புதுதில்லி:
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர், இந்துத்துவா பெண் சாமியார் பிரக்யாசிங். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜாமீனில்வெளியே வந்த அவர், 2019 மக்களவைத் தேர்தலில்போபால் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் ஆனார்.அடாவடிப் பேச்சுக்கு சொந்தக்காரரான பிரக்யாசிங், இந்தமுறை ஸ்பைஸ்ஜெட் விமானப் பயணிகளுடன் தெருச்சண்டை போட்டுள்ளார்.தில்லியிலிருந்து போபால் செல்வதற்கு, பிரக்யாசிங் எம்.பி. ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் இருக்கை எண்1ஏ-வை முன்பதிவு செய்துள்ளார். இந்த இருக்கை பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில், சக்கர நாற்காலியில் வருவோருக்கு ஒதுக்கப்படுவதில்லை. ஆனால் முன்பதிவின்போது, சக்கர நாற்காலி குறித்துஎதுவும் தெரிவிக்காத பிரக்யா சிங், திடீரென சக்கர நாற்காலியுடன் வந்துள்ளார். இதனால் அவரை இருக்கை எண் 2 ஏ/பி-யில் அமருமாறு விமான ஊழியர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் முதல் வரிசையில்தான் உட்காருவேன் என அடம்பிடித்து, விமான நிறுவன ஊழியர்களிடமும், விமானத்தில் இருந்த பயணிகளுடனும் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளார். “நீங்கள் மக்களின் பிரதிநிதி. தயவு செய்து ஒருதலைவரை போன்று நடந்து கொள்ளுங்கள். விமானத்தில் இருக்கும் 50 பேரை சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள்” என்று பயணிகள் எவ்வளவு எடுத்துக் கூறியும்பிரக்யா சிங் கேட்கவில்லை. தொடர்ந்து ரகளை செய்துள்ளார். இதனால், ஸ்பைஸ்ஜெட் விமானம் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளது.