புதுதில்லி:
மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், இந்தியாவின் கடன் அளவு 84 சதவிகிதமாக உயரும் என்று ‘பிட்ச்’ ரேட்டிங்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.
2016-ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை, அதையடுத்து கொண்டுவந்த திட்டமிடப்படாத ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதித்தது. கடந்த 3 ஆண்டுகளாவே இந்தியா பொருளாதார மந்த நிலையை சந்தித்து வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.இவற்றின் காரணமாக, இந்திய அரசின் கடன் அளவு, ஜிடிபி மதிப்பில் 84 சதவிகிதம் வரை உயரும் என்று பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் கடன் அளவு 70 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால், இந்தியப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்கெனவே எச்சரித்துள்ளன. இந்நிலையில் அடுத்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை ஈட்டும் என்று “பிட்ச்” ரேட்டிங்ஸ் நிறுவனம் நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 சதவிகிதம் வரையில் வளரும் என்று கணித்துள்ள பிட்ச் நிறுவனம், அடுத்த 2021-22 நிதியாண்டில் அது 9.5 சதவிகிதமாக இருக்கும் என்று ஆறுதல் அளித்துள்ளது.