tamilnadu

img

பிப்ரவரி 22 - மௌலானா அபுல் கலாம் ஆசாத் நினைவு தினம்

மௌலானா அபுல் கலாம் ஆசாத் (11.11.1888 – 22.02.1958) எழுதிய அவரது சுயசரிதையான ’இந்தியா வென்றெடுத்த சுதந்திரம்’ என்ற நூலின் கடைசி அத்தியாயம்தான் ’பிளவுபட்ட இந்தியா’. இந்தியா பிரிவினைக்குள்ளாக்கப்படக் கூடாது என்ற கருத்தை இறுதிவரை கொண்டிருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15இலிருந்து துவங்கி, அதற்குப் பிறகு ஏற்பட்ட ஹிந்து – முஸ்லீம் கலவரங்களின் ஊடாக, 1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது வரை இந்த அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். இந்தியா ஒன்றுபட வேண்டும் என்றால், இந்தியா பிளவுக்குள்ளாக வேண்டும் என்ற கருத்தை   ஏற்றுக் கொண்டதாலேயே, தான் பிரிவினையை ஆதரித்ததாக 1947 ஆகஸ்ட் 11 அன்று படேல் பேசியிருந்தார்.  ‘பிளவுபட்ட இந்தியா’ என்ற இந்த அத்தியாயத்தில் காந்தியுடன் படேல் கொண்ட முரண்பாடுகளுக்கும், காந்தி படுகொலைக்குமிடையே இருந்த தொடர்புகள் ஆசாத் மூலம் தொட்டுக் காட்டப்படுகின்றன. தன் சொந்த நலனை முன்னிறுத்தியே இந்தியப் பிரிவினைக்கு ஆதரவாக படேல் இருந்தார் என்பதே ஆசாத் சுட்டிக் காட்டுகின்ற உண்மை.

இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து, தான் இறக்கும் வரையிலும் மத்திய அமைச்சரவையில் கல்விக்கான பொறுப்பை ஏற்று இந்தியாவின் முதல் கல்வியமைச்சராக இருந்து வந்த ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11 தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் என்ற மத்திய அரசின் 2008ஆம் ஆண்டு அறிவிப்பு, குறைந்தபட்சம் கல்வியுடன் தொடர்புடையவர்களால்கூட அங்கீகரிக்கப்பட்டு அக்கறை காட்டப்படாத நிலையில், படேல் பிறந்த தினமான அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக வெகுசிரத்தையுடன் இப்போது கொண்டாட வைக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக, சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராக, முதல் உள்துறை அமைச்சராக இருந்த, காந்தியின் இறுதிக்காலத்தில் அவரோடு முரண்பட்டிருந்த படேலை தன்வசம் சுவீகரித்து தன் அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துவதன் மூலமாக, தேசிய ஒற்றுமை என்ற பெயரில் ஹிந்துக்களை ஒருமுனைப்படுத்துகின்ற இன்றைய பாஜக அரசின் நடவடிக்கைகள் இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டைக் குலைக்கின்ற செயலாகவே இருக்கின்றன.    

 பிளவுபட்ட இந்தியா

 நான் சொல்ல விரும்பிய செய்திகளின் இறுதி அத்தியாயத்திற்கு இப்போது வந்தடைந்து விட்டேன். பாகிஸ்தானின் ஆட்சிப் பகுதியைத் துவக்கி வைப்பதற்காக 1947 ஆகஸ்ட் 14 அன்று மவுண்ட்பேட்டன் கராச்சிக்குச் சென்றார். மறுநாள் அவர் இந்தியாவிற்குத் திரும்பினார். 1947 ஆகஸ்ட் 15 அன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்திய ஆட்சிப் பகுதி பிறந்தது. 

நாடு சுதந்திரமடைந்தது என்றாலும் விடுதலையையும், வெற்றியையும் முழுமையாக அனுபவிக்கும் முன்னர், சுதந்திரத்தோடு சேர்த்து தங்களுக்கு ஒரு பெரும் துயரமும் கிடைத்திருப்பதை காலையில் எழுந்த மக்கள் கண்டனர். சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சுதந்திரத்தின் பலனை அனுபவிப்பதற்கு முன்னராகவே நீண்டதொரு கடினமான பயணத்தை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாங்களும் உணர்ந்தோம்.

காங்கிரஸ், முஸ்லீம்லீக் ஆகிய இரண்டு கட்சிகளுமே தேசப்பிரிவினையை ஏற்றுக் கொண்டிருந்தன. ஒட்டுமொத்த தேசத்தைப் பிரதிநிதுத்துவப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம்களிடையே கணிசமான ஆதரவைப் பெற்றதாக முஸ்லீம்லீக் கட்சியும் இருந்ததால், இந்தப் பிரிவினையை தேசம் முழுவதுமே பொதுவாக ஏற்றுக் கொண்டது என்பதாகப் பொருள்படுவதாகவே இருந்தது என்றாலும் அப்போதிருந்த உண்மையான நிலைமை அதற்கு முற்றிலும் மாறானதாகவே இருந்தது. பிரிவினைக்கு முன்பும், பின்பும் இருந்த நிலைமையை நாம் கவனித்துப் பார்த்தால், இந்தப் பிரிவினையானது காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத் தீர்மானம், முஸ்லீம்லீக் கட்சியின் பதிவேடு ஆகியவற்றில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருப்பதைக் காண முடிந்தது.

இந்திய மக்கள் இந்தப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையில், அவர்களின் உடலும், உயிரும் இத்தகைய பிரிவினை எனும் சிந்தனைக்கு எதிராக கலகம் செய்து கொண்டிருந்தன. பெரும்பாலான இந்திய முஸ்லீம்களின் ஆதரவு முஸ்லீம்லீக் கட்சிக்கு இருப்பதாக நான் கூறியிருந்தேன். இருந்தாலும் அந்தச் சமூகத்தின் பெரும்பிரிவினர் லீக் எதிர்ப்பாளர்களாகவே இருந்தனர். நாட்டைப் பிளவுபடுத்துகின்ற இந்த முடிவால் அவர்களுடைய மனம் மிகவும் புண்பட்டுப் போயிருந்தது. ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் முதலிலிருந்தே பிரிவினைக்கு எதிரானவர்களாகவே இருந்து வந்தனர். இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்ட போதிலும், அவர்களுடைய எதிர்ப்பு தொடர்ந்து இருந்து கொண்டே வந்தது. இந்தப் பிரிவினை யதார்த்தமாக மாறிய போது, முஸ்லீம்லீக்கின் ஆதரவாளர்களாக இருந்த முஸ்லீம்களும் கூட. பிரிவினையின் விளைவாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, பிரிவினை என்பது இது போன்று இருக்கும் என்று தாங்கள் நினைக்கவில்லை என்று வெளிப்படையாகவே சொல்லத் தொடங்கினர்.

பத்து வருடங்கள் கழித்து நிலைமையை மீளாய்வு செய்யும் போது, நடந்திருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அப்போது நான் சொன்னதை உறுதிப்படுத்தியிருப்பதையே காண்கிறேன். காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திரமான, திறந்த மனதுடன் பிரிவினையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று எனக்கு அப்போதே நன்றாகத் தெரிந்திருந்தது. கோபத்திலும், வெறுப்புணர்விலும் பிரிவினையை சிலர் ஏற்றுக் கொண்ட வேளையில், மற்றவர்கள் மனக்கசப்புடனே அதனை ஏற்றுக் கொண்டனர். கோபம் அல்லது அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்களால் ஒருபோதும் பாரபட்சமின்றி முடிவெடுக்க முடியாது. உணர்ச்சிவசப்பட்டு பிரிவினையை ஆதரித்தவர்களால், தாங்கள் செய்து கொண்டிருக்கின்ற காரியத்தின் விளைவுகளை எவ்வாறு உணர்ந்திருக்க முடியும்?

காங்கிரஸ் கட்சியில் பிரிவினைக்கான மிகப்பெரிய ஆதரவாளராக சர்தார் படேல் இருந்தார், இருந்தாலும், இந்தியப் பிரச்சினைகளுக்கு பிரிவினை சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என்று அவர்கூட நம்பவில்லை. தனக்கு ஏற்பட்ட எரிச்சல் மற்றும் சீண்டி விடப்பட்ட அவரது தற்பெருமை ஆகியவற்றாலேயே, அவர் தன்னை பிரிவினைக்கு ஆதரவானவராக முழுமையாக முன்னிறுத்திக் கொண்டார்.  தான் முன்வைத்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நிதியமைச்சராக இருந்த லியாகத்அலி கான் நிறுத்தி வைத்ததன் மூலம், அவர் விரக்தியடைந்திருந்தார். எனவே, வெறும் கோபத்தின் காரணாமகவே, வேறெந்த மாற்றும் இல்லாவிட்டால் பிரிவினையை ஏற்றுக் கொள்ளலாம் என்று அவர் முடிவு செய்தார். பாகிஸ்தான் என்ற புதிய அரசு எந்த விதத்திலும் சாத்தியமானதல்ல, அதனால் நீடித்திருக்க முடியாது என்றே அவர் நம்பினார். குறுகிய காலத்திற்குள்ளாகவே பாகிஸ்தான் வீழ்ச்சியடைந்து விடும், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற மாகாணங்கள் சொல்லவொண்ணாத் துயரங்களையும், கஷ்டத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றுகூட சர்தார் படேல் நம்பினார். முஸ்லீம்லீக்கிற்கு எதிராக கடுமையான காழ்ப்புணர்ச்சி அவரிடம் உருவாகியிருந்ததையும், லீக்கை ஆதரித்து வந்த முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால், அதற்காக அவர் வருந்த மாட்டார் என்பதையும் நான் அறிவேன்.

1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர பாகிஸ்தான் உருவான போது, பிரிவினை குறித்த மக்களின் மனப்பான்மை உண்மையான சோதனைக்குள்ளானது. இந்திய மக்கள் அனைவரும் உளப்பூர்வமாக பிரிவினையை ஏற்றுக் கொண்டிருந்தது உண்மையென்றால், பஞ்சாப், எல்லைப் பகுதிகள், சிந்து மற்றும் வங்காளம் போன்ற பகுதிகளில் இருந்த முஸ்லீம்களைப் போலவே அந்தப் பகுதிகளில் இருந்த ஹிந்துக்களும், சீக்கியர்களும் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். இந்தியப் பிரிவினையை காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதென்பது இந்திய மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வதற்குச் சமமானதாகும் என்ற கூற்று எவ்வளவு வெற்றுத்தனமானதாக இருந்தது என்பதை இந்த மாகாணங்களிலிருந்து நமக்கு வந்த செய்திகள் சுட்டிக் காட்டின.

ஆகஸ்டு 14 பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நாளாக இருந்தது. ஆனால் ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் அது துக்ககரமான நாளாகிப் போனது. இது பெரும்பான்மை மக்களின் கருத்தாக மட்டும் இல்லாமல், காங்கிரஸில் இருந்த முக்கிய தலைவர்களின் கருத்தாகவும் இருந்தது. ஆச்சார்ய கிருபளானி அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். அவர் சிந்து பகுதியைச் சார்ந்தவர். இந்தியாவின் அழிவிற்கான துயரம் நிறைந்த நாள் என்றொரு அறிக்கையை 1947 ஆகஸ்ட் 14 அன்று அவர் வெளியிட்டார். பாகிஸ்தான் முழுவதிலும் இருந்த ஹிந்துக்கள், சீக்கியர்களிடமிருந்தும் மிகவும் வெளிப்படையாக இத்தகைய உணர்வுகளே வெளியாகின. பிரிவினைக்கு ஆதரவான முடிவை நமது தேசிய அமைப்பு எடுத்திருந்த நிலையில், ஒட்டு மொத்த மக்களோ பிரிவினையால் துயரப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது நிச்சயமாக விசித்திரமான நிலைமையாகவே இருந்தது.

இங்கே ஒரு கேள்வி எழுவது இயல்பாகவே இருக்கிறது. பிரிவினை என்பது இந்திய மக்கள் அனைவரின் மனங்களிலும் கோபம், துயரம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தியது என்றால், அவர்கள் ஏன் அதனை ஏற்றுக் கொண்டார்கள்? அதற்கு ஏன் அதிக எதிர்ப்பு இருக்கவில்லை? கிட்டத்தட்ட அனைவருமே தவறு என்று கருதிய முடிவை எடுப்பதற்கு ஏன் இத்தனை அவசரம் காட்டப்பட்டது? ஆகஸ்ட் 15க்குள்ளாக இந்தியப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வைக் கண்டறிய முடிந்திராவிட்டால், ஏன் தவறான முடிவை எடுத்து அதற்காக வருந்திக் கொண்டிருக்க வேண்டும்? சரியான தீர்வு காணும் வரையில் காத்திருப்பதே நல்லது என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லி வந்தேன். என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஆனாலும் துரதிருஷ்டவசமாக என்னுடைய நண்பர்களோ அல்லது உடனிருந்தவர்களோ என்னை ஆதரிக்கவில்லை. கோபம், மனக்கசப்பு போன்றவை அவர்களுடைய கண்களை மூடி மறைத்து விட்டதாலேயே, இத்தகைய விசித்திரமான குருட்டுத்தனமான முடிவிற்கு அவர்கள் வந்ததாக நான் கருதுகிறேன். ஆகஸ்ட் 15 என்று நாள் குறிக்கப்பட்டு விட்டது அவர்களை மந்திரம் போல் மயக்கி, மவுண்ட்பேட்டன் கூறியவற்றையெல்லாம் ஏற்றுக்  கொள்ளுமளவிற்கு செய்து விட்டது என்பதுகூட ஒருவேளை அதற்கான காரணமாக இருந்திருக்கலாம். 

சோகம், மகிழ்ச்சி என்று இரண்டும் கலந்து பிரிக்க முடியாத வகையில் அப்போதைய நிலைமை இருந்தது. பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலே இருந்து கொண்ட முஸ்லீம்லீக் தலைவர்களின் நிலை மிகவும் கேலிக்குரியதாகிப் போனது. கராச்சிக்கு கிளம்பிச் சென்ற ஜின்னா, இப்போது நாடு பிரிந்து விட்டது, எனவே அவர்கள் இந்தியாவின் விசுவாசமான குடிமக்களாக இருக்க வேண்டும் என்று தன்னுடைய ஆதரவாளர்களுக்கு   செய்தியொன்றை அனுப்பினார். பிரிவினை குறித்த அவருடைய இந்தச் செய்தி அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பலவீனத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த தலைவர்களில் பலரும் ஆகஸ்ட் 14க்குப் பிறகு என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். அவர்களின் நிலை மிகவும் பரிதாபமானதாக இருந்தது. அவர்கள் அனைவருமே ஜின்னா தங்களை ஏமாற்றி, தத்தளிக்க விட்டுச் சென்று விட்டதாக மிகவும் வருத்தத்தோடும் கோபத்தோடும் கூறினர்.

ஜின்னா அவர்களை ஏமாற்றி விட்டதாக அவர்கள் சொன்னதை முதலில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முஸ்லீம் பெரும்பான்மை மாகாணங்களின் அடிப்படையிலே நாடு பிரிக்கப்பட வேண்டும் என்றே அவர் வெளிப்படையாகக் கோரி வந்தார். பிரிவினை என்பது இப்போது நிகழ்ந்து விட்டது. மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள முஸ்லீம் பெரும்பான்மைப் பகுதிகள் இப்போது பாகிஸ்தான் பகுதிகளாக உருவாகி விட்டன. அப்படியிருக்கும் போது, முஸ்லீம்லீக்கின் பிரதிநிதிகளான இவர்கள் ஏன் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகச் சொல்ல வேண்டும்?

உண்மை நிலைமையோடு எந்தத் தொடர்பும் இல்லாத வகையிலேயே அவர்கள் பிரிவினை பற்றிய புரிதல் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் பேசிய போது நான் உணர்ந்தேன். பாகிஸ்தான் ஏற்படுத்தப் போகின்ற உண்மையான தாக்கங்களை அவர்கள் உணரத் தவறியிருந்தார்கள். முஸ்லீம் பெரும்பான்மை மாகாணங்கள் ஒரு தனி நாடாக உருவாகும் போது, முஸ்லீம்கள் சிறுபான்மையினராக இருக்கின்ற மாகாணங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியிருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாகாணங்களில் முஸ்லீம்கள் சிறுபான்மையாகவே இருந்தனர்.  பிரிவினைக்குப் பின்னரும் கூட அவ்வாறான நிலைமையே நீடிக்கும். ஆனால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ உள்ள மாகாணங்களிலிருந்து வந்தவர்களா என்பதைக் கருத்தில் கொள்ளாமல், இந்த முஸ்லீம்லீக்கினர் பாகிஸ்தான் உருவாகும் போது அது தனி நாடாகக் கருதப்பட்டு, தங்கள் சொந்த எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை முஸ்லீம்களுக்கு இருக்கும் என்று முஸ்லீம்களை இணங்க வைக்கின்ற வகையிலே கூறி வந்தது விசித்திரமானதாக இருந்தது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற மாகாணங்கள் இந்தியாவிலிருந்து இப்போது பிரிந்ததால், வங்காளம், பஞ்சாப் ஆகியவை பிரிக்கப்பட்டன. தங்களுக்கென்று ஆதாயம் எதுவும் கிட்டவில்லை என்பதோடு இந்தியப் பிரிவினையால் தாங்கள் அனைத்தையும் இழந்து விட்டதாக, திரு.ஜின்னா கராச்சிக்குச் சென்று விட்ட வேளையில், இந்த முட்டாள்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஜின்னா அனுப்பிய அந்த கடைசி செய்தி ஒட்டகத்தின் முதுகில் வைக்கப்பட்ட கடைசி வைக்கோலாகவே இருந்தது. பிரிவினையின் காரணமாக சிறுபான்மையினரின் நிலை அதற்கு முன்பு இருந்ததைவிட மிகவும் பலவீனமாகிப் போனது என்பதை அவர்கள் இப்போது தெளிவாக உணர்ந்தனர். கூடுதலாக, தங்களுடைய இத்தகைய முட்டாள்தனமான செயல் மூலமாக ஹிந்துக்களின் மனங்களில் கோபம் மற்றும் ஆத்திரத்தை அவர்கள் ஏற்படுத்தி விட்டிருந்தனர்.

முஸ்லீம்லீக்கைச் சார்ந்திருந்த இவர்கள் ஹிந்து பெரும்பான்மையினரின் கருணையில் தாங்கள் இப்போது வாழ வேண்டியிருப்பதாக திரும்பத் திரும்பக் கூறினர். நடந்திருக்கும் நிகழ்வுகள் மீதான அவர்களின் வருத்தம், அவர்கள் மீது எவ்வித இரக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. பிரிட்டிஷ் மந்திரிசபை தூதுக் குழுவிடம் கூறியவற்றை நான் இப்போது அவர்களுக்கு நினைவூட்டினேன். ’பிரிவினை என்பது நடைமுறைக்கு வருமேயானால், பெரும்பான்மையான முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்குப் போய் விடும் போது, இந்தியாவில் இருக்கப் போகின்ற முஸ்லீம்கள் மிகச் சிறிய, முக்கியத்துவமற்ற சிறுபான்மையினராகப் போவது குறித்து ஒரு நாள் அவர்கள் விழித்துக் கொள்ளக்கூடும்’ என்று 1946 ஏப்ரல் 15 அன்று அந்தக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட என்னுடைய அறிக்கையில் இந்திய முஸ்லீம்களை நான் மிகத் தெளிவான வார்த்தைகளில் எச்சரித்திருந்தேன்.

ஆகஸ்ட் 15 அன்று விடியும் நேரத்தில் சுதந்திரம் கிடைத்திருப்பதைக் கொண்டாடுவதற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா சுதந்திரமடைந்து விட்டதாகவும், இந்தியா சுதந்திர நாடு என்பதாகவும் நள்ளிரவில் கூடிய அரசியல் நிர்ணய சபை அறிவித்தது. அடுத்த நாள் காலை 9 மணிக்கு மீண்டும் சபை கூடியபோது, மவுண்ட்பேட்டன் துவக்க உரையாற்றினார். ஒட்டுமொத்த நகரமும் மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது. அந்தக் கணத்தில் பிரிவினையின் வேதனைகூட மறக்கப்பட்டிருந்தது. சுதந்திரம் அடைந்து விட்டதைக் கொண்டாடுவதற்காக  நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து பல லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர். மாலை நான்கு மணிக்கு சுதந்திர இந்தியாவின் கொடி ஏற்றப்படுவதாக இருந்தது. ஆகஸ்ட் மாத சூரியன் தகித்துக் கொண்டிருந்த போதிலும், அங்கே குவிந்திருந்த பல லட்சக்கணக்கான மக்கள் அந்தக் கடுமையான வெப்பத்தைப் பொறுத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தனர். மவுண்ட்பேட்டன் தனது காரில் இருந்து வெளியே வர முடியாத அளவிற்கு கூட்டம் கூடியிருந்தது. காரிலிருந்தவாறே அவர் தன்னுடைய உரையை ஆற்ற வேண்டியதாயிற்று.

பரவசமான நிலையில் இருந்த அந்த மகிழ்ச்சி நாற்பது எட்டு மணி நேரம்கூட நீடிக்கவில்லை. அடுத்த நாளே  வகுப்புவாதப் பிரச்சனைகள் குறித்து வந்த கொலை, மரணம், கொடூரமான தாக்குதல்கள் பற்றிய செய்திகள் தலைநகரில் ஆழ்ந்த மனச்சோர்வை ஏற்படுத்தின. ஹிந்து, சீக்கிய கும்பல்கள் கிழக்கு பஞ்சாபில் இருந்த முஸ்லீம் கிராமங்களைத் தாக்கியதாகத் தெரிய வந்தது. அவர்கள் வீடுகளை எரித்ததோடு, அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகளையும் கொன்று குவித்தனர். அதே போன்று மேற்கு பஞ்சாபில் இருந்த ஹிந்துக்கள், சீக்கிய சமூகங்களைச் சார்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை முஸ்லீம்கள் கண்மூடித்தனமாகக் கொன்று குவித்ததாக செய்திகள் வெளியாகின. கிழக்கு, மேற்கு என்று பஞ்சாப் முழுவதுமே அழிவு மற்றும் மரணத்திற்கான கல்லறையாக மாறிப் போனது. அடுத்தடுத்து இம்மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்தன. கிழக்கு பஞ்சாப் அமைச்சர்கள் ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் என்று அடுத்தடுத்து டெல்லிக்கு விரைந்தனர். அவர்களைத் தொடர்ந்து அரசாங்கத்திற்கு வெளியில் இருந்த உள்ளூர் காங்கிரஸின் முன்னணி உறுப்பினர்களும் டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவருமே அங்கே நடந்து கொண்டிருந்த நிகழ்வுகள் பற்றி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தனர். நடந்திருந்த படுகொலைகளின் கோரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்திருந்த அவர்கள் அத்தகைய செயல்களை யாராலும் நிறுத்த இயலாது என்று நம்பிக்கையற்றுப் பேசினர். ராணுவத்தை ஏன் அழைக்கவில்லை என்று நாங்கள் அவர்களிடம் கேட்டோம். நம்பிக்கையின்றி இருந்த அவர்கள் பஞ்சாபில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள துருப்புக்கள் நம்பகத்தன்மையற்றவை என்றும், அவர்களிடமிருந்து அதிக உதவிகளை எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்தனர். டெல்லி, பஞ்சாப் போன்ற பகுதிகளுக்கு ராணுவ உதவி உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

ஆரம்பத்தில் டெல்லியில் எந்தக் கலவரமும் நடைபெறவில்லை என்றாலும், நாடு முழுவதும் இத்தகைய கொடூரமான கொந்தளிப்பு ஏற்பட்ட பிறகு, டெல்லியில் சிறிய அளவில் இருந்த ராணுவக் கையிருப்பை அங்கே அனுப்புவதற்கான சாத்தியம் எங்களுக்கு இருக்கவில்லை. எனவே நாங்கள் வெளியில் இருந்து துருப்புக்களை அனுப்ப முடிவு செய்தோம், ஆனால் அவர்கள் வந்து சேர்வதற்குள்ளாகவே, தலைநகரை குழப்பம் சூழ்ந்து கொண்டது.  பஞ்சாபில் கொலைகள் நடப்பது பற்றிய செய்திகளைத் தொடர்ந்து மேற்கு பஞ்சாபில் இருந்து அகதிகள் வெளியேறினர். டெல்லியில் வன்முறை வெடித்தது. படுகொலைகள் நகரத்தைச் சூழ்ந்து கொண்டன. அகதிகளாக வெளியேறியவர்கள், பொதுமக்கள் மீது மட்டும் இந்த வன்முறைகள் நடத்தப்படவில்லை. அரசு ஊழியர்கள் மட்டுமே வாழ்ந்த இடங்களில்கூட வன்முறைகள் நடந்தேறின. மேற்கு பஞ்சாபில் நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றிய தகவல்கள் டெல்லிக்கு வந்து சேர்ந்த போது, நகரில் இருந்த முஸ்லீம்கள் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டனர். டெல்லியில் இந்த கொலைகாரத் தாக்குதல்களை நடத்துவதில் சீக்கியர்கள் தலைமை வகித்தனர்.

பழிவாங்குவது மற்றும் பணயக் கைதிகளாக பிடித்து வைப்பது போன்ற அபாயகரமான செயல்பாடுகளைப் பற்றி எந்த அளவிற்கு நான் மனம் உடைந்து போயிருந்தேன் என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்போது டெல்லியிலும் அத்தகைய செயல்பாடுகள் பயங்கரமாகச் செயல்படுத்தப்பட்டன. ஹிந்துக்களையும், சீக்கியர்களையும் மேற்கு பஞ்சாபில் இருந்த முஸ்லீம்கள் கொலை செய்தால், டெல்லியில் இருக்கும் அப்பாவி முஸ்லீம்களை ஏன் பழிவாங்க வேண்டும்? நல்ல மனநிலையிலிருக்கும் எந்தவொரு கௌரவமான மனிதனாலும் இத்தகைய பணயக் கைதிகள், பழிவாங்கல்கள் என்கிற செயல்பாடுகள் சரியானவைதான் என்று கூற முடியாத வகையில் மிகவும் கொடியதாக இருந்தன. 

ராணுவத்தின் அணுகுமுறையும் இப்போது ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியது. பிரிவினைக்கு முன்பாக, வகுப்புவாத விரோதங்கள் எதுவுமில்லாத நிலையே ராணுவத்தில் இருந்து வந்தது. வகுப்புவாத அடிப்படையில் நாட்டைப் பிரித்த வேளையில், ராணுவத்திற்குள்ளும் வகுப்புவாத வைரஸ் நுழைந்தது. டெல்லியில் இருந்த துருப்புகளில் பெரும்பான்மையானவர்கள் ஹிந்துக்கள், சீக்கியர்களாகவே இருந்தனர். நகரத்தில் சட்டம் ஒழுங்கை மீட்பதற்காக வலுவான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு அவர்களைச் சார்ந்திருக்க முடியாது என்பது மிகச் சில நாட்களிலேயே தெளிவாகத் தெரிந்து விட்டது. எனவே தென் பகுதியிலிருந்து அதிகமான ராணுவவீரர்களைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம். அவர்கள் நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்படவில்லை என்பதோடு, ராணுவ வீரர்களுக்கான கட்டுப்பாட்டு உணர்வுகளை தக்கவைத்துக் கொண்டிருப்பவர்களாகவும் இருந்தனர். தெற்கிலிருந்து வந்த அந்த ராணுவ வீரர்கள் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தலைநகரில் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மிகப்பெரிய பங்கை ஆற்றினர்.

நகரப் பகுதிகளைத் தவிர, கரோல்பாக், லோதி காலனி, சப்ஜி மண்டி, சதர் பஜார் போன்ற புறநகர்ப் பகுதிகளும் பெருமளவில் முஸ்லீம் மக்களைக் கொண்டிருந்தன. இந்தப் பகுதிகள் அனைத்திலுமே அவர்களுடைய உயிர், சொத்து போன்றவை பாதுகாப்பானவையாக இருக்கவில்லை. அப்போதிருந்த சூழலில் முழுமையான ராணுவ பாதுகாப்பை அவர்களுக்கு வழங்குவதற்கான சாத்தியமும் இருக்கவில்லை. ஒரு கட்டத்தில், இந்த இடங்களில் வசித்து வந்த முஸ்லீம்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது, ஒவ்வொரு முஸ்லீமும் அடுத்த நாள் காலையில் உயிருடன் இருப்போமா என்ற சந்தேகத்துடனே இரவில் தூங்கச் செல்கின்ற நிலையே அப்போது நிலவி வந்தது.

தீவைப்பு, கொலை, கலவரங்கள் நடந்த டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கும் ராணுவ அதிகாரிகளின் துணையுடன் நான் சென்று வந்தேன். அந்தப் பகுதிகளில் இருந்த முஸ்லீம்கள் முற்றிலும் மனச்சோர்வு அடைந்திருப்பதையும், தாங்கள் நாதியற்றவர்களாக இருப்பதான உணர்வுடன் இருப்பதையும் நான் கண்டேன். என்னுடைய வீட்டில் தங்குவதற்கான பாதுகாப்பான இடத்தைப் பலரும் கேட்டனர். நகரத்தில் இருந்த செல்வந்தர்கள், நன்கு அறியப்பட்ட குடும்பத்தினர்கள் ஆகியோர் தாங்கள் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர வேறு எதுவும் தங்களிடம் இல்லாதவர்களாக நிராதரவான நிலையில் என்னிடம் வந்து சேர்ந்தனர். பகல் நேரத்தில் வெளியே வருவதற்கு தைரியமில்லாத சிலர் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ ராணுவப் பாதுகாப்புடன் அங்கே கொண்டு வரப்பட்டனர். வெகு விரைவிலேயே என்னுடைய வீடு நிறைந்து விட்டது. என் வீட்டின் சுற்றுப்புறத்தில் கூடாரங்களை அமைத்தேன். ஏழை, பணக்காரர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைத்து வகையிலும் ஆண்களும், பெண்களும் மரணம் குறித்த பயத்தின் காரணமாக நெருக்கியடித்து அங்கே தங்கியிருந்தனர்.

சட்ட ஒழுங்கு நிலைமை சீரடைவதற்கு மேலும் சில நாட்களாவது தேவைப்படும் என்பது விரைவிலேயே தெளிவாகி விட்டது. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் தனிமையில் இருந்த வீடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது இயலாத காரியமாக இருந்தது. ஒரு பகுதியில் காவலுக்கு நாங்கள் ஏற்பாடு செய்தால், வேறு இடத்தில் தாக்குதல்கள் நடக்க ஆரம்பித்தன. எனவே, முஸ்லீம்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, பாதுகாப்பான முகாம்களில் அவர்களைத் தங்க வைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். அத்தகைய முகாம் புராண கிலா அல்லது பழைய கோட்டை என்றழைக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டது. அது கட்டடங்கள் எதுவும் இல்லாமல் வெறுமனே கோட்டைகள் மட்டும் இருக்கும் இடமாக இருந்தது. அந்த இடமும் வெகு விரைவிலேயே நிறைந்து விட்டது. அதிக எண்ணிக்கையில் அந்த கோட்டையில் கூடிய முஸ்லீம்கள், கிட்டத்தட்ட அந்தக் குளிர்காலம் முழுவதும் அந்தக் கோட்டைக்குள்ளேயே வாழ்ந்து வந்தனர்.

பிரிவினையைக் கொண்டு வருவதற்கு உதவியதற்காக மவுண்ட்பேட்டன் மீது நான் குற்றம் சுமத்தியிருக்கிறேன். ஆனாலும் நம்மை எதிர்நோக்கியிருந்த நெருக்கடியை அவர் கையாண்ட முறைக்காக நான் அவருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். இந்தியாவைப் பிரிப்பது என்ற சிக்கலான, கடினமான பணியை மேற்கொள்வதில் அவருக்கிருந்த ஆற்றல், வீரியத்தை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அதே போன்ற வீரியம் மற்றும் ஆற்றலுடனே நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு திரும்புகின்ற வகையில் அவர் இப்போதும் பணியாற்றினார்.  நாம் நல்ல நிலையில் இருப்பதற்கு அவருடைய ராணுவப் பயிற்சி உதவியது. அவருடைய தலைமை, ராணுவ தந்திரோபாய அனுபவம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நமக்கு ஏற்பட்ட இந்தச் சிரமங்களை இவ்வாறு விரைவாக, செயல்திறனுடன் கையாண்டிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். இந்த நிலைமை போர் போன்றது இருப்பதால், அதனை நாம் அவ்வாறே எதிர் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். போரின் போது அமைக்கப்படுகின்ற குழுக்கள் முழுநேரமும் இயங்கி வரும். நாமும் அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கும் குழுக்களை அமைக்க வேண்டும், அவை அந்தந்த இடங்களிலேயே முடிவுகளை எடுத்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிகளைக் கண்காணிக்கும். என்று அவர் கூறினார்.  அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர், உயர்மட்ட குடிமைப்பணி மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் ஆகியோரை உள்ளடக்கிய அவசர கால வாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த வாரியக் கூட்டம் தினமும் காலை 9.30 மணியளவில், அரசாங்க மாளிகையில் இருந்த அமைச்சரவை அறையில் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களுக்கு மவுண்ட்பேட்டன் தலைமை தாங்கினார். கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் இடப்பட்ட உத்தரவுகளையும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் மீளாய்வு செய்தோம். அமைதி முழுமையாகத் திரும்புகின்ற வரையிலும், இந்த வாரியம் தொடர்ந்து இடைவெளியின்றிச் செயல்பட்டு வந்தது. , ஒவ்வொரு நாள் காலையிலும் வாரியத்தின் கவனத்திற்கு வந்த அறிக்கைகள், அங்கே நிலவி வந்த ஆபத்துக்களைப் பற்றியதொரு பார்வையை எங்களுக்கு அளித்தன.

இந்த காலகட்டத்தில், காந்திஜி மிகவும் கொடுமையான மனவேதனைக்கு உள்ளாகி இருந்தார். இரு சமூகங்களுக்கிடையே நல்லுணர்வுகளை நிலைநிறுத்துவதற்கும், முஸ்லீம்களின் உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வந்தார். தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதைக் கண்டறிந்த போது, அது அவருக்கு பெரும் துயரத்தையும், துன்பத்தையும் ஏற்படுத்தியது, பெரும்பாலும் அவர் ஜவஹர்லால், சர்தார் படேல் மற்றும் என்னை வரச் சொல்லி, நகரில் நிலவுகின்ற சூழ்நிலையை விவரித்துச் சொல்லுமாறு கூறுவார். உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எங்களுக்கிடையே வேறுபாடுகள் இருந்தன என்பதை அவர் அறிந்த வேளையில், அவருடைய துயரம் அதிகமாகியது. 

சர்தார் படேல் ஒருபுறம், ஜவஹர்லால் மற்றும் நான் மறுபுறம் என்று எங்களுடைய மனப்பாங்கில் ஒரு வித்தியாசம் இருந்தது உண்மைதான். அது உள்ளூர் நிர்வாகத்தைப் பாதித்தது. அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்திருப்பது தெளிவாகியது. பெருமளவிலான அதிகாரிகள் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேலை எதிர்பார்த்து அவரை மகிழ்விக்கும் வகையில் செயல்பட்டு வந்தனர். ஜவஹர்லால் மற்றும் என் பக்கம் சிறிய அளவில் இருந்த அதிகாரிகள் குழு ஜவஹர்லாலுடைய கட்டளைகளை நிறைவேற்ற முயற்சித்து வந்தது. சாகெப்ஜதா அப்டாப் அகமதுவின்  மகனான குர்ஷெத் அகமது என்ற முஸ்லீம் அதிகாரி டெல்லியின் தலைமை ஆணையராக இருந்து வந்தார், உறுதியான அதிகாரியாக அவர் இருக்கவில்லை. கடுமையான நடவடிக்கை எதனையும் எடுத்தால், தான் முஸ்லீம்களுக்கு ஆதரவானவராகக் கருதப்படக் கூடும் என்ற பயத்துடனும் அவர் இருந்து வந்தார். அதன் விளைவாக நிர்வாகத்தின் தலைவராக பெயரளவிற்கு மட்டுமே அவர் இருந்து வந்தார். துணை ஆணையாளராக இருந்தவர் தானாகவே நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார். ரந்தாவா என்றழைக்கப்படுகின்ற அந்த அதிகாரி சீக்கியர் என்றாலும் சீக்கிய பழக்கவழக்கங்கள் எதனையும் பின்பற்றுபவராக இருக்கவில்லை. தன்னுடைய தாடியை மழித்துக் கொண்ட அவர் தலைமுடியையும் வெட்டிக் கொண்டிருந்தார். சீக்கியர்கள் பலரும் அவரை ஒரு மதவிரோதி என்றே கருதினர். பிரிவினைக்கு முன்பாகவே அவர் டெல்லியில் துணை ஆணையாளராக இருந்தார். அவருடைய பதவிக்காலம் முடிவிற்கு வந்து விட்டதால், ஆகஸ்ட் 15க்கு சில நாட்களுக்கு முன்னதாக அவரை பஞ்சாபிற்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டுமென்ற கருத்து நிலவி வந்தது. டெல்லியில் இருந்த பல முக்கிய பிரமுகர்களும், குறிப்பாக முஸ்லீம்களின் பெரும்பகுதியினர், இந்த முன்மொழிவுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். ரந்தாவா நேர்மையான மற்றும் உறுதியான அதிகாரியாக இருப்பதாகக் கூறிய அவர்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வேறொரு பொருத்தமான மாற்றைக் கண்டுபிடிப்பது கடினம்  என்று தெரிவித்தனர்.

அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரந்தாவா அங்கேயே தக்க வைத்துக் கொள்ளப்பட்டார், ஆனால் பஞ்சாபில் நிலவி வந்த வகுப்புவாத பதட்டத்தின் அழுத்தத்தினால், அவர் மாறி விட்டார். வன்முறைக்கு எதிராக வலுவான அல்லது திறமையான நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை என்று பல அறிக்கைகள் எனக்குக் கிடைத்தன. ஒரு வருடத்திற்கு முன்னதாக அவரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்த முஸ்லீம்களே, இப்போது டெல்லி முஸ்லீம்களுக்குத் தேவையான பாதுகாப்பை அவர் வழங்கவில்லை என்று குறை கூறினர். இது சர்தார் படேலுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்தப் புகார்களின் மீது எந்தவொரு கவனத்தையும் அவர் செலுத்தவில்லை.

சர்தார் படேல் உள்துறை அமைச்சராக இருந்ததால், டெல்லி நிர்வாகம் நேரடியாக அவருக்கு கீழ் இருந்து வந்தது. கொலை மற்றும் தீவைப்பு சம்பவங்களின் பட்டியல் நீண்டு வளர்ந்ததால், காந்திஜி படேலை வரவழைத்து, இந்தப் படுகொலைகளை நிறுத்த அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டார். அவருக்கு கிடைத்த அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூறி சர்தார் படேல் அவரைச் சமாதானப்படுத்த முயன்றார். உண்மையாகச் சொல்வதென்றால், முஸ்லீம்கள் புகார் அளிக்கவோ அல்லது அச்சம் கொள்ளவோ எந்தவொரு காரணமும் இல்லை என்று கூறும் அளவிற்கு படேல் சென்றார். நாங்கள் மூன்று பேரும் காந்திஜியுடன் உட்கார்ந்திருந்த சந்தர்ப்பம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. டெல்லியில் பூனைகள், நாய்களைப் போன்று முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டு வருகின்ற நிலைமைகளைத் தன்னால் சகித்துக்கொள்ள முடியாது என்று ஆழ்ந்த துயரத்துடன் ஜவஹர்லால் கூறினார். தன்னால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், தான் நிராதவராக இருப்பதாகவும் கருதியதால் குற்ற உணர்வு கொண்டவராக அவர் இருந்தார். இந்த பயங்கரமான சம்பவங்கள் பற்றி புகார் செய்கின்ற மக்களிடம் தன்னால் என்ன பதிலைக் கூற முடியும் என்று அவருடைய மனசாட்சி அவரைத் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. அந்த நிலைமையைச் சகித்துக்கொள்ள முடியாததாக இருப்பதாகவும், தன்னுடைய மனசாட்சி தன்னை உறங்க விடவில்லை என்றும் பலமுறை ஜவஹர்லால் திரும்பத் திரும்பக் கூறினார்.

சர்தார் படேல் அளித்த பதில்களால் நாங்கள் முற்றிலும் அதிர்ச்சியடைந்தோம். டெல்லியில் பட்டப்பகலில் முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டிருந்த வேளையில், ”ஜவஹர்லாலின் புகார்கள் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் அவ்வாறு நடந்திருக்கலாம், ஆனாலும் முஸ்லீம்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் செய்து கொண்டே இருக்கிறது. இதற்கு மேல் செய்வதற்கு வேறொன்றுமில்லை” என்று அவரால் காந்திஜியிடம் மிகஅமைதியாகக் கூற முடிந்தது. தன்னுடைய அரசாங்கம் செய்து கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற பிரதமராக ஜவஹர்லால் இருக்கிறார் என்று படேல் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சில நிமிடங்கள் பேசாமல் அமைதியாக இருந்த ஜவஹர்லால் பின்னர் நம்பிக்கையிழந்தவராக காந்திஜியின் பக்கம் திரும்பி, சர்தார் படேலின் கருத்துக்கள் இதுவென்றால், தன்னிடம் தெரிவிப்பதற்கான கருத்துக்கள் எதுவுமில்லை என்று கூறினார்.

சர்தார் படேல் மனம் அப்போது எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பதை அறிந்து கொள்வதற்கு அந்த நேரத்தில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். தினந்தோறும் முஸ்லீம்களின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களுக்கு தான் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இருப்பதை ஒருவேளை அவர் உணர்ந்திருக்கலாம். நகரத்தில் முஸ்லீம்கள் வசிக்கின்ற பகுதிகளில் இருந்து கொடிய ஆயுதங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என்பதாக ஒரு கருத்தை அவர் உருவாக்கி வெளியிட்டார். ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக டெல்லி முஸ்லீம்கள் ஆயுதங்களைச் சேகரித்து வந்தனர் என்றும், ஹிந்துக்களோ அல்லது சீக்கியர்களோ முதன்முதலாகத் தங்களுடைய தாக்குதலை நடத்தியிருக்காவிட்டால், முஸ்லீம்கள் அவர்களை முற்றிலுமாக அழித்திருப்பார்கள் என்றும் படேல் கூறினார். கரோல்பாக், சப்ஜி மண்டி போன்ற பகுதிகளிலிருந்து காவல்துறையினர் சில ஆயுதங்களை மீட்டனர். சர்தார் படேலின் உத்தரவின் படி, இவை அரசாங்க இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, அமைச்சரவை அறையின் முன்னறையில் எங்கள் ஆய்வுக்காக வைக்கப்பட்டன. அன்றாடம் நடைபெற்று வந்த கூட்டத்திற்காக நாங்கள் அங்கே கூடிய போது, முதலில் நாங்கள் அந்த முன்னறைக்குச் சென்று கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று சர்தார் படேல் எங்களிடம் கூறினார். நாங்கள் அங்கே சென்ற போது, அங்கிருந்த மேஜையின் மீது துருப்பிடித்துப் போன சமையலறையில் பயன்படுத்தப்படும் கத்திகள், கைப்பிடியுடன் கூடிய அல்லது கைப்பிடி இல்லாத பாக்கெட்-கத்திகள் மற்றும் பேனா-கத்திகள், பழைய வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பு முள் கம்பிகள், சில இரும்பு தண்ணீர்க் குழாய்கள் இருந்ததைக் கண்டோம். சர்தார் பட்டேலின் கருத்துப்படி பார்த்தால், ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களைக் அழித்தொழிப்பதற்காக டெல்லி முஸ்லீம்களால் சேகரிக்கப்பட்ட ஆயுதங்கள் இவைதான். ஓரிரு கத்திகளை தன்னுடைய கையில் எடுத்துப் பார்த்த மவுண்ட்பேட்டன், இவற்றையெல்லாம் சேகரித்து டெல்லி நகரைக் கைப்பற்றி விடலாம் என்று நினைத்திருப்பார்களேயானால், அதுதான் அவர்களிடமிருந்த அற்புதமான ராணுவ தந்திரமாக இருந்திருக்க்கும் என்று கூறினார். 

புராண கிலாவில் ஏராளமான முஸ்லீம்கள் தங்கியிருந்ததாக நான் ஏற்கனவே கூறியிருந்தேன். குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. வெட்டவெளியில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோர் குளிரால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உணவு, குடிநீர் போன்றவற்றிற்கான சரியான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லாததாக அல்லது முற்றிலும் போதுமானவையாக இல்லாமல் மிக மோசமாக இருந்தன. ஒரு நாள் காலை, அந்த அவசரகால வாரியத்திடம் டாக்டர் ஜாகிர் ஹுசைன் சில சான்றுகளை வழங்கி, அந்த பழைய கோட்டையில் நிலவுகின்ற மோசமான நிலைமைகள் பற்றி விவரித்தார். சாகவிருந்த ஏழை ஆண்களையும், பெண்களையும் காப்பாற்றி அவர்களை உயிரோடு புதைத்திருப்பதாக அவர் கூறினார். அங்கே செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைச் சரிபார்த்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த வாரியம் என்னைக் கேட்டுக் கொண்டது. குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று வாரியத்தின் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கேன்வாஸ் துணிகளின் கீழ் குறைந்தபட்சம் மக்கள் உயிர் வாழ முடியும் என்பதால், எந்த அளவிற்கு கூடுதல் கூடாரங்களை அளிக்க முடியுமோ, அந்த அளவிற்கு கூடாரங்களை அளிக்க வேண்டும் என்று ராணுவத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

காந்திஜியின் துயரம் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதற்கு முன்பாக அவரது சிறிய விருப்பத்தைக்கூட நிறைவேற்றிக் கொடுத்த ஒட்டுமொத்த தேசமும், அவருடைய உருக்கமான வேண்டுகோள்களுக்கு செவி மடுக்காமல் இப்போது இருப்பதாகவே தோன்றியது. இறுதியில், இந்த நிலைமைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது, டெல்லியில் அமைதி திரும்பும் வரையில் உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர இவற்றைச் சமாளிப்பதற்கான ஆயுதம் வேறெதுவும் தன்னிடம் இல்லை என்று கூறுவதற்காக என்னை அழைத்திருந்தார். டெல்லியில் அமைதி மற்றும் ஒழுங்கு திரும்பும் வரை காந்திஜி உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிந்தவுடன், செயலற்ற நிலையில் இருந்த பலரும் செயல்படத் தொடங்கினர். அவருடைய வயது மற்றும் உடல் நிலை குறித்து கவலையடைந்த அவர்கள் எப்படியாவது அவர் உண்ணாவிரதம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைத்தனர். இந்த யோசனையை விட்டுக் கொடுக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டனர், ஆனாலும் அவர் மிகவும் பிடிவாதமாகவே இருந்தார்.

சர்தார் படேலின் மனோபாவம் காந்தியின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. சர்தார் படேல் காந்தியின் உள் வட்டத்தைச் சேர்ந்தவர், அவருக்கு மிகவும் பிடித்தவர். தன்னுடைய அரசியல் வாழ்விற்காக உண்மையில் காந்திஜிக்கு மிகவும் கடன்பட்டவராகவே சர்தார் படேல் இருந்தார். அப்போது காங்கிரஸில் முக்கிய தலைவர்களாக இருந்தவர்களில் பலரும், காந்திஜி அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே தங்களுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியிருந்தனர். ஆனால் சர்தார் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகிய இருவரும் காந்திஜியால் உருவாக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.

*டாக்டர் ராஜேந்திரபிரசாத் சிறந்த கல்வித் தகுதிகளுடனான பின்னணியுடன் இருந்தார். பீகார் அரசியலில் உருவாகி வளர்ந்து வருபவராக அவரைப் பலரும் பார்த்தார்கள். ஆனாலும் தன்னுடைய தொழில் மீது அக்கறை கொண்டவராகவே அவர் இருந்து வந்தார். இமாம் சகோதரர்கள் மற்றும் மஜருல் ஹக் போன்ற தலைவர்களுக்கு எதிராக அரசியலில் தனக்கு அதிக வாய்ப்பு இருக்கப் போவதில்லை என்று ஒருவேளை அவர் நினைத்திருக்கலாம். காந்திஜி பீகார் வந்தபோது, அங்கே அரசியல் தலைமை முஸ்லீம்களின் கைகளில் இருப்பதையும், எந்தவொரு நிலையிலிருக்கும் ஹிந்துவும் தன்னோடு இணைவதற்கு முன்வராததையும் கண்டார். டாக்டர் சச்சிதானந்தா சின்ஹா என்பவர் விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்ததையும், அதில் கலந்து கொண்டு காந்திஜியைச் சந்திக்க வருமாறு மிகவும் பிரபலமான ஹிந்துக்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து நான் கேள்விப்பட்டிருந்தேன். ஹிந்து ஒருவரை தலைவராக காந்திஜி தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பீகார் ஹிந்துக்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதாக அவர்கள் காந்திஜியிடம் கூறினர்.  தன்னுடைய சொந்த விருப்பப்படி யாருக்கும் தலைவர் பதவியைத் தர முடியாது என்று சொன்ன காந்திஜி, திறமைமிக்க, நல்ல ஹிந்து ஒருவர் முன்வருவாரேயானால், அவருக்குத் தேவையான ஆதரவை தான் வழங்குவதாக உறுதியளித்தார். பின்னர் பாபு ராஜேந்திரபிரசாத்தின் பெயர் காந்திஜியிடம் பரிந்துரைக்கப்பட்டது, சில ஆண்டுகளிலேயே அவர் காந்திஜியின் உதவி மற்றும் ஆதரவுடன் இந்திய அளவிலான தலைவராக ஆனார்.*

படேலின் கதையோ இன்னும் சுவாரஸ்யமானதாக இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்திற்கு முன்பு வரை, சர்தார் படேல் குஜராத்தில் இருந்த பல வழக்கறிஞர்களில் ஒருவராக, பொது வாழ்வில் எந்தவொரு ஆர்வமோ அல்லது பங்கோ வகித்திராதவராகவே இருந்து வந்தார். காந்திஜி அகமதாபாத்தில் குடியேறியபோது, படேலைத் தேர்ந்தெடுத்து அவரைப் படிப்படியாக உருவாக்கினார். காந்திஜியின் முழுமையான ஆதரவாளராக படேல் மாறினார். காந்திஜியின் விருப்பங்களை பல சந்தர்ப்பங்களில், அவர் எவ்வாறு எதிரொலித்திருக்கிறார் என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். காந்திஜி அவரை காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக்கினார். மேலும் 1931இல் காந்திஜியாலேயே படேல் காங்கிரஸின் தலைவரானார். தான் கடைப்பிடித்து வந்திருக்கின்ற கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான கொள்கைகளை படேல் இப்போது பின்பற்றி வருவது காந்திஜியிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

டெல்லி முஸ்லீம்கள் கொல்லப்பட்டதை தன்னுடைய கண்களாலேயே பார்த்ததாக காந்தி கூறினார். தன்னுடைய வல்லபபாய் இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சராக, தலைநகரின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் போதே இவ்வாறு நடந்திருக்கிறது. முஸ்லீம்களுக்கு பாதுகாப்பை வழங்கத் தவறியது மட்டுமல்லாமல், இதுதொடர்பாக தரப்படும் எந்தவொரு புகாரையும் படேல் வெறுமனே தள்ளுபடி செய்தும் வந்தார். நிலைமை மாறுகின்ற வரை தன்னுடைய கடைசி ஆயுதமான உண்ணாவிரதத்தைப் பயன்படுத்துவதைத் தவிர இப்போது தனக்கு வேறொரு வாய்ப்பு இருக்கவில்லை என்று காந்திஜி கூறினார். அதன்படி, 1948 ஜனவரி 12 அன்று அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கினார். ஒருவகையில், அந்த உண்ணாவிரதம் சர்தார் படேலின் அணுகுமுறைக்கு எதிரானதாகவே இருந்தது. படேலும் இதுபற்றி அவ்வாறே அறிந்திருந்தார்.

காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொள்வதைத் தவிர்ப்பதற்கு நாங்கள் எங்களாலான எவ்வளவோ முயற்சிகளைச் செய்தோம். உண்ணாவிரதத்தின் முதல் நாள் மாலை ஜவஹர்லால், சர்தார் படேல் மற்றும் நான் காந்திஜியின் அருகே உட்கார்ந்திருந்தோம். அடுத்த நாள் காலை சர்தார் படேல் பம்பாய்க்கு புறப்படுவதாக இருந்தார். காந்திஜியிடம் அவர் சம்பிரதாய முறையிலேயே பேசினார், காந்திஜி எந்தவித நியாயமுமின்றி உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாகவும், அவ்வாறு உண்ணாவிரதம் இருப்பதற்கான நியாயமான காரணம் எதுவும் இருக்கவில்லை என்றும் அவர் புகார் கூறினார். உண்மையில், காந்திஜி மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதம் அரசாங்கத்தின் மீது, குறிப்பாக சர்தார் படேல் மீது குற்றம் சுமத்துவதற்கே வழிவகுக்கும் என்ற அவர் முஸ்லீம்களின் படுகொலைகளுக்கு சர்தார் படேலே பொறுப்பாளி என்பது போல காந்திஜி நடந்து கொள்வதாக மிகுந்த கசப்புணர்வுடன் கூறினார்.

காந்திஜி தன்னுடைய வழக்கமான பாணியில் அமைதியாகப் பதிலளித்தார். நான் இப்போது சீனாவில் இல்லை டெல்லியில்தான் இருக்கிறேன். அதுபோக என்னுடைய கண்களும், காதுகளும் நன்றாகவே இருக்கின்றன. என்னுடைய கண்களும், காதுகளும் அளிக்கின்ற சான்றுகளை நான் நிராகரிக்க வேண்டும் என்று நீங்கள் என்னிடம் கேட்பதாக இருந்தால், புகார் தருவதற்கான காரணங்கள் எதுவும் முஸ்லீம்களிடம் இல்லை என்று கூறுங்கள். நிச்சயமாக நான் உங்களை அதை நம்ப வைக்க முடியாது. அதே போல் நீங்களும் என்னை நம்ப வைக்க முடியாது. ஹிந்துக்களும், சீக்கியர்களும் என்னுடைய சகோதரர்கள். அவர்கள் என் ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்திருப்பவர்கள். கோபத்தால் இப்பொழுது அவர்கள் குருடர்களாகியிருந்தால், நான் அவர்கள் மீது குற்றம் சுமத்த மாட்டேன். இருந்தாலும் என்னை நானே வருத்திக் கொள்வதின் மூலம் அதற்கான பரிகாரத்தை நான் செய்ய வேண்டும்.  என்னுடைய உண்ணாவிரதம் உண்மைகளின் பக்கம் அவர்களுடைய கண்களைத் திறந்து விடும் என்றே நான் நம்புகிறேன் என்றார்.

*இந்தப் பதிலால் கோபமடைந்த சர்தார் படேல் காந்திஜியிடம் மிகவும் கடுமையாகப் பேசினார். ஜவஹர்லாலும், நானும் அதிர்ச்சி அடைந்தோம். அவரது நடத்தை எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. எங்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. வல்லபபாய், நீங்கள் வேண்டுமென்றால் அதை உணராமல் இருக்கலாம்.  ஆனால் உங்களுடைய அணுகுமுறை எவ்வளவு அவமதிப்பு தருவதாக இருக்கிறது. நீங்கள் காந்திஜியை எந்த அளவிற்கு காயப்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் ஆழமாக உணர்கிறோம் என்று எனது எதிர்ப்பைக் காட்டினேன்.*

படேல், 'நான் இங்கே தங்குவதால் என்ன பயன் இருக்கப் போகிறது? நான் சொல்வதைக் கேட்பதற்கு காந்திஜி தயாராக இல்லை. இந்த உலகத்திற்கு முன்பாக ஹிந்துக்களின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் முடிவு செய்து விட்டார். அவரது அணுகுமுறை இதுவென்றால், என்னால் அவருக்கு எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை. என் திட்டத்தை நான் மாற்ற முடியாது, பம்பாய்க்கு நான் போயே ஆக வேண்டும்' என்று கிட்டத்தட்ட கூச்சலிட்டே சொன்னார்.  

சர்தார் படேலின் வார்த்தைகளை விட அவரது பேச்சின் தொனி எனக்கு மிகுந்த வருத்தமளித்தது. அது காந்திஜி மீது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நான் நினைத்தேன். படேல் காந்திஜியால் உருவாக்கப்பட்டவர். காந்திஜியின் ஆதரவின்றி நிச்சயம் இந்த நிலைமைக்கு படேல் வந்திருக்க முடியாது. அவ்வாறிருந்த போதிலும் அவரால் காந்திஜியிடம் இந்த தொனியில் பேச முடிகிறது. அதற்குமேல் எதையும் சொல்லிப் பயனில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். படேல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

காந்திஜிக்கு எதிராக படேல் தன்னுடைய மனதைக் கடினப்படுத்திக் கொண்டாலும், டெல்லி மக்கள் அவ்வாறு இருக்கவில்லை. காந்திஜி உண்ணாவிரதத்தைத் தொடங்கி விட்டார் என்பதை அறிந்த உடனேயே, டெல்லி நகரம் மட்டுமல்ல, இந்தியா முழுமையும் இருந்த மக்களிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. டெல்லியில் அதிக விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. சமீபகாலம் வரை காந்திஜியை வெளிப்படையாக எதிர்த்து வந்த குழுக்கள்கூட, தாங்களாகவே முன்வந்து காந்திஜியின் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றுவதற்காக எந்தவொரு காரியத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

டெல்லியில் மீண்டும் அமைதியைக் கொண்டு வருவதற்கான வேலைகளைத் தாங்கள் செய்வதாக மக்கள் பலரும் வந்து காந்திஜியிடம் சொன்னாலும், அவர்களுடைய வார்த்தைகளால் காந்திஜி மனம் மாறவில்லை. மிகத் தீவிரமான செயல்பாடுகளுடன் இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்றாவது நாளில், நிலைமையை ஆராய்ந்து காந்திஜி தனது உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்கான வழிமுறிகளைக் கண்டறிவதற்காக பொதுக்கூட்டம் ஒன்றிற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்திற்குச் செல்லும் வழியில் நான் காந்திஜியைச் சென்று சந்தித்தேன். உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்கான நிபந்தனைகளை அவர் கூற வேண்டும் என்றும், அவற்றை மக்கள் முன்வைத்து, அதன் மூலம் அவர் திருப்தி அடைந்தால், தன்னுடைய உண்ணாவிரதத்தை அவர் கைவிட வேண்டும் என்றும் நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

'இது வியாபாரம் பேசுவதாக இருக்கிறது. ஹிந்துக்கள், சீக்கியர்களின் தாக்குதல்களால் டெல்லியை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அனைத்து முஸ்லீம்களும் திரும்பி வரும்படி அழைக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் தங்களுடைய வீடுகளிலேயே குடியேற்றப்பட வேண்டும். என்பதே என்னுடைய முதல் நிபந்தனை’ என்று காந்திஜி சொன்னார்,

இது மிகவும் நல்ல, உன்னதமான செயலாக இருக்கும் என்றாலும், நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை நான் அறிந்திருந்தேன். பிரிவினைக்குப் பிறகு, இரண்டு பஞ்சாபிலும் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு பஞ்சாபில் இருந்து கிளம்பி லட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். லட்சக்கணக்கானோர் கிழக்கு பஞ்சாபை விட்டு பாகிஸ்தானுக்குச் சென்றனர். ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் டெல்லியை விட்டு வெளியேறிய பிறகு, மேற்கு பஞ்சாபில் இருந்த வந்த பல அகதிகளும் காலியாக இருந்த அந்த முஸ்லீம்களின் வீடுகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இது நூற்றுக்கணக்கானவர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்திருந்தால், காந்திஜியின் விருப்பம் ஒருவேளை நிறைவேற்றப்பட்டிருக்கலாம். ஆனால் இவ்வாறு இடம் பெயர்ந்திருந்த ஆண்கள், பெண்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் இருந்ததால், காந்திஜியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் புதிய பிரச்சினைகளையே உருவாக்கும். மேற்கு பஞ்சாபில் இருந்து முற்றிலுமாக இடம் பெயர்ந்து வந்திருந்த ஹிந்துக்களும், சீக்கியர்களும் இப்போது டெல்லியில் தங்களுக்கென்று ஏதோவொரு வீடுகளைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருக்கின்ற வீடுகளை இப்போது காலி செய்யுமாறு சொன்னால், அவர்கள் எங்கே போவார்கள்? மேலும், டெல்லியை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லீம்கள் பல்வேறு பகுதிகளிலும் சிதறிப் போயிருக்கலாம். அவர்களை  எப்படி திரும்பக் கொண்டு வர முடியும்? எவ்வாறு முஸ்லீம்களைத் திரும்பக் கொண்டு வர முடியாதோ, அதே போன்றே ஹிந்துக்களையும், சீக்கியர்களையும் அவர்கள் ஆக்கிரமித்துள்ள வீடுகளை விட்டு வெளியேறச் சொல்லவும் முடியாது. அத்தகையதொரு தீர்வுக்காக முயற்சி செய்வது என்பது, முஸ்லீம்களை வெளியேற்றிய முதலாவது வெளியேற்றம் என்பதைத் தொடர்ந்து, ஹிந்துக்களையும், சீக்கியர்களையும் வெளியேற்றுகிற இரண்டாவது வெளியேற்றம் நடப்பதாக ஆகிவிடும்.

நான் காந்திஜியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, இந்த நிபந்தனையைக் கைவிடுமாறு அவரிடம் கெஞ்சினேன். இது நடைமுறை சாத்தியமில்லாதது. அது மட்டுமல்லாது, டெல்லியில் இப்போது வீடுகளைக் கண்டு கொண்ட ஹிந்துக்களையும், சீக்கியர்களையும் மீண்டும் தெருவில் திரிபவர்களாக மாற்றக் கூடியது என்பதால் நியாயப்படுத்த முடியாததுமாகும். இந்த நிபந்தனையை வலியுறுத்த வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக கொலை, தீவைப்பு போன்றவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை அவரது முதல் நிபந்தனையாக வைக்குமாறு நான் அவரிடம் முறையிட்டேன், இன்னும் இந்தியாவிலேயே இருக்கின்ற முஸ்லீம்கள் மரியாதையுடன் அமைதியாக வாழ முடிய வேண்டுமென்பதையும், அனைத்து வகுப்பினருக்கிடையிலும் நட்புறவுகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தலாம் என்றேன். இடிக்கப்பட்ட அல்லது வன்முறைக்குள்ளாக்கப்பட்ட முஸ்லீம்களின் மசூதிகளும், வழிபாட்டுத் தலங்களும் சரி செய்யப்பட்டு, சீரமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை அவர் முன்வைக்கலாம் என்ற ஆலோசனையைக் கூறினேன். இத்தகைய இடங்கள் முஸ்லீம் அல்லாதவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது முஸ்லீம்களுக்கு துக்கத்தையும், துயரத்தையும் தருவதாக இருக்கிறது. எந்தவொரு சமூகத்திற்கும் சொந்தமான புனித இடங்கள் மீது எந்தவிதமான தாக்குதல்களும் நடைபெறாது என்ற உத்தரவாதத்தை காந்திஜி கேட்டுப் பெறலாம் என்று கூறினேன். 

முதலில் இதற்கு ஒத்துக் கொள்ளாத காந்திஜி தனது சொந்த நிபந்தனைகளையே வலியுறுத்தி வந்தார். இருந்தாலும் இறுதியாக அவர் மனமிரங்கினார். நான் கூறிய நிபந்தனைகள் எனக்குத் திருப்தி அளிக்குமேயானால், அவற்றை தானும் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். என்னுடைய கருத்துக்களை கருத்தில் கொண்டதற்காக அவருக்கு நன்றி கூறிய நான், என்னுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சினேன். அதற்குப் பின்னர் உண்னாவிரதத்தைக் கைவிடுவதற்கான தன்னுடைய நிபந்தனைகளை அவர் கூறினார். அவை பின்வருமாறு இருந்தன:

1. முஸ்லீம்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை ஹிந்துக்களும், சீக்கியர்களும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அனைவரும் சகோதரர்களாக சேர்ந்து வாழ்வோம் என்று அவர்கள் முஸ்லீம்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

2. தங்களுடைய உயிர் மற்றும் சொத்துக்கள் மீதான பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக எந்தவொரு முஸ்லீமும் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஹிந்துக்களும், சீக்கியர்களும் செய்ய வேண்டும்.

3. ஓடுகின்ற ரயில்களில் முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், அத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுகின்ற ஹிந்துக்கள், சீக்கியர்களை அவ்வாறு செய்யாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

4. நிஜாமுதின் அவுலியா, குவாஜா குத்புதீன் பக்தியார் காக்கி, நசீருதின் சிராக் தேஹ்ல்வி போன்ற மசூதிகள், தர்காக்களுக்கு அருகே வசித்த முஸ்லீம்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றனர். அவர்களைத் தங்களுடைய சொந்த இடத்திற்கே திரும்ப அழைத்து வந்து, மீண்டும் குடியேற்ற வேண்டும்.

5. குத்புதீன் பக்தியார் தர்கா சேதமடைந்துள்ளது. அரசாங்கத்தால் அதனைச் சரி செய்து மீட்டெடுக்க முடியும் என்றாலும் அது காந்தியைத் திருப்திப்படுத்துவதாக இருக்காது. ஹிந்துக்களும், சீக்கியர்களும் தாங்கள் செய்த குற்றத்திற்குப் பரிகாரமாக, அதனைச் சரி செய்து, மறுசீரமைக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

6. எல்லாவற்றிற்கும் மேலாக, அனைவரின் மனமாற்றம் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதைவிட மிக முக்கியமானதாக இருந்தது.  மீண்டுமொரு முறை தான் உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லாத வகையில் ஹிந்து, சீக்கிய சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் இந்த விஷயம் குறித்து காந்திஜிக்கு உறுதியளிக்க வேண்டும்.

அவர் ’இதுவே என்னுடைய கடைசி உண்ணாவிரதமாக இருக்கட்டும்’ என்றார்.

இந்த நிபந்தனைகளை நிறைவேற்றித் தர முடியும் என்று நான் காந்திஜியிடம் உறுதியளித்தேன். பிற்பகல் இரண்டு மணிக்கு அந்தக் கூட்டத்திற்கு வந்த நான், அந்த நிபந்தனைகளை அங்கிருந்த பார்வையாளர்களுக்கு முன்பாக வைத்தேன். இந்த நிபந்தனைகளை நிறைவேற்றித் தருவதாக காந்திஜியிடம் உறுதியளித்து அவரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவே நாம் கூடியிருக்கிறோம் என்று நான் அவர்களிடம் சொன்னேன். வெறுமனே தீர்மானங்களை நிறைவேற்றுவது மட்டுமே அவரைத் திருப்திப்படுத்தாது. டெல்லி மக்கள் அவருடைய உயிரைக் காப்பாற்ற விரும்பினால், அவர் அளித்துள்ள இந்த நிபந்தனைகளை நிறைவேற்றிட வேண்டும். டெல்லி மக்கள் அந்த உறுதியை தனக்கு அளிப்பார்களா என்பதைக் கண்டறிந்து வருமாறு காந்திஜி என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார் என்றேன்.

அந்தக் கூட்டத்தில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 20,000 பேர் கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குரலில் "எங்கள் உயிரைக் கொடுத்தாவது, காந்திஜியின் விருப்பத்தை அப்படியே நிறைவேற்றித் தருவோம். அவர் வேதனையடைவதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்' என்றனர்.

நான் பேசிக் கொண்டிருந்த போதே, சிலர் அந்த நிபந்தனைகளை நகலெடுத்து பார்வையாளர்களிடம் கையொப்பங்களைப் பெறத் தொடங்கினர். கூட்டம் முடிவடைவதற்கு முன்பாக ஆயிரக்கணக்கான பேர் அதில் கையெழுத்திட்டிருந்தனர். இன்னும் அங்கே துணை ஆணையராக இருந்து வந்த ரந்தாவா, சேதப்படுத்தப்பட்டிருந்தவற்றைச் சரி செய்வதற்காக ஹிந்து மற்றும் சீக்கியத் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் குவாஜா குத்புதீன் மசூதிக்கு சென்று சேர்ந்தார். அதே சமயம், தங்களது பகுதிகளில் காந்திஜியின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான பணிகளைச் செய்வோம் என்ற உறுதிமொழியை டெல்லியில் இருக்கின்ற பல்வேறு சங்கங்களும் எடுத்துக் கொண்டன. உண்மையில் அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்புக்களை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவே அவர்கள் அறிவித்தனர். அன்றைய தினம் மாலைக்குள்ளாகவே டெல்லியின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் அனைத்துக் கட்சிகள் மற்றும் குழுவினர் என்னைச் சந்தித்தனர். காந்திஜியின் நிபந்தனைகளை தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக  என்னிடம் உறுதியளித்ததோடு, காந்திஜியை உண்ணாவிரதத்தை விட்டுக் கொடுக்கும்படி நான் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். 

அடுத்த நாள் காலை டெல்லி தலைவர்களின் பிரதிநிதிகளுக்கான கூட்டத்தை நான் கூட்டினேன். அனைவரும் பிர்லா மாளிகைக்குச் சென்று நேரடியாக காந்திஜியிடம் தங்களுடைய உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம். காலை பத்து மணிக்கு பிர்லா மாளிகை சென்றடைந்தேன். அவருடைய நோக்கம் நிறைவேறி விட்டதில் நான் முழுமையாகத் திருப்தி அடைந்திருப்பதாக காந்திஜியிடம் கூறினேன். அவருடைய உண்ணாவிரதம் ஆயிரக்கணக்கான மக்களின் மனங்களை மாற்றியதுடன், அவர்களிடம் நியாயம் மற்றும் மனிதாபிமான உணர்வுகளை மீட்டுக் கொண்டு வந்திருந்தது. சமூகங்களுக்கிடையே நல்ல உறவுகளைப் பேணுவதே தங்களின் முதல் பணி என்று தாங்கள் கருதுவதாக ஆயிரக்கணக்கானவர்கள் இப்போது உறுதியளித்திருந்தனர். அவர்களுடைய உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு காந்திஜியிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன்.

வெளிப்படையாக மகிழ்ச்சி அடைந்தாலும், காந்திஜி எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. விவாதங்கள் மற்றும் சமாதானப்படுத்துகின்ற செயல்களிலேயே அன்றைய நாள் முழுவதும் கழிந்தது. அவர் தன்னுடைய வலிமையையும், எடையையும் இழந்து கொண்டிருந்தார். அவரால் உட்கார முடியவில்லை. படுக்கையில் கிடந்து கொண்டிருந்தாலும், அங்கே வந்திருந்த ஒவ்வொரு குழுவினரும் உண்மையிலேயே மனமாற்றம் அடைந்திருக்கிறார்களா என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தார். இறுதியாக அவர், அடுத்த நாள் காலையில் தன்னிடைய பதிலைச் சொல்வதாக அறிவித்தார்.

காலையில் பத்து மணிக்கு நாங்கள் அனைவரும் அவருடைய அறையில் கூடினோம். ஜவஹர்லால் ஏற்கனவே அங்கே இருந்தார். அங்கே வந்திருந்தவர்களுடன் அவரைப் பார்க்க அனுமதி கேட்டு வந்திருந்த பாகிஸ்தானின் உயர் ஆணையரான ஜாஹித் ஹுசைன் இருந்தார். அவரை அங்கே வருமாறு காந்தி அழைத்திருந்தார். சர்தார் படேல் தவிர முழு அமைச்சரவையும் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் அவரும் இருந்தார். தன்னிடம் மீண்டும் வாக்குறுதிகளை அளிக்க விரும்புபவர்கள் அவ்வாறு செய்யலாம் என்பதைக் குறிக்கும் வகையில் காந்திஜி சைகை செய்தார். அனைத்து வகையான அரசியல் சிந்தனைகளுடன் இருக்கின்ற ஹிந்துக்கள், சீக்கியர்களுடன், டெல்லியில் இருந்த 25 தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து காந்திஜி அளித்திருந்த நிபந்தனைகளை தாங்கள் உண்மையிலேயே நிறைவேற்றுவதாக அவரிடம் உறுதியளித்தனர். அதன் பிறகு காந்திஜி சைகையைக் காட்டிய போது, அவரது வட்டாரத்தைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் ஒன்றிணைந்து ராமபஜன்களைப் பாட ஆரம்பித்தனர். அவருடைய பேத்தி ஆரஞ்சு சாறு கொண்டு வந்தார். அதனை என்னிடம் கொடுக்குமாறு காந்தி சைகை செய்தார். நான் அதனை அவருடைய உதடுகளின் மீது வைத்தேன். காந்திஜி தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். 

காந்திஜி தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்த பிறகு, ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரான ஆர்தர் மூர் தன்னுடைய உண்னாவிரதத்தை இம்பீரியல் ஹோட்டலில் தொடங்கியிருந்தார். ஹிந்து-முஸ்லீம் கலகம் அவரை வெகு ஆழமாகப் பாதித்திருந்தது. பிரச்சனைகள் முடியாவிட்டால், தானும் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக அவர் என்னிடம் கூறினார். பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே தங்கியிருந்த அவர் இந்தியாவை தனது சொந்த தாய்நாடாகவே ஏற்றுக் கொண்டிருந்தார். நடந்து கொண்டிருக்கும் மனித துயரங்களையும் சீரழிவையும் தடுத்து நிறுத்துவது இந்தியராக தனது கடமை என்றே அவர் கருதினார். இந்தியாவைப் பாதித்திருக்கும் இந்த கொடூரமான துயரத்தைவிட இறப்பு எவ்வளவோ மேலானது என்று அவர் கூறினார். காந்திஜி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்ற செய்தியை அவருக்கு அனுப்பிய நான், அவரும் தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட பிறகு, காந்திஜி தனது வலிமையை மீண்டும் பெறுவதற்கு பல நாட்கள் ஆனது. பம்பாயில் இருந்து திரும்பிய சர்தார் பட்டேல் காந்திஜியைப் பார்க்கச் சென்றார். அந்த நேரத்தில் நானும் அங்கே இருந்தேன். இவ்வாறான சந்தர்ப்பங்களிலேதான் காந்தியின் பெருந்தன்மை மிகத்தெளிவாக வெளிப்படுவதாக இருந்தது. அவர் மிகுந்த பாசத்தோடும், அன்போடும் படேலை வரவேற்றார். சிறிதளவும் மனவருத்தமோ அல்லது கோபமோ அவரது முகத்தில் வெளிப்படவில்லை. படேல் மிகுந்த சங்கடத்துடன் காணப்பட்டார். இப்போதும் அவருடைய நடத்தை கடினமானதாக, மிகுந்த சம்பிரதாயத்துடனே இருந்தது. அவரால் காந்திஜியுடன் மகிழ்ச்சியாக இருக்க இயலவில்லை. முஸ்லீம்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வைத் திரும்பக் கொண்டு வருவதற்காக காந்திஜி செய்தவற்றை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

காந்திஜியின் உண்ணாவிரதம் குறித்து இத்தகைய மனப்போக்கு சர்தார் படேலிடம் மட்டும் இருக்கவில்லை. பூனாவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு, ஜின்னாவுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியதிலிருந்தே ஹிந்துக்களில் ஒருசாரார் காந்திஜிக்கு எதிரான கசப்புணர்வுடனே இருந்து வந்தனர். அவர்களுடைய கோபம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஹிந்துக்களின் சட்டப்பூர்வமான நலன்களை அவர் நிராகரித்து விட்டதாக வெளிப்படையாகவே அவர்கள் கண்டித்து வந்தனர். அவர்களின் இத்தகைய செயல்பாடுகள் ஒளிவுமறைவில்லாமல், நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டே இருந்தன. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இந்த விஷயம் மீண்டும் தலைதூக்கியது. மகாசபை, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் ஆகியவற்றின் தலைமையின் கீழ் இருந்த ஹிந்துக்களில் ஒரு பகுதியினர் ஹிந்துக்களுக்கு எதிராக காந்திஜி முஸ்லீம்களுக்கு உதவி வருவதாக வெளிப்படையாகக் கூறி வந்தனர். காந்திஜியின் பிரார்த்தனை கூட்டங்களில், அவருடைய அறிவுரைகளின்படி, ஹிந்து மதப் புனித நூல்களை வாசிக்கும் போது குர்ஆன் மற்றும் பைபிளின் வசனங்களும் வாசிக்கப்பட்டன. இவர்கள் அதற்கும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். 1947 செப்டம்பரில் அவர் டெல்லிக்கு வந்த பிறகு, குர்ஆன், பைபிளிலிருந்து வசனங்களை வாசிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவர்களில் சிலர் காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அதனை வலியுறுத்தும் வகையிலே, துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சிறிய நோட்டிஸ்கள் வழங்கப்பட்டன. ஹிந்துக்களின் எதிரி என்று காந்திஜியை விவரிப்பதன் மூலமாக அவருக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டனர். காந்திஜி தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், அவரைக் கொலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றுகூட ஒரு துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காந்தியின் உண்ணாவிரதம் இந்தக் குழுவை மேலும் எரிச்சலுக்குள்ளாக்கியது. இப்போது அவர்கள் அவருக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தனர். அவர் மீண்டும் பிரார்த்தனை கூட்டங்களை ஆரம்பித்த போது, அவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அதில் யாரும் காயம் அடையவில்லை என்றாலும், காந்திஜிக்கு எதிராக யாராவது இவ்வாறு கையை உயர்த்த முடியுமா என்று இந்தியா முழுவதுமிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். காவல்துறையினர் தங்களுடைய விசாரணையைத் தொடங்கினர். குண்டு வீசியது யார் என்பதையோ, அவர்கள் பிர்லா மாளிகையின் தோட்டங்களுக்குள் எப்படி வெற்றிகரமாக நுழைந்தார்கள் என்பதையோ அவர்களால் கண்டுபிடிக்க முடியாதது ஆச்சரியம் அளிப்பதாகவே இருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கூட அவருடைய உயிரைப் பாதுகாப்பதற்குப் போதுமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது வினோதமாகவே இருந்தது. சிறிய எண்ணிக்கையில் இருந்தாலும், காந்திஜியைக் கொல்ல வேண்டுமென்பதில் உறுதியாக அந்தக் குழு இருந்ததை இந்தச் சம்பவம் தெளிவாகக் காட்டியது. காந்திஜியின் பாதுகாப்பிற்கென்று டெல்லி காவல்துறையும், குற்றப் புலனாய்வுத் துறையும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கையாகவே இருந்தது. மிகவும் அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்கூட எடுக்கப்படவில்லை என்று சொல்வதற்கு காலந்தோறும் நாம் வெட்கப்பட வேண்டும், துயரப்பட வேண்டும். .

இன்னும் சில நாட்கள் கழிந்தன. காந்திஜி தனது வலிமையை மெதுவாகத் திரும்பப் பெற்றார். அதற்குப் பிறகு, பிரார்த்தனை முடிந்தபின், அங்கிருந்தவர்களுடன் மீண்டும் அவர் உரையாடத் தொடங்கினார். இந்தப் பிரார்த்தனைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். தான் சொல்ல விரும்பிய செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாக இந்தப் பிரார்த்தனைக் கூட்டங்கள் இருந்ததாகவே அவர் கருதினார்.

1948 ஜனவரி 30 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நான் காந்திஜியை சந்திக்கச் சென்றேன். அவருடன் நான் விவாதிக்க வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் இருந்தன. ஒரு மணி நேரத்திற்கு மேல் அவருடன் நான் அமர்ந்திருந்தேன். பிறகு நான் வீட்டுக்குத் திரும்பினேன். மாலை 5.30 மணியளவில் அவருடைய ஆலோசனையைப் பெற வேண்டிய மேலும் சில முக்கியமான விஷயங்கள் இருந்தன என்பது திடீரென்று என்னுடைய நினைவிற்கு வந்தது. நான் மீண்டும் பிர்லா மாளிகைக்குச் சென்றேன். வாயில்கள் மூடப்பட்டிருப்பதைக் கண்ட போது ஆச்சரியமடைந்தேன். அங்கே புல்வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் நின்று கொண்டிருந்தனர். அங்கிருந்த தெருக்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. விஷயம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. என் காரைப் பார்த்தவுடன் அவர்கள் எல்லாரும் எனக்கு வழி விட்டார்கள். நான் வாயில் கதவுகளுக்கு அருகே இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றேன். வீட்டின் கதவுகளும் தாழிடப்பட்டிருந்தன. வீட்டிற்குள் இருந்து கண்ணாடி பலகணி வழியாக என்னைப் பார்த்த ஒருவர், என்னை உள்ளே அழைத்துச் செல்வதற்காக வெளியே வந்தார். நான் உள்ளே நுழையும் போது யாரோ கண்களில் கண்ணீர் வழிய ’காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார். உணர்வற்றுக் கிடக்கிறார்' என்றார்கள்.

அந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சியாகவும், எதிர்பாராததாகவும் இருந்ததால், அந்த வார்த்தைகளின் பொருளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் பிரமிப்புடன் காந்திஜியின் அறையை நோக்கிச் சென்றேன். அங்கே தரையில் அவர் படுத்திருப்பதைக் கண்டேன். அவருடைய முகம் வெளிறிப் போய் இருந்தது. அவருடைய கண்கள் மூடியிருந்தன. அவருடைய இரண்டு பேரன்களும் அவரது கால்களைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். காந்திஜி இறந்துவிட்டார் என்பது எனக்கு ஏதோ கனவில் கேட்பது போல் இருந்தது. 

ஓரியண்ட் லாங்மேன் பதிப்பகம் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட முழுமையான பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ள, அதற்கு முந்தைய 1958ஆம் ஆண்டு பதிப்பில் இல்லாத பகுதிகள் தனித்துக் காட்டப்பட்டுள்ளன.  

- தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு