புதுதில்லி:
ஊரடங்கு காலத்தில், கடன் தவணை செலுத்த மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அதற்கு வட்டி போடுவது கவலையளிக்கிறது, இது தவறானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து கடனை திருப்பிச் செலுத்துவதில் மூன்று மாத கால அவகாசம், கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம் வழங்க ரிசர்வ் வங்கி வங்கிகளை கேட்டுக்கொண்டது. இது மே மாதத்தில் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தாவிடம் விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
கடன் தவணை விவகாரத்தில், மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வட்டி, பின்னர் செலுத்த வேண்டிய கட்டணத்தில் சேர்க்கப்படுமா? அல்லது வட்டிக்கு வட்டி செலுத்தப்படுமா? என நாங்கள் கவலைப்படுகிறோம். ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி விதிப்பது கவலையளிக்கிறது. வட்டிக்கு வட்டி போடுவது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்திவிடாதா?இதனால், அடுத்த மூன்று நாட்களுக்குள் மூன்று மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைக்கு வங்கிகள் வட்டி வசூலிக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். இது குறித்த விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆய்வு செய்ய இந்த வார இறுதியில் நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.எஸ்பிஐ வங்கியின் ஆலோசகரும், மூத்த வழக்கறிஞருமான முகுல் ரோஹத்கி, “ஆறு மாத ஈ.எம்.ஐ தடைக்காலத்திற்கு வட்டி தள்ளுபடி செய்ய முடியாது என்று அனைத்து வங்கிகளும் கருதுகின்றன” என்றார்.தடைக்காலத்தின் போது ஈ.எம்.ஐ.களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீத இழப்புக்கு வழிவகுக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்து குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வழக்கை ஜூன் 17-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.