tamilnadu

img

மக்களின் அவசரக் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்....

புதுதில்லி:
கொரோனா தாக்கமும் ஊரடங்கின் துயரமும் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் முன்வைத்துள்ள ஐந்து அவசரக் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜூன் 16 அன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், கட்சிக் கிளைகளும், உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மிகப்பெரிய அளவில் மக்களின் ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய எதிர்ப்பு தினப் போராட்டத்தில் பங்கேற்றதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவற்றில் மக்களின் பங்கேற்பு மிகச்சிறப்பாக இருந்ததிலிருந்தே, இக்கோரிக்கைகளின் மீதான மக்களின் அவசரத் தேவை மத்திய அரசுக்கு சரியாகவே எழுப்பப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

1 வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்கமாக அளித்திட வேண்டும், 

2 அடுத்த ஆறு மாதங்களுக்கு 10 கிலோ உணவு தானியங்கள் ஒவ்வொரு மாதமும் இலவசமாக அளித்திட வேண்டும். 

3 மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தின் கீழ் 200 நாட்களுக்கு வேலை அளித்திட வேண்டும், ஊதியத்தொகையையும் உயர்த்திட வேண்டும், நகர்ப்புற ஏழைகளுக்கும் இதனை விரிவாக்கிட வேண்டும், வேலையில்லாதோருக்கு வேலையில்லா நிவாரணம் உடனடியாக அறிவித்திட வேண்டும்.

4 நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதை நிறுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதையும், தொழிலாளர் நலச்சட்டங்களைத் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றுவதையும் நிறுத்திட வேண்டும்.

5 விவசாய விளைபொருள்களை, அதன் உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரை மடங்காக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து, விவசாய விளைபொருள்களைக் கொள்முதல் செய்திட வேண்டும். விவசாயிகள் அனைவருக்கும் ஒருமுறை அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்திட வேண்டும்.

இக்கோரிக்கைகள் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது. இவை பெரும்பான்மையான மக்களின் அவசரத் தேவைகளாகும். இவற்றை நிறைவேற்றத் தவறினால், இவை மக்களின் போராட்டங்கள் தீவிரமடைவதற்கே இட்டுச் செல்லும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு தெரிவித்துள்ளது.

(ந.நி.)