tamilnadu

தேன் கூட்டில் கல்வீசிய மோடி அரசு!

ஸ்ரீநகர், ஆக.13- காஷ்மீருக்கு பொருந்தும் 370வது பிரிவை மோடி அரசாங்கம் நீக்கி 8 நாட்களாகிவிட்டன. உலகின் மற்ற பாகங்களிலிருந்து காஷ்மீர் துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்குள்ளேயே கூட தகவல் தொடர்புக்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் அனைத்தும் வழக்கம் போலவே உள்ளன என மோடி அரசாங்கமும் காஷ்மீர் ஆளுநரும் கூறுகின்றனர். ஆனால் கள நிலைமை வேறு மாதிரியாக உள்ளது என்பதை ஸ்ரீநகர் செய்திகள் உறுதிப்படுத்து கின்றன.

மருத்துவ வசதிகள் முடக்கம்

நோயாளிகளும் உடல்நிலை பாதிக்கப் பட்டவர்களும் மருத்துவமனைகளுக்கு கூட வரமுடியவில்லை. மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு செல்ல இயலவில்லை. ஒரு இளம் பெண்ணுக்கு திடீரென பிரசவவலி; போக்குவரத்து இல்லாததால் சுமார் 20 கி,மீ. நடந்தே வந்துள்ளனர் அந்த இளம் பெண்ணும் அவரது கணவரும்! ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது. அதிர்ச்சியில் உறைந்து போன அவர்கள் தமது குழந்தையின் சடலத்துடன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். வீட்டிலோ உறவினர்கள் அனைவரும் தமது குடும்பத்தின் புதிய வரவை வரவேற்கத் தயாராக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தெரியாது குழந்தையின் இறப்பு; ஏனெனில் தொலைபேசிகள் இயங்கவில்லை.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மகன் மருந்துக் கடைகள் திறக்கப்படாததால் தில்லிக்கு விமானத்தில் வந்து மருந்துகளை வாங்கி செல்கிறார். “என்னிடம் சிறிது வசதி உள்ளது; அதனால் விமானத்தில் வந்தேன். ஆனால் வசதி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?” என கேட்கும் பொழுது எவர்தான் பதில் சொல்ல முடியும்?

பல காஷ்மீர் மாணவர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கின்றனர். கடந்த ஒரு வார காலமாக அவர்கள் தமது பெற்றோர் அல்லது சகோதர - சகோதரிகளிடம் பேச இயலவில்லை. காஷ்மீரில் உள்ள உறவினர்களும் குழுந்தை களிடம் பேச முடியவில்லை. பக்ரீத் பண்டிகை யின் பொழுது இவர்களின் தனிமையும் வாழ்த்துக்கள் கூட பரிமாற முடியவில்லையே எனும் சோகமும் சொல்லி மாளாது எனப் பதிவு செய்கின்றனர் சில இதழியலாளர்கள்.

ஊர் திரும்பும் வெளி மாநிலத் தொழிலாளர்கள்

இதற்கிடையே வெளி மாநிலங்களிலிருந்து பணியாற்ற வந்த சுமார் ஒரு லட்சம் பேர் நிலைமை சீக்கிரம் சீராகாது என்பதால் தமது ஊர்களுக்கு குடும்பத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அவர்களுக்கு போதுமான போக்குவரத்து இல்லை. தங்கவும் இடம் இல்லை. சாலைகளிலும் பூங்காக்களிலும் தங்கியுள்ளனர். இவர்களுக்கு காஷ்மீரி மக்கள்தான் உணவையும் ஏனைய உதவி களையும் வழங்கி வருகின்றனர். லட்சக் கணக்கான வெளி மாநிலத்தவர்கள் காஷ்மீரில்  பணியாற்றுகின்றனர் எனும் உண்மை, காஷ்மீரைப் பற்றிய சங்பரிவாரத்தின் கூற்றுகள் பொய் என்பதை தெளிவாக்குகிறது. 

பயங்கரவாதத்திற்கு பெருகும் ஆதரவு
காஷ்மீரின் பல பாகங்களில்  எதிர்ப்புக் கலகங்கள் நடந்துள்ளன. பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கல்வீச்சில் ஈடுபட்டதாக அல்ஜசீரா மற்றும் பி.பி.சி தொலைக் காட்சிகள் ஆதா ரங்களுடன் செய்திகளை வெளியிட்டுள்ளன.  கண்களை குருடாக்கும் பெல்லெட் குண்டு கள் இராணுவத்தால் மீண்டும் பயன்படுத்தப் படுகின்றன. பலர் தமது ஒரு கண்ணை இழந்துள்ளனர். ஒரு சிலர் இரு கண்களை யும் இழந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட வர்களை தி  வயர் மின் இதழ் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான சித்தார்த் வரத ராஜன் பேட்டி கண்டுள்ளார். இராணுவ தாக்குத லிலிருந்து தப்பிக்க ஒரு இளைஞன் ஆற்றில் குதித்து உயிரிழந்ததாகவும்  செய்திகள் கூறுகின்றன.

