கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் இந்தியா உள்ளது என நிதிஆயோக் துணை தலைவர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
மோடி ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக்கமிஷனை கலைத்து விட்டு நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆட்சியில் பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி போன்ற திட்டங்களை அதிரடியாக நிறைவேற்றியது. இதன்மூலம் கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று பாஜக கூறியது. மேலும் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கவே மோடி வெளிநாடு செல்கிறார் என்று பாஜகவினர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் மோடி அரசின் இந்த தவறான பொருளாதார நடவடிக்கை இன்று நாடு முழுவதும் கடும் பொருளாதார தேக்க நிலையை உருவாக்கி உள்ளது என சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
ஆனால் பாஜக அரசு இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவந்த நிலையில், இந்தியாவில் கடந்த 70 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு நிதித்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியதாவது:-
கடந்த 70 ஆண்டுகளில் (நாங்கள்) இந்த வகையான பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை. முழு நிதித்துறையும் சிக்கலில் உள்ளது. தனியார் துறையின் சில அச்சங்களை அகற்ற மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.
பிரச்சினை நிதித்துறையில் உள்ளது என்பதை அரசாங்கம் முற்றிலும் அங்கீகரிக்கிறது. பணப்புழக்கம் நொடித்துப் போகிறது. எனவே நீங்கள் அதை சரி செய்ய வேண்டும்,
யாரும் யாரையும் நம்பவில்லை. இது அரசாங்க துறையில் மட்டுமல்ல, தனியார் துறைக்குள்ளும், வேறு யாருக்கும் கடன் கொடுக்க விரும்பவில்லை.
இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, நீங்கள் சாதாரணமாக இல்லாத நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். இரண்டாவதாக, தனியார் துறையினருக்கான சில அச்சங்களை அகற்ற அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி-மார்ச் காலத்தில் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது.
குறைந்த நுகர்வு, பலவீனமான முதலீடுகள் மற்றும் குறைவான செயல்திறன் கொண்ட சேவைத்துறை காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மேலும் 5.7 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது.