தனது இடமாறுதல் மற்றும் ராஜினாமா குறித்து வெளியில் விவாதிக்க விரும்பவில்லை என சென்னை உயர் நிதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டவர் விஜயா கே.தஹில் ரமணி. இவரை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த முடிவால் தஹில் ரமணி அதிருப்தியடைந்த நிலையில், அதை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்திற்கு கடிதம் அனுப்பி னார். ஆனால், அந்த கோரிக்கையை கொலிஜியம் ஏற்காத நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் ராஜி னாமா கடிதத்தை அனுப்பினார். இந்த கடிதத்தின் மீதான முடிவு தெரியும் வரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிகளை மேற்கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. திங்களன்று அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பணியிட மாற்றம் செய்வது நியாயமற்றது என அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் உட்பட வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொலிஜியத்தின் முடிவைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முன்பு திங்களன்று(செப்.9) வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.வைகை உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து இன்று மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிய நீதிபதி தஹில் ரமணியை அணுகியபோது “நான் எனது இடமாற்றம் அல்லது ராஜினாமா பற்றி விவாதிக்க விரும்பவில்லை . தயவுசெய்து என்னை மன்னியுங்கள்“ என கூறி உள்ளதாக தி இந்து இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.