புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வந்த வெளிமாநிலத்தவர் ஜூன் 20 சனிக் கிழமை பகல் 12 மணிக்குள் பதிவு செய்யாவிட்டால் தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு கடந்த சில வாரங்களாக அனுமதியின்றியும், இ-பாஸ் இல்லாமலும் அதிக அளவில் வெளிமாநிலங்களில் இருந்து பலர் வந்துள்ளனர். புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவியதற்கு இதுவும் ஒரு காரணம் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து எல்லைகளில் சீல் வைக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், இது தொடர்பாக இன்று (ஜூன்19) மாவட்ட ஆட்சியர் அருண் கூறுகையில், “புதுச்சேரிக்குக் கடந்த 1ஆம்
தேதி முதல் வெளிமாநிலங்களில் இருந்து வந்த அனைவரும் பதிவு செய்ய வேண்டும். அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று தங்கள் விவரங்களை சனிக்கிழமை (ஜூன் 20) பகல் 12 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம்” என்று எச்சரித்துள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களிலுள்ள மருத்துவ அதிகாரிகள் தனியாக ஒரு சுகாதாரப் பதிவேட்டைப் பராமரிக்கத் தொடங்கியுள்ளனர். புதுச்சேரிக்கு அண்மையில் வந்தவர்களின் விவரங்கள் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. இப்பணிகள் சனிக்கிழமைக்குள் முடிவடைய உள்ளன. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு விரைவுபடுத்தத் தொடங்கியுள்ளது.