சிபிஎம் வடசென்னை முகநூல் நேரலை பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
கொரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த நாட்டையும் வர லாறு காணாத அச்சுறுத்தலின் பிடியில் ஆழ்த்தியுள்ள நிலையில், நரேந்திர மோடி அரசு பொறுப்பின்மையின் உச்சத்தில் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார். கொரோனா ஊரடங்குக் காலத்தில் முகநூல் நேரலை உரை நிகழ்ச்சியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பல்வேறு மாவட்டக்குழுக்கள் தொட ர்ந்து நடத்தி வருகின்றன. இயக்கத் தலைவர்கள், தோழமை அமைப்புகளின் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தா ளர்கள், ஊடகவியலாளர்கள், களப்போராளிகள் இந்த நேரலை உரைகளில் பங்கேற்று வரு கிறார்கள். கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு முகநூல் நேரலை நிகழ்வுகளின் நூறாவது நாளை முன்னிட்டு ஞாயிறன்று (ஜூலை 12) நடைபெற்ற ‘முக நூல் பொதுக்கூட்டம்’ நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அவரது முழு உரை வருமாறு:
முகநூல் நேரலை உரை நிகழ்ச்சியைத் தொடர்ச்சி யாக 100 நாட்கள் நடத்தி வந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு தோழர் களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரி வித்துக்கொள்கிறேன். கட்சியின் தலைவர்களும், பேராசிரியர் சீனிவாசன், கல்வியாளர் தாவூத் மியாகான், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், திரைக்கலைஞர் ரோகிணி, இயக்குநர் கோபி நயினார் உள்ளிட்ட சிறந்த ஆளுமைகளும் கலைஞர்களும் இதில் பங்கேற்றிருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இன்றைய கெடுவாய்ப்பான சூழலில் மக்களோடு நம் தொடர்புகளைப் பராமரிக்க, நம் சிந்தனைகளையும் அரசியல் நிலைப்பாடுகளையும் மக்களிடையே கொண்டு செல்ல இப்படிப்பட்ட இணையத் தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தியாக வேண்டும். அதற்கான முயற்சியை மேற்கொண்ட வடசென்னைத் தோழர்களைப் பாராட்டுகிறேன்.
ஊரடங்கு தளர்வும் திட்டமிடாத ஒன்றே
பெருகிக்கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் உரியமுறை யில் திட்டமிடாமல் பிரதமராலும் மத்திய அர சாலும் நாடுதழுவிய ஊரடங்கு தான்தோன்றித்தன மாக அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த நான்கு கட்டங் களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இப்போது ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன – ஆனால், இதுவும் திட்டமிடப்படாத முறை யிலேயே நடைபெறுகிறது. இன்று மத்திய அரசு மக்களிடம், நீங்களே உங்களைக் தற்காத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறது. மக்களைக் காக்க அரசாங்கம் எதுவும் செய்யாது என்று கைகழுவு கிறது. பொறுப்பின்மையின் உச்சம் இது.
திட்டமிடாத நடவடிக்கைகள்தான் கடுமையான பாதிப்புகளுக்கு இட்டுச்சென்றன. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மகாபாரதத்தோடு ஒப்பிட்டு, அந்தப் போர் 18 நாட்கள் நடந்தது; இந்தப் போரில் 21 நாட்களில் வெற்றிபெறுவோம் என்றார் பிரதமர். ஆனால் நடந்தது என்ன? பெருந்தொற்று அதி கரித்துக்கொண்டே போகிறது. மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. புள்ளிவிவரங்களைக் கொடுத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை, ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நிலைமை மாறிக் கொண்டே இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் முகக் கவசம் அணிவதும் இடைவெளியைக் கடைப்பிடி ப்பதும் சமூக ஒருமைப்பாட்டோடு இருப்பதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மிகமுக்கியத் தேவைகளாகியுள்ளன.
மக்களைக் கைகழுவிய மோடி அரசு
அதேவேளையில் கொரோனா தொற்று தடுப்பு, சிகிச்சை நடவடிக்கைகளோடு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை களுக்கும் சமமான முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் மோடி அரசு அப்பட்டமாகத் தனது பொறுப்பைக் கைகழுவுவதைப் பார்க்கிறோம். சில நிதியுதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் பிரதமர் தடபுடலாக அறிவித்த இலவச உணவுப் பொருள் திட்டத்திலிருந்து 13 சதவீதம் மட்டுமே மக்களைச் சென்றடைகிறது என்று அரசு அமைப்பு களே தெரிவிக்கின்றன. வருமானவரி செலுத்தாத வருவாய் பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு மாதாமாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம். எதையுமே அரசு ஏற்கவில்லை.
ஆனால் பிரதமர் தன் பெயரிலேயே ஒரு தனியார் நிதியத்தை அறிவித்து வசூலிக்கிறார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வசூலாகி யிருக்கிறது. ஆனால் அதில் வெளிப்படைத்தன்மை இல்லை, அந்த நிதி கணக்குக்கு உட்பட்டதில்லை, தணிக்கைக்கும்உட்பட்டதில்லை. இந்தப் பணமெல்லாம் எங்கே போகிறது? ஊரடங்கு தொடங்கிய பிறகு 15 கோடி மக்கள் வேலையிழந்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் இரண்டு மாதங்களாக எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள், விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். இன்னும் என்னென்னவோ நடக்கிறது. அவர்களுக்கு உணவுப்பொருளும் பண உதவியும் வழங்கக் கோருகிறோம்.
