இந்தூர்
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மூன்றாம் கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில், நாட்டில் கொரோனா பரவல் 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8 ஆயிரத்து 590 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான இந்தூரின் மத்தியச் சிறையில் உள்ள 19 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாதிப்புக்குள்ளான கைதிகள் வேறு தனிச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறை என்பது வெளியுலகம் தெரியாமல் தனியாக இருப்பவை. அங்கு எப்படி கொரோனா பரவியது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை மத்தியப் பிரதேசத்தில் 2 ஆயிரத்து 368 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 113 பேர் பலியாகியுள்ள நிலையில், 361 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியைப் படு வேகமாகக் கவிழ்த்து அரியணையைப் பிடித்த பாஜக முதல்வர் சவுகான் கொரோனா தடுப்பில் ஆமை வேகத்தில் செயல்படுவது அம்மாநில மக்களை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.