திருவனந்தபுரம்:
கோவிட் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை கடக்க தொழில்துறைக்கு ரூ.3434 கோடிக்கான ‘வியுவசாய பத்றத’ உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது கேரள அரசு. குறு- சிறு- நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில்களின் மறுசீரமைப்புக்கான சிறப்பு தொகுப்பு அதிவிரைவாக அமல்படுத்தப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை மூலமாக இத்தொகுப்பு அமலாகும். தற்போது செயல்பட்டுவரும் குறு- சிறு, நடுத்தர தொழில்களுக்கு வழங்கும் கூடுதல் கடன்களுக்கு விளிம்புத் தொகை உதவியும் வட்டி தளர்வும் அனுமதிக்கப்படும். இந்த திட்டத்திற்கு மே 13 இல் நடந்த கேரள அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது. கோவிட் பின்னணியில் பாதுகாப்புமிக்க முதலீட்டுக்கான இடமாக கேரளம் மாறியுள்ளது.
மாநில அரசின் உதவி
‘கேஎஸ்ஐடிசியும்’, ‘கின்ப்ற’ யும் கடன் பாக்கிகளுக்கு ஒருமுறை தீர்வை அமல்படுத்தும்.
தொழில்முனைவோருக்கு கடனுக்கான வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
தொழில்துறையின் கீழ் உள்ள தொழில் கூடங்களுக்கு 3 மாத வாடகை தள்ளுபடி செய்யப்படும்.
தொழில் பூங்காக்களில் அடிப்படை வசதிகளுக்கான கட்டணம் 3 மாதங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும்.
குறு- சிறு- நடுத்தர தொழில்களின் மூலதனத்திற்கு சிறப்புக் கடன்.
கேஎஸ்ஐடிசியின் கடன் கிடைத்துள்ள தொழில்களுக்கு நடைமுறை மூலதன த்திற்கும் சொத்து பராமரிப்புக்கும் சிறப்புக் கடன்.
கேஎஸ்ஐடிசியின் அனைத்து இயக்க பிரிவுகளிலும் வட்டியுடன் கடன் திருப்பிச் செலுத்த மூன்று மாத மாரட்டோரியம். அதன் பிறகு, கடனை அபராதம் இல்லாமல் திருப்பிச் செலுத்த முடியும்
கேஎஸ்ஐடிசியில் இருந்து கடன் பெற்ற தொழில்முனைவோரின் அபராத வட்டி 6 மாதங்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
எம்எஸ்எம்இ- க்களுக்கு கேஎஸ்ஐடிசி ரூ.50 லட்சத்துக்கு மேல் உள்ள கடன். தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ள கடன் மானியமே அனுமதிக்கப்படும்.
கேஎஸ்ஐடிசி மற்றும் கின்ப்றாவின் தொழில் பூங்காக்களில் நிலம் வாங்கும் தொழில் முனைவோரின் பணம் செலுத்தும் காலாவதி அதிகரிக்கப்படும். நிலுவையில் உள்ள குத்தகை பிரிமியம் குறைக்கப்படும்.
பெண்களுக்கும் பட்டியலின- பட்டியல் சாதியினருக்கும் இளம் தொழில் முனை வோருக்கும் சிறப்பு கவனம் செலுத்தி தொழில் முனைவோர் உதவித் திட்டம் செயல்படுத்தப் படும். அவர்களுக்கு 25 சதவிகிதம் விளிம்பு பணம் வழங்கப்படும்.
மத்திய அரசின் அறிவிப்புகள்
புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலையை “ நாடு முழுமைக்குமான வருத்தமாக” கூறி,நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ‘ஆத்மநிர்பர் பாரத்’ தொகுப்பின் இரண்டாம் கட்ட அறிவிப்பில் வெறும் பெயரளவிலான இலவச திட்டங்கள் மட்டுமே உள்ளன. இரண்டு மாத இலவச ரேசன் தவிர புலம் பெயர் தொழிலாளர்களுக்கான நிவாரணத்திட்டம் இல்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ரேசன் எவ்வாறு இலவசமாக வழங்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. புலம் பெயர் தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கைகூட மத்திய அரசிடம் இல்லை. எட்டு கோடி பேர் உள்ளனர் என்று அமைச்சர் கூறினார். தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும், அதை கடைப்பிடிக்கப் போவதாகவும் அமைச்சர் கூறினார்.
இரண்டாவது கட்டத்தில், அறிவிக்கப் பட்டதில் மத்திய அரசின் நேரடி செலவு ரூ .10,000 கோடிக்கும் குறைவு. மீதமுள்ளவை வங்கி மூலம் கடன் வாங்குவது, வட்டி செலுத்துதல் அல்லது தற்போது அமலில் உள்ள திட்டங்களை மீண்டும் செய்வது மட்டுமே.
2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை மூலம் குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் கோடிக்கான கடன்.
உணவு பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர் களாக இல்லாத அனைத்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் ஐந்து கிலோ உணவு தானியங்கள் மற்றும் ஒரு கிலோ கடலையும் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.
இதற்கான ரூ.3,500 கோடி செலவை மத்திய அரசு ஏற்கும். தகுதியானவர்களை அடையாளம் கண்டு உணவு விநியோகிக்க வேண்டியது மாநிலங்களின் பொறுப்பு.
ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை ஏற்பாடு 2021 மார்ச்சில் முழுமையாக அமலாகும்.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் நகர்ப்புற ஏழைகளுக்கும் குறைந்த வாடகையில் வசிப்பிடம் வழங்கப்படும்.
ரூ.50,000 வரை முத்ராசிசு கடன் வாங்கியவர் களுக்கு 12 மாதங்களுக்கு 2 சதவிகிதம் வட்டி குறைக்கப்படும். இதன் மூலம் ரூ.1500 கோடி நிவாரணம் கிடைக்கும்.
50 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரையிலான கடன்.
நடுத்தர வர்க்கத்தின் திட்டம் (ஆண்டுக்கு வருவாய் ரூ.6 முதல் 18 லட்சம்) வீட்டுக் கடன்களுக்கான மானியத் திட்டம். இதன் மூலம் ரூ .70,000 கோடி முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டரை கோடி மக்கள் பயனடைவார்கள்.
பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க ரூ.6,000 கோடிக்கான திட்டம்.
விவசாயிகளுக்கு நபார்டு மூலம் ரூ.30,000 கோடி கடன்.
3 கோடி விவசாயிகள் எடுத்துள்ள ரூ.4.22 லட்சம் கோடிக்கான கடன்களில் திருப்பிச் செலுத்தலுக்கு 3 மாத கால அவகாசம். முழுமையாக திருப்பிச் செலுத்துவோருக்கு வழங்கப்பட்ட வட்டி குறைப்பு சலுகை மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேளாண் விளை பொருட்களை சேகரிக்க மாநில அரசுகளின் துறைகளுக்கு 2020 மார்ச்முதல் ரூ.6700 கோடி நடைமுறை மூலதனம்.
கோவிட் கொள்ளை நோய் காலத்தின் போதுமக்களை அரவணைப்பதில் உள்ள இரு வேறு பார்வையாகும் இது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கி அரவணைத்துள்ளது கேரள அரசு. மத்திய நிதி அமைச்சர் அறிவித்த திட்டங்களில் கடன்கள் மட்டுமே உள்ளன. இதில் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் கோடிக்கான வாக்குறுதிகளில் மத்திய அரசு செலவிடுவது ரூ.40,000 கோடிக்கும் குறைவாகும். புலம் பெயர் தொழிலாளர் களுக்குகூட நேரடி உதவி இல்லை. வேலை உறுதிதிட்ட நிலுவை வழங்கப்படவில்லை. விவசாயக் கடன்களுக்கு மாரட்டோரியம் இல்லை. வட்டி தளர்வு இல்லை. அதேநேரத்தில் கேரளம் அறிவித்த விவசாய பத்றதா திட்டத்தில் வாடகை கைவிடப்பட்டது, கடன்களுக்கு மாரட்டோரியம் அளிக்கப்பட்டுள்ளது உட்பட நேரடி உதவிகள் கிடைக்கும்.