அமராவதி:
ஆந்திராவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப் படுத்தியுள்ளார்.இதன்படி, முதற்கட்டமாக பழங்குடியின மக்கள் வாழும் 77 இடங்கள்தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்குள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1,062 மதிப்புள்ள சத்துணவு வழங்கப்படும். குழந்தை பிறந்த பிறகு ‘ஒய்.எஸ்.ஆர் பாலசஞ்சீவினி பெட்டகம்’ என்ற திட்டத்தின் பெயரில் அந்த குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கப்படும். முதல் 25 நாட்களுக்கு உணவு, முட்டை, 200 மி.லி பால் மற்றும்முதல் வாரம் 2 கிலோ கோதுமை மாவு, இரண்டாம் வாரம் அரை கிலோ கடலை மிட்டாய்கள், மூன்றாவது வாரம் அரை கிலோ கேழ்வரகு, வெல்லம், நான்காவது வாரத்தில் அரை கிலோ எள் விதை ஆகியவை வழங்கப்படும்.அதையடுத்து 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொருமாதமும் ரூ. 560 மதிப்புள்ள சத்துணவு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 77 இடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மாதம் 25 நாட்கள் முட்டை, 200 மி.லி பால் மற்றும் சத்துணவு வழங்கப்படும்.இத்திட்டம் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் வரும் டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.