புதுதில்லி
வெங்காய விலை உயர்வு குறித்து நாடாளுமன்ற மக்களவையில் விவாதிக்க கோரி நவம்பர் 28 வியாழனன்று திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தது.வெங்காயத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.170 வரையும் பெரிய வெங்காயம் 100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வியாழனன்று மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி வெங்காய விலை உயர்வுகுறித்து விவாதிக்கக் கோரி ஒத்தி வைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெளிநாட்டிலிருந்து 1.2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யவுள்ளதாக ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து ஆலோசனைக் கூட்டங்களும் நடை பெற்று வருவதாகத் தெரிவித்திருந்தது.
மத்திய அரசு கைவிரிப்பு
இந்நிலையில் மத்திய உணவு - நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது தங்கள் கையில் இல்லை. எனினும் விலையை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்திருப்பதாகவும், 1.2 லட்சம்மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதிசெய்ய இருப்பதாகவும் தெரிவித் துள்ளார்.