பெங்களூரு
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் நடப்பாண்டிற்கான கல்வியை இன்னும் மாணவர்கள் தொடங்கவில்லை. ஒரு கல்வியாண்டில் பெரும்பாலும் ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்படும். ஆனால் ஆகஸ்ட் மாதம் தொடங்கியும் இன்னும் பள்ளி, கல்லூரிகள் துவங்கவில்லை. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் சில மாநிலங்களில் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலம் நடப்பாண்டிற்கான பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் கடாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது 2 குழந்தைகள் (வயது நிரம்பியவர்கள்) அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். அம்மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தூர்தர்சன் தொலைக்காட்சி மூலம் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கஸ்தூரி வீட்டில் தொலைக்காட்சி இல்லையென்பதால் அவரது பிள்ளைகள் உறவினர் வீட்டிற்கு சென்று அங்குள்ள தொலைக்காட்சி மூலம் ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தனர். ஆனால் உறவினர்கள் அடிக்கடி சேனலை மாற்றுவது தொடர்பாக கஸ்தூரியின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதில் சற்று பிரச்சனை உருவாகியது. இதனை அறிந்த கஸ்தூரி தனது தாலியை ரூ.20 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து ரூ.14 ஆயிரம் ரூபாய் மதிப்பில் லெட் (LED) தொலைக்காட்சியை வாங்கினார்.
இந்த விஷயத்தை நியூஸ் 18 (கன்னடம்) செய்தியாக வெளியிட வணிகத்துறை அமைச்சர் சி.சி. பாட்டீல் கஸ்தூரியின் தாலியை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதற்குள் கஸ்தூரி அடகு வைத்த கடையின் உரிமையாளர் நகையை ஒப்படைத்தார். பிள்ளைகளின் கல்விக்காக தாலியை அடகு வைத்து தொலைக்காட்சி வாங்கிய கஸ்தூரிக்கு நாடு முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.