tamilnadu

பிரசாந்த்பூஷன் மீதான தீர்ப்புரையில்.... ... 1ஆம் பக்கத்தொடர்ச்சி

இப்போது பிரசாந்த் பூஷன் மீதான வழக்கில்தீர்ப்பில் உச்சநீதிமன்றம், “இந்திய ஜனநாயக வரலாற்றில், அவசரநிலைக் காலம் கறுப்புக் காலமாகக் கருதப்பட்டிருக்கிறது என்பது பொதுவான அறிவு,”  என்று கூறியிருக்கிறது. ஆனால், ஏடிஎம் ஜபல்பூர் வழக்கில் உச்சநீதிமன்றம் அப்படி எதுவும் கூறவில்லை. உச்சநீதிமன்றம் தன்னுடைய பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு மூலமாக, ஜனநாயகத்தை முழுமையாக மீறிய ஆட்சியாளர்களைப் பாதுகாத்தது. பேச்சுரிமை உட்பட உயிர்வாழும் உரிமை மற்றும் தனிநபர் உரிமை தொடர்பாகஆட்சியாளர்கள் பிறப்பித்த அவசரநிலைப் பிரகடனத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. ஏடிஎம் ஜபல்பூர் வழக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தின் ‘அந்தரங்க தீர்ப்பில்’(‘privacy judgment’-இல்)தான் மாற்றி அமைக்கப்பட்டு, சரி செய்யப்பட்டது. இதற்கு சுமார் 40 ஆண்டு காலம் ஆயிற்று. 2015ஆம் ஆண்டில்தான் இத்தீர்ப்பு வெளிவந்தது. ஆகவே, ஜனநாயகமும் அரசியலும்  உன்னிப்பாக நுணுகி ஆராய்வதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும், ஜனநாயகத்தில் நீதித்துறைக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இருக்கும் பங்கினை ஆய்வுசெய்யாமல் இருக்க முடியாது என்பதையும் அரசமைப்புச்சட்டத்தைக் கற்கும் மாணவர் எவரும் அவசியம் அறியாமல் இருக்கமாட்டார்கள்.  இறுதியில், ஓர் அரசியல் கருத்து உச்சநீதிமன்றத்தின் பங்களிப்பினையோ அல்லது தலைமை நீதிபதி அல்லது நீதிபதிகளின் பங்களிப்புகள் குறித்தோ தடை செய்திட முடியாது.இப்போதுள்ள நீதிபதிகள் எப்படி, ‘அவசரநிலைப் பிரகடனக் காலத்தை கறுப்பு காலம் என்று கருதப்பட்டதாக பொதுவான அறிவு இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்களோ, அதேபோல பிரசாந்த் பூஷன் அவர்களின் டிவிட்டர் பதிவையும் அவரின் ஒரு கருத்தாக மட்டுமேஇருக்கும் என்று குறிப்பிட்டுவிட்டு,  “வருங்காலத்தில் வரலாற்றாசிரியர்கள் கடந்த ஆறு ஆண்டு காலத்தில் இந்தியாவில் ஒரு முறையான அவசரநிலைப் பிரகடனம் செய்யாமலேயே, எப்படியெல்லாம் ஜனநாயகம் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதையும்,  குறிப்பாக இவ்வாறு அழிக்கப்படுவதில் உச்சநீதிமன்றத்தின் பங்கினையும், அதிலும் மிகவும் முக்கியமாக சமீபத்தில் இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பங்களிப்புகளையும் குறிப்பிடாமல் இருக்கமாட்டார்கள்” என்று கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், தங்களுடைய ‘நீதிமன்ற அவமதிப்பு’ தீர்ப்புரையில், “டிவிட்டரில் பதிவு செய்யப்பட்டிருப்பதில் முதல் பகுதி, இந்த நீதிமன்றத்துடன் சம்பந்தப்படாததால், அது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை,” என்று கூறியிருக்கிறார்கள்.  அவர்கள் மேலும்,“டிவிட்டரின் முதல் பகுதியின் உண்மைத்தன்மை அல்லது வேறெது குறித்தும் அதற்குள் நாங்கள்போகவிரும்பவில்லை. ஏனெனில் இந்த நடவடிக்கையை ஓர் அரசியல் விவாத மேடையாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை,” என்றும் கூறியிருக்கிறார்கள்.

