புதுதில்லி:
நரேந்திர மோடி அரசு தனது முதல் 100 நாட்களில் வாராக் கடன் மீட்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் மோடி அரசுக்கு பல்வேறு சவால்கள் காத்துக்கொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரி வித்துள்ளனர். நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார வல்லுநருமான அரவிந்த் பனகாரியா, சி.என்.பி.சி. டிவி 18 ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணலில் வாராக் கடன் பிரச்சனையைத் தீர்க்கும் மிகப் பெரிய பொறுப்பு மோடிக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், “கார்பரேட் வரியை 25 சதவிகித மாகக் குறைத்து மோடி அரசு தனது ‘சீர்திருத்தப்’ பணியைத் தொடங்க வேண்டும். ஏர் இந்தியாவைத் தனியார் மயமாக்குவது உள்ளிட்ட பங்கு விற்பனைப் பணிகளை அரசு மீண்டும் கையிலெடுக்க வேண்டும். அமெரிக்கா - சீனா இடையே யான வர்த்தகப் போரால் ஏற்படும் வர்த்தக வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல, இந்தியாவின் தொழிலாளர் சக்தி அதிகம் நிறைந்த துறைகளில் அதிகக் கவனம் செலுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். வாராக் கடன் பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதில் அதிக முக்கியத்துவம் செலுத்த
வேண்டும்” என்று கூறியுள்ளார்.