தில்லி
ஆசியாவின் புதிய கொரோனா மையமாக உருவெடுத்துள்ள இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 56 ஆயிரத்து 516 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,895 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்குச் சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் உள்ள 21 மருத்துவமனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி வழங்கியுள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் உடலில் அந்த தொற்றினை அழிக்கும் எதிரணுக்கள் அதிகமாக உருவாகியிருக்கும். அவர்களது ரத்தத்தில் இருந்து எதிரணுக்களை தனியாகப் பிரித்தெடுத்து, புதிதாகப் பாதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவே பிளாஸ்மா சிகிச்சை என அழைக்கப்படுகிறது. திடமான நம்பகத்தன்மை இல்லாத காரணத்தினால் பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்காமலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.