புதுதில்லி:
ஜம்மு - காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செப்டம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தவர், ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்.தட்சிண கன்னடா மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்தவர். அவர் தற்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கும் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:நாட்டின் மதச்சார்பின்மை குறித்து முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியின சகோதர, சகோதரிகளின் அச்சத்தை போக்கவில்லை என்பதை நினைத்து இந்த நாட்டின் சார்பில் வெட்கித் தலைகுனிகிறேன். என்ஆர்சி மசோதாவும் குடியுரிமை மசோதாவும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிட்டது. இது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆசிய பிரதேச பதிவுச் சட்டத்தை ஒத்ததாகும்.எனது குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை நான் சமர்ப்பிக்க மாட்டேன். என்ஆர்சி மசோதாவையும் ஏற்கமாட்டேன். இதை கீழ்ப்படியாமை என நினைத்துஇந்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அதைச் சந்திப்பேன். இதனால் நான் இந்த நாட்டின் குடிமகன் இல்லை என அறிவித்தாலும் நாடு முழுவதும் நீங்கள் கட்டப் போகும் காவல் தடுப்பு மையங்களை நிரப்புவதில் மகிழ்ச்சி அடைவேன். என் சக மனிதர்கள் மீதான வகுப்புவாதத் தாக்குதல், பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஆகியவற்றை, நான் வாயை மூடிக் கொண்டு வேடிக்கைபார்ப்பதை விட அதற்காக சிறைத்தண்டனை அனுபவிக்கத் தயார். அரசியல் ஆதாயத்துக்கு பொதுமக்களை சிறுமைப்படுத்தும் இது போன்ற கடுமையான சட்டத்தை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் காந்தி என்ன செய்தாரோ அதைதான் ஒவ்வொரு இந்திய குடிமகனும் செய்ய வேண்டியதாக இருக்கிறது. இந்த செயல்திட்டத்தில் நீங்கள் வெற்றி காண்பதற்கு முன், காவல் தடுப்பு மையங்களை அதிகமாக உருவாக்குமாறு அறிவுறுத்துகிறேன்.இவ்வாறு சசிகாந்த் செந்தில் குறிப்பிட்டுள்ளார்.