மருத்துவமனைகளின் கதி
மருத்துவமனைகளில் இடவசதி இல்லை, போதுமான சுவாசக்கருவிகள் இல்லை, மருத்து வப் பணியாளர்களுக்கான பாதுகாப்புக் கருவிகள் இல்லை. மக்களுக்கு நிவாரணமளிக்கும் இப்படிப் பட்ட அடிப்படையான செயல்களைச் செய்ய மறுக்கிறார்கள், ஆனால் தங்களுடைய சொந்தச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள். நவீனதாராளமயக் கொள்கையை மிகத் தீவிரமாகச் செயல்படுத்துகிறார்கள். தேசத்தின் சொத்துகள் சூறையாடப்படுகின்றன. அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களும், சேவைத்துறைகளும் தனியார் மயமாக்கப்படுகின்றன. இந்த நடைமுறையில் தொழிற் சங்க உரிமைகளும் தொழிலாளர் உரிமைகளும் தாக்கப்படுகின்றன.
மக்களை பிளவுபடுத்தலும், ஒடுக்குதலும்
இரண்டாவதாக, மக்களை மதவாத அடிப்படை யில் பிளவுபடுத்துகிற வகுப்புவாத திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்துகிறார்கள். இந்துத்துவ வாக்கு வங்கியைக் கட்டுவதுதான் அதன் நோக்கம். அதற்காக, தற்போதைய பெருந்தொற்றுப் பேரிடரை எதிர்கொள்ள மக்களின் ஒற்றுமை மிகவும் தேவைப் படுகிற இந்த நேரத்தில் மக்கள் பிளவுபடுத்தப் படுகிறார்கள்.
மூன்றாவதாக, அரசுக்கு எதிரான விமர்சனங்கள் ஒடுக்கப்படுகின்றன. மக்களுக்காக, தலித் போன்ற விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக, பீமா கோரோகான் போன்ற பிரச்சனைகளுக்காக யார் குரலெழுப்பினாலும் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், அல்லது தேசப்பாதுகாப்புச் சட்டம் அல்லது தேசவிரோதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. தில்லி யில் அந்தப் போராட்டத்தையொட்டி கடுமை யாகத் தாக்கப்பட்டவர்கள் கைதுசெய்யப் பட்டிருக்கிறார்கள் ஆனால் அந்தத் தாக்கு தல்களை நடத்தியவர்கள் மீது எந்த நடவ டிக்கையும் இல்லை. வெறுப்பை வளர்ப்ப வர்கள், சிறுபான்மையினருக்கு எதிரான பகைமையைத் தூண்டுகிறவர்கள் சுதந்திர மாகச் சுற்றிவருகிறார்கள். இவ்வாறு ஜன நாயக உரிமைகள் மீதும், சுதந்திரத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்படுவது பாஜக செயல் திட்டத்தின் மூன்றாவது அம்சமாக இருக்கிறது.
சீர்குலைக்கப்படும் கூட்டாட்சி
நான்காவதாக, ஒற்றையதிகார மைய ஆட்சியை நோக்கி நகர்கிறார்கள். அதில் மத்திய-மாநில உறவுகள் சீர்குலைக்கப் படுகின்றன. அரசமைப்பு சாசனத்தின் அடிப்ப டைக் கூறாகிய கூட்டாட்சிமுறை சீர்குலைக் கப்படுகிறது. நாடாளுமன்றம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ என அரசமைப்பு சாசனப்பூர்வ அமைப்புகள் அனைத்தும் பலவீனப்படுத்தப்படுகின்றன. மத்திய மோடி அரசின் ஒற்றை ராகத்திற்கு ஏற்ப இசை வாசிக்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றன. இந்திய அரசமைப்பின் மதச்சார்பின்மை அடித்தளம் தகர்க்கப்படுகிறது. அதை அப்புறப்படுத்திவிட்டு, ஆர்எஸ்எஸ் வடிவ மைத்த பாசிசத் தன்மை கொண்ட இந்துத்துவ அரசமைப்பை நிறுவ முயல்கிறார்கள். அதை அடைய வேண்டுமானால் அரசமைப்பு சாசனத்தை அழித்தாக வேண்டும் என்று அதற்கான செயல்களில் தீவிரமாக ஈடுபட்டி ருக்கிறார்கள்.
