புதுதில்லி:
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்து, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஓய்வுபெறவுள்ள தலைமை நீதிபதி, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்வது வழக்கமாக உள்ளது. அதன்படியே தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயும், எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்துள்ளார். இதன்காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே, நவம்பர் 18-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரத் அரவிந்த் பாப்டே என்பதுதான் எஸ்.ஏ. பாப்டேவின் முழுப் பெயர் ஆகும். நாக்பூரைச் சேர்ந்த பாரம்பரியமான வழக்கறிஞர்கள் குடும்பத்தில் 1956-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி பாப்டே பிறந்தார். அவரது தாத்தா, அப்பா, மூத்த சகோதரர் உட்பட அனைவருமே புகழ்பெற்ற வழக்கறிஞர்கள். சட்டப்படிப்பை முடித்து, 1978 செப்டம்பர் 13-இல் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்ட பாப்டே, 1998-இல் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை பெற்றார். 2000-ஆவது ஆண்டில் மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பாப்டே, 2012-இல் மத்தியப்பிரதேச தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஒரே ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் உயர்ந்தார்.இவ்வாறு நீண்ட சட்ட அனுபவம் கொண்ட எஸ்.ஏ. பாப்டே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “எனது ஒரே கொள்கை மற்றும் குறிக்கோளானது, நீதி என்ற ஒரே வார்த்தைக்குள்தான் அடங்கியிருக்கிறது. அதாவது, அனைத்துத் தரப்பினருக்கும் நீதி என்பதே நான் கூற வருவதாகும்” என்று தெரிவித்துள்ளார். “நீதிமன்றம் இருப்பது நீதிக்கு- நீதிக்காக மட்டுமே ஆகும். வேறெதற்கும் இல்லை. எனது கொள்கையும் இதுவே ஆகும்.” என்றும் பாப்டே குறிப்பிட்டுள்ளார்.