்கள் படிப்பதை மட்டும் கவனித்தால் போதும் என்றார்கள். ஆனாலும் கூட தங்களது கல்வி நலன்களுக்காக மட்டுமின்றி சமூக நலன்களுக்காகவும், நாட்டு நலன்களுக்காகவும் மாணவர்கள் போராடத்தான் செய்தார்கள். இப்போதும் தொடர்ந்து போராடவே செய்கிறவர்கள்; ஏனெனில் அது அவர்களுக்கும் மக்களுக்கும் பொதுவானதாகும்.
மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை என்று சொல்பவர்களுக்கு 1920களிலேயே லாலா லஜபதிராய் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். அகில இந்திய மாணவர் காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்துப் பேசும்போது, “மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று நம்புவர்களில் ஒருவனாக நான் இல்லை. அது ஒருமிக முட்டாள்தனமான கோட்பாடு என்று நான் நினைக்கிறேன். மேலும் அது சாத்தியமில்லாதது என்றும் நினைக்கிறேன். அது தெளிவற்ற மூளைகளின் உருவாக்கம் மட்டுமல்ல, நேர்மையற்ற மூளைகளின் உருவாக்கம் என்றும் கருதுகிறேன்” என்று கூறினார். மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் தங்களின் ஏகபோக ஆதிக்கம் தகர்ந்துவிடும். அரசியலை நன்கு புரிந்து கொள்வார்கள். அதை மக்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். தங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனாலேயே அதை நேர்மையற்றவர்களின் உருவாக்கம் என்று லாலா லஜபதிராய் கூறியிருக்கிறார். அத்தகையவர்கள் இன்று அதிகமாகி இருக்கும் சூழலில் அரசியலில் மாணவர்கள் பங்கேற்பது மேலும் மேலும் முக்கியமானதாகிறது. இன்றைய ஆட்சியாளர்கள் மக்களைப் பிரித்தாள நினைப்பதைப் போலவே அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும் நினைத்தார்கள். ஆனால் மாணவர்கள் அஞ்சவில்லை. தீவிரமாக போராடினார்கள்.'
உலகளவில் பாசிச ஹிட்லரின் ஆதிக்கவெறியும் இனவெறியும் நாடு பிடிக்கும் போரில் கொண்டு போய்விட்டது. அதனால் அன்றைய மாணவர் இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் நாட்டு விடுதலைக்காக மட்டுமின்றி உலகப் போரை எதிர்த்துப், பிரச்சாரம் செய்ய வேண்டியதாயிற்று. அத்துடன் மாணவர்களின் உரிமைக்கான போராட்டங்களிலும் ஈடுபடுவது அவசியமானது. அத்துடன் மாணவர் சம்மேளனத்தின் கிளைகளை நாட்டின் அனைத்து நகரங்களிலும் உருவாக்குவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடினமானதாகவும் இருந்தது. இந்தக் காலத்தில் போர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள், காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டார்கள். மாணவர்களாயிருந்த கம்யூனிஸ்ட்டுகளான பாலதண்டாயுதம், என்.சங்கரய்யா, மீனாட்சி போன்றவர்கள் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டனர்.
அகில இந்திய மாணவர் சம்மேளனத்தை தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கும் பணியில் என்.சங்கரய்யா தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஏனெனில் முன்பு சென்னை மாகாண மாணவர் சம்மேளனமாக இருந்த பரந்த அமைப்பு, சேலம் நகரில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாட்டுக்கு என தமிழ்நாடு மாணவர் சம்மேளனத்தை உருவாக்கியது. அதன் பொதுச் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திருநெல்வேலியில் மாணவர்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது சங்கரய்யா அங்கு சென்றார். இந்துக் கல்லூரி, செயிண்ட் ஜான் கல்லூரி, செயிண்ட் சேவியர் கல்லூரி மாணவர்கள் அணி திரண்டு பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். நகரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆயினும் மாணவர்கள் அமைதியான முறையில் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் பேசுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஊர்வலம் நடந்தது. ஆனால் ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கும் சமயத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். சங்கரய்யா உள்பட மாணவர்கள் பலரும் பலத்த தாக்குதலுக்கு உள்ளாயினர். பல மாணவர்களின் மண்டை உடைந்தது. சங்கரய்யாவும் பலமான குண்டாந்தடி தாக்குதலுக்குள்ளானார். இதனைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து 1942 அக்டோபர் மாதத்தில் பாதுகாப்புச் சட்டப்படி சங்கரய்யா கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தக் காலத்தில் இரண்டாம் உலக யுத்தம் காரணமாக நாட்டில் அரசியல் சூழல் மாறியிருந்தது. இது மாணவர் சம்மேளனத்துக்கு சிரமமானதாக இருந்தது. ஏனெனில் சோவியத் நாடு மீது ஹிட்லரின் படைகள் தாக்குதலைத் தொடுத்ததையடுத்து அந்த யுத்தத்தை ‘மக்கள் யுத்தம்’ என்று கம்யூனிஸ்ட்டுகள் குறிப்பிட்டனர். சோவியத் நாட்டையும் தொழிலாளி வர்க்க அரசையும் பாட்டாளி மக்களின் நலன்களையும் பாதுகாக்கவும் உலகளவில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களின் வெற்றிக்காகவும் கம்யூனிஸ்ட்டுகள் குரல் எழுப்பினார்கள்.
இந்தச் சமயத்தில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ், சோவியத்தின் நேச நாடுகள் அணியில் இருந்ததால், இந்திய மக்கள் இந்த அணியை ஆதரிக்க வேண்டும் எனக் கூறியதால் கம்யூனிஸ்ட்டுகள் பழிச்சொல்லுக்கு உள்ளாக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தது. அத்துடன் துரோகி என்றும் ஏகாதிபத்திய தாசர்கள் என்றும் கம்யூனிஸ்ட்டுகள் மீது அவதூறுகளை அள்ளி வீசினர். ஆயினும் 1942 ஆகஸ்டில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹெமு கலானி எனும் சிந்து பகுதி, மாணவர் சம்மேளன தலைவர் பிரிட்டிஷ் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 1943ல் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16 தான். இது தவிர சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்மேளன தலைவர் கனக்லதா பருவா பிரிட்டிஷாரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி தியாகியானார். இத்தகைய கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சோதனைகளுக்கு இடையிலும் அகில இந்திய மாணவர் சம்மேளனம், சுதந்திரம் - சமாதானம் - முன்னேற்றம் எனும் தனது பதாகையை உயர்த்திப் பிடித்த படியே நடைபோட்டது.