ஏகாதிபத்தியத்தின் விசுவாசிகள்
ஐந்தாவதாக, பெருந்தொற்றுக் கால ஊரடங்கைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விசுவாசக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றுவதை மேலும் கெட்டிப்படுத்துகிறார்கள். அதற் காக, அண்டை நாடுகளுடனான உறவு சீர்குலைக்கப்படுகிறது. சீனாவுடனான பிரச்சனையில், இந்திய அரசின் நடவடிக்கை களை முழுமையாக ஆதரிக்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவு படுத்தியிருக்கிறது. அரசுறவு மட்டத்திலும், இருநாட்டுத் தலைமைகள் பங்கேற்கும் அரசியல் மட்டத்திலும், எல்லையில் பதற் றத்தைத் தணிக்க ராணுவமட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்று கட்சி கூறுகிறது. இன்று இதெல்லாம் நடந்துவருகிறது.
கம்யூனிஸ்ட்டுகள் மீது ஏவப்படும் அவதூறுகள்
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம் சமூக ஊடகங்கள் வழியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. சீனாவை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்கிறார்கள். பிரதமர் மோடி சீனாவைக் கண்டித்தாரா? இந்திய அரசு சீனாவைக் கண்டித்திருக்கிறதா? பிரச்சனைக்குத் தீர்வுகாண அரசு மேற்கொள்ளும் முயற்சி களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம், உண்மை நிலவரங்களைச் சொல்லுங்கள் என்று கேட்கி றோம். ஊடுருவல் நடக்கவில்லை என்றால் மோதல் ஏன் ஏற்பட்டது, இந்திய வீரர்கள் உயிரிழக்கும் நிலைமை ஏன் ஏற்பட்டது, ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கிடையே என்ன நடந்தது என்று மக்களிடம் சொல்லுங்கள் என்று கேட்கிறோம்.
எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. ஆனால் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம் நடக்கிறது. கம்யூ னிஸ்ட்டுகளுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதில் எந்த அளவுக்கும் போகத் தயா ராக இருக்கிறார்கள். ஆகவே நாம் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கி றது. நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வ ளவு திறனோடும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பது, நம்மைப் பாதுகாத்துக்கொள் வது, கொஞ்சமும் உறுத்தலின்றித் தாக்குத லுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் உரிமை களைப் பாதுகாப்பது, அரசமைப்பு சாசன அடிப்படையில் நாமறிந்த இந்தியாவைப் பாதுகாப்பது என்ற சவால்களை நாம் வென்றாக வேண்டும். இந்தியாவை சிறந்த தொரு நாடாக மாற்ற, சோசலிசத்தை நோக்கி முன்னேற இந்தச் சவால்களை நாம் வென்றாக வேண்டும்.
பாஜகவை அம்பலப்படுத்துவோம்
இந்தப் பெருந்தொற்றுப் போராட்டக் காலத்திலும் மாநில அரசுகளைக் கவிழ்ப்பது, அதற்காகக் குதிரை பேரங்களில் ஈடுபடுவது போன்ற பாஜகவின் செயல்களை மக்கள் கவனத்திற்குக் கொண்டுசென்று அம்பலப் படுத்துவோம். நாடாளுமன்ற மாநி லங்களவையில் போதுமான பலத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக இப்போது ராஜஸ்தான் அரசைக் கவிழ்ப்பதிலும், எம்எல ஏக்களை விலைகொடுத்து வாங்குவதிலும் இறங்கியிருப்பதை அம்பலப்படுத்துவோம். மக்கள் வாழ்க்கை பெருந்துயரத்தில் இருக்க மத்திய அரசும் ஆளுங்கட்சியும் தடை யின்றித் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டிருப்பது பற்றிச் யயளசொல்வோம். மக்களுடனான நம் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் வெற்றிகரமாக மேற்கொள்வோம்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார். அவரது ஆங்கில உரையைக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயி னார் தமிழாக்கம் செய்தார்.
முன்னதாக, முகநூல் நேரலையில், காலையில் புதுவை சப்தர் ஹாஷ்மி குழு வினரின் இசையரங்கம் நடைபெற்றது. ஊட கக்குழுவின் சார்பில் இரா.தெ.முத்து ஒருங்கி ணைத்தார். மாலை உரைநிகழ்ச்சி தொடங்குவ தற்கு முன் தடம்பதி குழுவினரின் பறை, சிலம் பாட்ட நிகழ்ச்சிப் பதிவுஒளிபரப்பப்பட்டது. நிறைவான, “மக்கள் ஜனநாயகம்” என்ற பாடல் பதிவு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கவிஞர் நவகவி எழுதி, முனு கோட்டீஸ்வரன் இசையமைப்பில் பிரபாகரன் பாட, தேன்மொழி வடிவமைப்பில் உருவான இந்த இயக்க அறி முகப்பாடலை ஊடகக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.கே. சண்முகம் வெளியிட்டார்.
கட்சியின் வடசென்னை மாவட்டச் செய லாளர் எல். சுந்தரராஜன் தலைமையில் நடை பெற்ற இந்த இணையத்தள நிகழ்வில் ஊட கக்குழு உறுப்பினர் ஆர். லோகநாதன் வர வேற்றார். பவானி சலாவுதீன் நன்றி கூறினார். கட்சியின் மாநிலக்குழு உட்பட பல்வேறு மாவட்டக்குழுக்களின் ஊடகப் பிரிவுகளும் யெச்சூரி உரையை நேரலையாக ஒளி பரப்பியது குறிப்பிடத்தக்கது.