காவல் துறையினரும் கடும் அதிருப்தி  
காஷ்மீர் காவல் துறையினரிடமிருந்து அனைத்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இது அவர்களிடையே கோபத்தை உருவாக்கியுள்ளது. இவ்வளவு நாட்கள் தமது உயிரை பணயம்  வைத்து இராணுவத்துக்கு உதவியதாகவும் இப்பொழுது தாம் அவ மானப்படுத்தப்படுவதாகவும் இவர்கள் கருதுகின்றனர். இனி கல்வீச்சு சம்பவங்களையோ அல்லது ஆர்ப்பாட்டங் களையோ நாங்கள் தடுக்கப்  போவது இல்லை எனவும் இவர்கள் கூறியதாக அல்ஜசீரா தொலைக்காட்சி கூறுகிறது.இது உண்மை எனில் இந்திய இராணுவம் மிக முக்கிய நேச  சக்தியை இழந்துவிட்டது எனப் பொருள். மேலும் பயங்கரவாதம் பற்றிய எந்த உளவுத் தகவலும் வராது என்பதும் பொருள் ஆகும். இவை எல்லாம் காஷ்மீர் கோபத்தில் கொந்தளிக்கிறது எனும் செய்தியைத்தான் வலுவாகக் கூறுகின்றன. 

காஷ்மீர் மக்கள் 370வது பிரிவின் பல  அம்சங்கள் ஏற்கனவே நீர்த்துப் போய்விட்டன என்பதை தெரிந்தே வைத்துள்ளனர். எனினும் இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் பால மாக இருந்தது 370வது பிரிவு மட்டும்தான். ஆனால் இந்த தொடர்பு இப்பொழுது துண்டிக்கப் பட்டுவிட்டதால் இளம் தலைமுறையினர் மேலும் மேலும் பயங்கரவாதம் பக்கம் சாயும் ஆபத்து பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மூத்தவர்கள் கவலை கொள்கின்றனர். ஒரு பேக்கரி கடையை அதன் உரிமை யாளர்களான மூன்று சகோதரர்கள் திறந்து  ரொட்டிகளை தயார் செய்து கொண்டிருந் தனர். அப்பொழுது அங்கு வந்த இராணு வத்தினர் கடையை மூடும் படியும் காஷ்மீரி களுக்கு ரொட்டி தராதீர்கள்; விஷத்தைக் கொடுங்கள் எனவும் கூறி தாக்கியதாக ‘தி வயர்’ இத ழுக்கு தரும் ஒரு பேட்டியில் கூறுகின்றனர்.

பெல்லட் குண்டுகளினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பேட்டி அளிக்கும் பொழுது, “நாங்களும் ஆயுதங்களை ஏந்துவதைத் தவிர  வேறு வழி  இல்லை” எனக் கூறுகின்றனர். பயங்கரவாதம் பக்கம் சாயும் இளைஞர்களை தடுக்கும் வாதங்களோ அல்லது தார்மீக தைரி யமோ தங்களிடம் இல்லை; 370வது பிரிவு நீக்கம் அந்த தைரியத்தை அழித்துவிட்டது என பலரும் கூறுவது கவலை தருவதாக உள்ளது. ஒரு புறம் பயங்கரவாதம்தான் சரி என எண்ணும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னொரு புறம் அவர்களை தடுக்கும் மன ஆற்றலை நடுநிலையாளர்கள் இழந்து வருகின்றனர்.  இது மிகவும் ஆபத்தான மற்றும் கவலை தரும் அம்சம் ஆகும்.
 

முதலீடுகள் வர எது முன் தேவை?

370வது பிரிவை நீக்குவதால் காஷ்மீரில் முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் பெருகும் என மோடி கூறியுள்ளாரே என வயர் இதழ் ஆசிரியர் கேட்கிறார். அதற்கு ஒரு காஷ்மீரி பதில் அளித்தது மிகவும் சிந்திக்கத்தக்கது ஆகும்: “நாங்கள் வெளி மாநிலத்தவரின் முதலீடுகளுக்கு எதிர்ப்பாளர்கள் இல்லை; இப்பொழுதும் கூட முதலீடு செய்யலாம்; யாரும்  தடுக்கவில்லை. ஆனால் ஏன் முதலீடு வரவில்லை? இங்கு அமைதி இல்லை. எனவே முதலீட்டாளர்கள் வர அஞ்சுகின்றனர். ஏன் அமைதி இல்லை? காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. எனவே அமைதி இல்லை. எனவே முதலீடு வருவதற்கு முதலில் அமைதி உருவாக்க வேண்டும். மத்திய அரசாங்கம் அதை செய்வது போல தோன்றவில்லை” என்கிறார்.

காஷ்மீர் பிரச்சனை குறித்து விமர்சனம் செய்த ராகுல் காந்திக்கு ஒரு விமானம் அனுப்பி வைப்பதாகவும் வந்து நிலைமையை நேரில் பார்த்து கொள்ளலாம் எனவும் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார். ஆனால் இதே ஆளுநர்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியையும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் து.ராஜாவையும் விமான நிலையத்திலேயே தடுத்தார் என்பதும் உண்மை. காஷ்மீர் நிலைமை அசாதாரணமாக இல்லை எனில் ஏன் இந்த தலைவர்கள் தடுக்கப்பட வேண்டும்? ஏன் இன்னும் தகவல் தொடர்புகளும் பத்திரிக்கைகளும் முடக்கப்பட வேண்டும்? ஏன் பக்ரீத் பண்டிகைக்கு மிகப்பெரிய ஜாமியா மசூதி மறுக்கப்பட வேண்டும்?

அ.அன்வர் உசேன்
விவரங்கள்: தி வயர்/  பி.பி.சி/ அல் ஜசீரா/ கார்டியன்