புதுதில்லி:
நாடு முழுவதுமுள்ள 25 மருத்துவக் கல்லூரிகளில், நடப்புக் கல்வியாண்டில் (2019-20) கூடுதலாக, 2 ஆயிரத்து 750 மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகள் மூலமாக இந்த இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 10 தனியார் மருத்துவக் கல்லூரிகள் வாயிலாகவும் 1500 இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
ஆனால், அதிகரிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 750 மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப, கூடுதல் பேராசிரியர்களை நியமிப்பதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட 35 மருத்துவக் கல்லூரிகளுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், 600 பேராசிரியர்களும், 1000 உதவிப் பேராசிரியர்களும் மட்டுமே இருக்கின்றனர்.
2018-ஆம் ஆண்டில், 18 அரசுக் கல்லூரிகள் மற்றும் 5 தனியார் கல்லூரிகளுக்கும் சேர்த்து, பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என குறைந்தபட்சம் 2 ஆயிரம் பேர் தேவைப்பட்டனர். இதேபோல 2017-ஆம் ஆண்டு 1100 ஆசிரியர்களே இருந்தனர். மருத்துவப் படிப்புக்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நீண்டகாலமாக உள்ளது. தற்போது அந்த பற்றாக்குறையின் எண்ணிக்கைதான் பலமடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு பேராசிரியர்களை நியமிக்காமல், மாணவர் சேர்க்கையை மட்டும் அதிகரிப்பது, தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்; மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும் என்று மத்திய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சுஜாதா ராவ் தெரிவித்துள்ளார். இதையே கல்வியாளர்கள் அனைவரும் கூறுகின்றனர். மாணவர்களும், ஆசிரியர்களை நியமிக்காமல், மாணவர் சேர்க்கையை மட்டும் அதிகரிப்பதால் என்ன பயன்? என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர்.