புதுதில்லி:
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் தளபதிகள் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அஹிம்சை முறையில் பிரிட்டிசாரிடமிருந்து விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தி, சுதந்திர இந்தியாவில் 1948 ஆம் ஆண்டில் நாதுராம் கோட்சே என்ற வெறியனால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். மகாத்மா காந்தியின் நினைவு தினம் ஜனவரி 30 வியாழனன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி,பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
சென்னையில் தமிழக அரசு தீண்டாமை ஒழிப்பு உறுதியேற்பு
மகாத்மா காந்தி நினைவுதினத்தை யொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசுஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ,தெரியாமலோ சமூக வேற்றுமையை கடைபிடிக்க மாட்டேன் என்றும், சமய வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது என் கடமை என்றும் முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சர்வோதய சங்கத்தை சேர்ந்த மூதாட்டி சுப்புலட்சுமி மெரினாவில் காந்தி சிலை அமைந்ததற்கான வரலாற்று தகவல்களை வழங்க, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியை ஒட்டி காந்தி சிலைக்கு தறியால் நெய்யப்பட்ட கதர் நூல் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.