எனவே, அவர்களும் இறுதியாக, இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் அவசரநிலைப் பிரகடனம் என்று முறையாக அறிவிக்கப்படாமலேயே ஜனநாயகம் அழிக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஆராய்வது ஓர் அரசியல் கேள்வி என்றும், அரசமைப்புச் சட்டத்தின் 19(1) ஆவது பிரிவின்கீழ் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையால் அரசியல் கருத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்துஆராய்வதற்குள் நாங்கள் போகவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்மூலம் நீதிபதிகளும் நீதித்துறையும் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீதிமன்றத்தின் கண்ணியம் காக்க வழி
நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், ‘எஸ்.முல்காவோகர்’ (In re. S.Mulgaoker) வழக்கில்,“நீதிமன்றம், கம்பீரமான தாராளமயம், அற்பமான சில்லரையான மன்னிக்கத்தக்கக் குற்றங்கள் முதலானவற்றை உதாசீனம் செய்திடத் தயாராக இருக்க வேண்டும்,” என்று தீர்ப்பு அளித்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக, பிரசாந்த் பூஷனால் அளிக்கப்பட்ட வருத்தம், தெளிவுபடுத்தல் என்ற முறையில், அதாவதுஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்ந்திருக்கும் மோட்டார் சைக்கிள் நின்றுகொண்டிருக்கிறது என்பதைத் தான் சரியாகக் கவனிக்கவில்லை என்றும், அது முறையாக நகர்ந்துகொண்டிருக்கவில்லை என்பதையும் தான் சரியாகக் கவனிக்கவில்லை என்றும், கூறியிருப்பதை நீதிபதிகள் முறையான உணர்வுடன் எடுத்துக்கொள்ளாமல், அவருடைய டிவிட்டர் பதிவு குறித்து நீதிமன்ற அவமதிப்புக்காக குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் கவுரவத்தையும் நிலைநிறுத்துவதற்குச் சிறந்தவழி, தீர்வு காண்பதற்கான பிரச்சனைகள் தொடர்பாக, பொது மக்களிடமிருந்து அச்சமின்றி வரும் கருத்துக்களுக்கு செவிமடுப்பதாகும். ஒரு நீதிபதியின் தரம், கட்டுப்பாடு, கண்ணியம் மற்றும் நல்லொழுக்கம் அவர் ஆற்றும் நீதித்துறை நடவடிக்கைகளின் மூலமும், அவர் பங்கேற்றிருக்கும் அமர்வாயத்தில் நேர்மையுடன் அளித்திடும் தீர்ப்பின் அடிப்படையில்தான் வரும். உச்சநீதிமன்றம், தங்கள் குறித்து வரும்விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு,  நீதிமன்றங்களின் கண்ணியத்தையும், நீதிபதிகளின் கம்பீரத்தையும் தங்கள் விரிந்த தோள்களில் உயர்த்திப்பிடித்திட முடியும்.  நீதிமன்ற அவமதிப்பு என்பது தொடர்பான சட்டத்தின் பாதை, இதற்குமுன் ஏராளமான தீர்ப்புகளில் கையாளப்பட்டிருக்கிறது. குறிப்பாக இப்போதைய காலகட்டத்தில், நீதித்துறையின் உறுப்பினர்கள் தம்மைப் பற்றிய அறிக்கைகளையும், கருத்துக்களையும் (subjective statements and comments) வெளியிடும்போது, அவை நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நல்லதல்ல. பி.சிவசங்கர் வழக்கின் அறிக்கையில், உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளில் ஒருவரும் மத்திய சட்ட அமைச்சருமான பி.சிவசங்கர், உச்சநீதிமன்றம் மேட்டுக்குடி வர்க்கத்தைச் சார்ந்தவர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் அதனால்தான் உடையவர்கள் குறித்து மறைக்கமுடியாத விதத்தில் இரக்கம் காட்டுகிறார்கள் என்றும்,கூறியிருக்கிறார். இந்த அறிக்கை, நீதிமன்றஅவமதிப்புக்குள் வரவில்லை. பிரசாந்த் பூஷன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளவை அனைவராலுமே ஒப்புக்கொள்ள முடியாமல் போகலாம். இருந்தாலும் அதற்காகநீதிமன்றம் அவரை நீதிமன்ற அவமதிப்புக்காக, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்க முடியாது. ஏனெனில் அவர் கூற்று, இந்திய ஜனநாயகத்தில் நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்றத்தின் பங்களிப்பு குறித்து பேச்சுரிமை அடிப்படையிலும், நேர்மையான விமர்சனத்தின் அடிப்படையிலும் அளிக்கப்பட்ட கருத்தாகும்.

நீதிபதிகள் பலவீனமானவர்களாக இருந்தால்...
ஒரு வலுவான சுயேச்சையான அச்சமற்ற வழக்கறிஞர் சங்கம் என்பது  சுதந்திரமான வலுவான நீதித்துறைக்கு ஒரு முன்நிபந்தனையாகும். நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தீர்ப்பின்படி, நீதிபதிகள் பலவீனமானவர்களாக இருந்தால், அவர்களும் மனிதர்கள்தானே, அவர்கள் சுதந்திரமான விமர்சனங்களால் திருத்தப்பட வேண்டியது அவசியமாகும். நீதித்துறையில் மிகவும் ஆழமானமுறையில் குறைபாடுகள் காணப்படுமானால், அவை, நேர்மறையான விமர்சனங்கள் மூலமாக அவ்வப்போது சரிசெய்யப்பட்டாக வேண்டும். இவ்வாறு விமர்சனம் வரும்போது அவற்றுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு அதிகாரம் அவற்றுக்குத் தடையாகப் பாயக்கூடாது.இவை அனைத்தும், நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருந்துவரும் நம்பிக்கையை அரித்துவீழ்த்திவிடும். பல சமயங்களில் சட்ட ஆணையம் அல்லது சட்ட நிறுவனங்கள் மற்றும்ஆராய்ச்சி மையங்கள், அவர்கள் நீதிபதிகள் குறித்து முன்வைத்திடும் விமர்சனங்கள் பலசமயங்களில் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகக்கூடிய அளவிற்கு அமைந்திருக்கும். ஆக்கப்பூர்வமான சட்டரீதியான இதழியல் மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்கள் குறித்து செயல்படுபவர்கள் இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மூலமாக அச்சுறுத்தப்படக் கூடாது.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், ஜனநாயகத்தின் அடிப்படையில் செயல்படும் அமைப்பு என்ற முறையில், பேச்சுரிமை, கருத்துரிமை, சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, மற்றும்நீதித்துறையின் சுதந்திரம் மிகவும் முக்கியமானவைகளாகும். இந்த அடிப்படையில், உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு எல்லைக்குள்ளிருந்தும், அரசமைப்புச் சட்டத்தின் 129ஆவது பிரிவின்கீழிருந்தும்   ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்னும் சொற்றொடரே நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்திலிருந்து ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கருதுகிறது.     உச்சநீதிமன்றம் தான் அளித்துள்ள தண்டனையை எந்த விதத்திலாவது மறுஆய்வு செய்து,திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழில்: ச.வீரமணி