மத்தியத் தொழிற்சங்கங்களின் வெகுஜன சிறப்பு மாநாடு அறைகூவல்
புதுதில்லி, செப். 30- வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அனைத்து சங்கங்களும் இணைந்து கூட்டு சிறப்பு மாநாடுகள் நடத்துவது எனவும், டிசம்பர் மாதத்தில் விரிவான அளவில் பிரச்சாரங்களை எடுத்துச் செல்வது எனவும், 2020 ஜனவரி 8 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும் திங்கள் கிழமை புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வெகுஜன சிறப்புமாநாடு அறைகூவல் விடுத்திருக்கிறது. அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களின் தேசிய மேடை சார்பில் திங்கள்கிழமை தில்லி, நாடாளுமன்ற வீதியில், நாடு தழுவிய மக்கள் சிறப்பு மாநாடு நடைபெற்றது.
இச்சிறப்பு மாநாட்டில் சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனங் களும், வங்கி, இன்சூரன்ஸ், டெலிகாம், ரயில்வே, பாதுகாப்பு, மின்சாரம், நிலக்கரி, உருக்கு, எரிசக்தி, பெட்ரோலியம் சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, நீர்ப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத்துறை முதலானவற்றில் இயங்கிடும் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.
சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென், ஏஐடியுசி பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர், தொமுச தலைவர் சண்முகம் எம்.பி., மற்றும் அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பிலும் தலைவர்கள் உரையாற்றினார்கள். 2020 ஜனவரி 8 அன்று மாபெரும் அகில இந்திய வேலைநிறுத்தம் வெற்றி பெறவும், நம் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க அரசாங்கம் தவறுமானால் அதனைத் தொடர்ந்து விடப்படும் அறை கூவல்களை வெற்றிகரமாக எடுத்துச் சென்றிட வும் அனைத்துத் தொழிலாளர்களும் சங்க வேறுபாடின்றி ஒன்றுபட்டு நின்று போராட முன்வர வேண்டும் என்றும் இவ்வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு நாட்டு மக்கள் தங்கள் ஆதரவினை அளித்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்து, பிரகடனம் நிறை வேற்றியது.