tamilnadu

img

ஜாமியா துணைவேந்தரை பதவிநீக்க வேண்டுமாம்... முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் ஜனாதிபதிக்கு கடிதம்

புதுதில்லி:
ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் நஜ்மா அக்தரை, பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று 2018-ஆம் ஆண்டு துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்த ராமகிருஷ்ணா ராமசாமி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தில்லி காவல்துறை, கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது. மாணவர்களை விரட்டி விரட்டி, மிகக் கொடூரமாகத் தாக்கியதுடன், பல்கலைக்கழக நூலகத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடியது. சங்-பரிவாரத்தைச் சேர்ந்தவர்களும் இந்த தாக்குதலில் காவல்துறையினருடன் கைகோர்த்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அப்போது, மிகவும் துணிச்சலாக நடந்து கொண்டவர் துணைவேந்தர் நஜ்மா அக்தர் ஆவார். தாக்குதலுக்கு மறுநாள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய அவர், காவல்துறை அராஜகத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். அத்துடன் போராடும் மாணவர்கள் பக்கம், தான் இருப்பதாக நம்பிக்கையூட்டினார்.இந்தப் பின்னணியிலேயே நஜ்மா அக்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென, பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த ராமகிருஷ்ண ராமசாமி, குடியரசுத் தலைவரும், பல்கலைக்கழக வேந்தருமான ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார். நஜ்மாவின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை; அவரின் நியமனத்திற்கு ஏற்கெனவே மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (Central Vigilance Commission) ஒப்புதல் அளிக்கவில்லை; துணைவேந்தர் பதவியின் கவுரவத்திற்கு நஜ்மாவால் இழுக்கு ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் கடிதத்தில் கூறியுள்ளார்.