தில்லி
190-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானோரை மருத்துவமனைக்கு அனுப்பி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கி வருகிறது. தற்போதைய தருணத்தில் கொரோனாவின் பெயரை சொன்னாலே மக்கள் ஒருவித அச்சம் கொள்கின்றனர். காரணம் இதுவரை மொத்தமாக 1.66 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6.56 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக இந்த கொரோனா கொடூரத்தால் மக்கள் தங்களது இயல்பு நிலையை முற்றிலும் இழந்து வருகின்றனர்.
கொரோனா பதற்றத்துக்கு இடையே உலக மக்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் செய்தி கொரோனாவிலிருந்து மீள்வது தான். இதுவரை 1 கொடியே 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் மீண்டுள்ளனர். இன்னும் 57 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 21.36 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். பிரேசிலில் 16.67 லட்சம் பேரும், இந்தியாவில் 9.54 லட்சம் பேரும், ரஷ்யாவில் 6.12 லட்சம் பேரும் இதுவரை குணமடைந்துள்ளனர்.