புதுதில்லி:
அடிப்படைக் கல்வியோடு, இஸ்லாமிய மார்க்க கல்வியையும் கற்றுத்தருபவைகளாக மதரசா பள்ளிகள் இருக்கின்றன. லட்சக்கணக்கானோர் இங்கு படிக்கின்றனர். வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, இந்து மதத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியரும் ஆயிரக்கணக்கில் மதரசாபள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
ஆனால், நீண்டகாலமாகவே மதரசாக்கள் பற்றிய தவறான தகவல்களை சங்-பரிவாரங்கள் வெளியில் பரப்பி வருகின்றன. மத்திய பாஜக அரசும், தற்போது மதரசாகல்விமுறையை ஒழுங்குபடுத்தப் போகிறோம் என்ற பெயரில் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின்இந்த திட்டத்திற்கு சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.“மதரசாக்களில் மதக்கல்வி அளிப்பது உண்மைதான். ஆனால் அங்கு ஆங்கிலம், இந்திஉள்ளிட்ட மொழிகளும், கணக்குஉள்ளிட்ட வேறு சில பாடங்களும் கூட கற்பிக்கப்படுகிறது. மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான பாடங்கள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன.
மத பயங்கரவாத செயல்களில்ஈடுபட்ட நாதுராம் கோட்சே, பிரக்யா சிங் தாக்குர் போன்றவர்களை எந்த மதரசாவும் உருவாக்கவில்லை. எனவே மதரசா பற்றி, மோசமான பிம்பத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க வேண்டாம்” என்று ஆசம்கான் கூறியுள்ளார்.“உண்மையிலேயே மதரசாக்களுக்கு உதவும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தால் அவற்றுக்குத் தேவையான பொருட்கள்,மதிய உணவு வழங்குதல் போன்ற நடவடிக்கையை எடுக்கலாம்” என்று தெரிவித்துள்ள ஆசம்கான், “அதெல்லாம் முடியாது... மதரசாக்களை ஒழுங்குபடுத்த வேண்டியது கட்டாயம் என்று மோடி அரசு கருதினால், ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்படும் பிரக்யா சிங் போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, பின்னர் மதரசாக்களுக்கு வரட்டும்” என்றும் குறிப்பிட்டுள் ளார்.