புதுதில்லி:
இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறவில்லை; ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்பதுதான் பிரதமர் மோடி தொடர்ந்து செய்துவந்த பிரச்சாரம் ஆகும். இதுதொடர்பாக கேள்விகள் எழுந்தபோது கூட, சீனா அத்துமீறுவதற்கு ஒருபோதும் நமது வீரர்கள் அனுமதிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் விளக்கம் அளித்தார்.
ஆனால், இதற்கு நேர் எதிராக,சீன ஊடுருவல்களை ஒப்புக்கொள் ளும் ஆவணம் ஒன்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, பின்னர் இரண்டே நாட்களில் அவசர அவசரமாக நீக்கப்பட்டிருப்பது, தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அந்த ஆவணத்தில்: “இந்திய எல்லைப் பகுதியில் மே 5 முதலே சீனாவின் அத்துமீறல் அதிகமாக இருந்தது. குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஊடுருவல் அதிகளவில் இருந்தது. குங்ராங் நலா, கோக்ரா, பாங்கோங் த்ஸோ ஏரியின் வட கரை ஆகிய இடங்களில் மே 17 அன்று சீனா அத்துமீறியது.
அதன் தன்னிச்சையான அத்துமீறலால் கிழக்கு லடாக்கில் சூழ்நிலை மோசமடைந்தது; ஜூன் 6 அன்று ஒரு படைப்பிரிவின் தளபதிகளது கொடி கூட்டம் நடைபெற்றது. இருப்பினும், ஜூன் 15 அன்று இரு தரப்பினருக்கும் இடையே ஒரு வன்முறை சம்பவம் நேருக்கு நேர் நடந்தது. அதில் இரு தரப்பும் உயிரிழந்தனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ‘சீனாவின் அத்துமீறல்’ என்ற புதிய மெனுவையே இணையப்பக்கத்தில் உருவாக்கி. அதில் இந்தஆவணம் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதைத்தான் இரண்டே நாட்களில் மத்திய பாஜக அரசு நீக்கிவிட்டதாகவும், சீனா அத்துமீறவில்லை என்றுகூறிய பிரதமர் மோடியின் அப்பட்டமான பொய்யை, பாதுகாப்புத்துறை யின் ஆவணம், அம்பலப்படுத்தி விடுமோ? என்று பயந்து மோடி அரசு இதனை செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.