இந்திய விமானப்படையின் சண்டைப்பயிற்சியில் பெண்கள் மட்டுமே இயக்கும் போர் ஹெலிகாப்டர் அறிமுகப்படுத்தப்பட்டு விமானப்படையில் விமானம் ஓட்டும் வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்மேற்கு விமான தலைமையகத்திலிருந்து விமான லெப்டினண்ட் பருல் பரத்வாஜ் மற்றும் பிளையிங் அலுவலர் ஹீனா ஜெய்ஸ்வால் மற்றும் அமன் நிதி ஆகிய பெண்களை மட்டும் உள்ளடக்கிய நடுத்தர போர் ஹெலிகாப்டர் Mi-17 V5ல் பறந்து சண்டைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவில் பஞ்சாப்பைச் சேர்ந்த பருல் பரத்வாஜ் முதல்முறையாக போர் ஹெலிகாப்டர் Mi-17 V5யை செலுத்தியவராவார். துணை விமான ஓட்டியாக சென்ற அமன் நிதி ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வந்த முதல் பெண் போர் விமான ஓட்டி ஆவார். மேலும், ஹீனா ஜெய்ஸ்வால் ஹெலிகாப்டர் பொறியியலாளராக அந்த விமானத்தில் இடம் பெற்றார்.