புதுதில்லி:
தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும், பாஜக-வை முழுவதுமாக துடைத்தெறிந்து, அனைத்துத் தொகுதிகளிலும் ஆத் ஆத்மி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுமாறு வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தில்லி மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஐந்தாண்டு கால ஆர்எஸ்எஸ் - பாஜக அரசாங்கம், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் கடுமையான பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த அரசாங்கம், முஸ்லிம்கள் மீதும், தலித்துகள் மீதும் மிகவும் வெறுக்கத்தக்க விதத்தில் தாக்குதல்களையும் தொடுத்து வருகிறது.சிறுபான்மையினருக்கு எதிராக மிகவும் கூர்மையான முறையில் மதவெறித் தீயையும் விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்திருக்கிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது கடும் தாக்குதல்களைத் தொடுக்கப்பட்டுள்ளன. அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கும் அதிகாரக் குழுமங்கள் பலவற்றையும் சுயேட்சையாகச் செயல்படவிடாமல் தடுத்து, அவற்றின் தரத்தைத் தாழ்த்திக் கொண்டிருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக மாண்புகளையும் அரித்து, ஒழித்துக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.பாஜக அரசாங்கம் மிகவும் சிரத்தையுடன் பின்பற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரின் மீதும் பொருளாதாரச் சுமைகளும், வறுமையும் கடுமையாக ஏற்றப்பட்டுள்ளன. அதே சமயத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு எண்ணற்ற சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற கிரிமினல்கள் நாட்டை விட்டு பறந்தோடி சொகுசாக வாழ்வதற்கும் வழிவகுத்துத் தந்திருக்கிறது. ரபேல் போர்விமானங்கள் வாங்கியதில் வானளாவிய அளவிற்கு ஊழலும் புரிந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்குக் குந்தகம் விளைவிப்பதற்காக, துணை ஆளுநரின் அலுவலகத்தைத் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறது. தில்லி மாநிலத்திற்கு முழு மாநில அந்தஸ்து அளித்திடுவோம் என்ற தன்னுடைய உறுதிமொழிக்கே பாஜக துரோகம் இழைத்துள்ளது. இவ்வனைத்துக் காரணங்களுக்காகவும், நடைபெறும் தேர்தலில் பாஜக முழுமையாகத் துடைத்தெறியப்பட்டு, ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.
பாஜகவிற்கு மாற்றாக காங்கிரஸ் கட்சியால் நம்பத்தகுந்த விதத்தில் இங்கே ஒரு மாற்று அரசாங்கத்தை அளிக்க முடியாது. அதன் வெகுஜனத் தளங்கள் கணிசமான அளவிற்கு அரிக்கப்பட்டுவிட்டன. ஆம் ஆத்மி மாநில அரசுக்கு எதிராக ஓர் எதிர்மறைப் பங்களிப்பையே மேற்கொண்டு வந்துள்ளது. இங்கே அது, தன்னுடைய பிரதான எதிரியாக ஆம் ஆத்மி கட்சியைப் பார்க்கிற அளவிற்கு, பாஜகவைப் பார்க்கவில்லை. மேலும் அது மென்மையான இந்துத்துவா அரசியல் உத்தியைப் பின்பற்றி வருகிறது. வயநாட்டில் ராகுல் காந்தியை நிறுத்தியிருப்பதன் மூலம் இடதுசாரிகளுக்கு எதிராக நிற்கிறது. இவற்றின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எவரையும் ஆதரிக்க வேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்திடும் என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறது. இம்மாநிலத்தில் அக்கட்சி மட்டுமே பாஜகவை உறுதியுடன் எதிர்த்திடும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. எனவே, தில்லி மாநிலத்தில் பாஜகவைத் தோற்கடிக்கவும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யவும் தில்லி வாழ் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. (ந.நி.)