புதுதில்லி:
இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மூன்று விமானந்தாங்கி கப்பல்கள் தேவைப்படுவதாகவும் கடற்படைக்கான நிதி ஒதுக்கீடுகுறைந்துவிட்டது என்றும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை தினம் டிசம்பர் 4 அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடற்படை சார்பில் தில்லியில் செவ்வாயன்று நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில் கடற்படை தளபதி கரம்பீர்சிங் கூறியதாவது: இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய கடற்படைக்கு மேலும் மூன்று விமானந்தாங்கி கப்பல்கள் தேவைப்படுகிறது. இதன் மூலம் இரண்டு கப்பல்கள் எந்நேரமும் செயல் பாட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள முடியும்.
மேலும் அவை 65 ஆயிரம் டன் எடையுடன், மின்காந்த உந்துவிசை கொண்ட கப்பல்களாக இருக்க வேண்டும். முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பல் இன்னும் 3 ஆண்டுகளில் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. கடல்வழியாகவும் எல்லை தாண்டிய தீவிரவாதம் நடக்கலாம். அவற்றை முறியடிக்க கடற்படையும், கடலோர காவற்படையும் தயாராக உள்ளன. கடற்படைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 5 ஆண்டுகளில் 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைந்துவிட்டது. நடப்பு நிதி ஆண்டில் கடற்படைக்கு 23 ஆயிரத்து 145 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இனியும் 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.