புதுதில்லி:
ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஓலா,ஊபர், இந்தியா புல்ஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமன்றி, லைவ்ஸ் பேஸ், ஷேர்சாட், லெண்டிங்கார்ட் டெக்னாலஜீஸ் போன்ற ஐ.டி. நிறுவனங்களும் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன. இந்த பட்டியலில் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான காக்னிசாண்ட்-டும் தற் போது இணைந்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காக்னிசண்ட் நிறுவனம் 200 மூத்த நிர்வாகிகளை வெளியேற்றியது. அதற்கு முந்தைய ஆண்டில், 400 மூத்த நிர்வாகிகள், அவர்களாகவே வேலையை விட்டுப் போவதற்கான திட்டங்களை அறிவித்திருந்தது.
அதற்குப் பிறகும், காக்னிசண்ட் நிர்வாகத்தில் உயர் மட்டத்திலும், நடுத்தர மட்டத்திலும் ஏராளமான ஊழியர்கள் இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிரையன் ஹம்ப்ரீஸ் கருதுவதாக கூறப்பட்டது.இந்நிலையில், கொரோனா காலநெருக்கடியைக் காரணமாகக் காட்டி, உயர்மட்ட அளவிலான 400 ஊழியர்களை வெளியேற்ற தற்போது காக்னிசண்ட் திட்டமிட்டுள்ளது. வழக்கமாக காக்னிசண்டிலிருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு 20 வாரங்களுக்கான சம்பளம் வழங் கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது மூன்று மாதத்திற் கான சம்பளத்தை மட்டும் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தில் ஊழியரின் ஒவ்வொரு பணி ஆண்டுக்கும் கூடுதலாக ஒரு வாரத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.