புதுதில்லி:
பிஎஸ்என்எல் நிறுவனம், புதிதாக முதலீட்டுச் செலவுகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது; டெண்டர்களையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.இது பிஎஸ்என்எல் நிறுவனத்தினரை, கவலையில் ஆழ்த்தியுள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், லாபத்திலேயே இயங்கி வந்தது. தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி, கம்பெனியையே இழுத்து மூடிக்கொண்டிருந்தபோதும் கூட, கடந்த 2014 -15-இல் ரூ. 672 கோடி, 2015-16இல் ரூ. 3 ஆயிரத்து 885 கோடி, 2016-17இல் ரூ. ஆயிரத்து 684 கோடி என பிஎஸ்என்எல் நிறுவனம் லாபமீட்டி வந்தது.
ஆனால், முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் ஜியோ’ சந்தையில் நுழைந்த பிறகு, ஏனைய ஏர்டெல், ஐடியா, வோடாபோன் நிறுவனங்களைப் போலவே, பிஎஸ்என்எல் நிறுவனமும் இழப்பைச் சந்திக்கத் துவங்கியது.தற்போதைய நிலையில், ஜியோ உட்பட அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 4ஜி சேவையை அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், பொதுத்துறையைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தால், 4ஜி சேவைக்கு மாற முடியவில்லை. காரணம், அதற்கான அனுமதியை மத்திய மோடி அரசு இதுவரை வழங்காமல் இருப்பதுதான். ஆப்டிக் பைபர் கேபிள்கள் மூலம் 4ஜி சேவையை வழங்குவதற்கும், உள்கட்டமைப்பு உபகரணங்களை நிறுவுவதற்கான நிதியுதவிகளையும் செய்ய மறுத்து வருகிறது.
இதனால், போட்டி நிறைந்த தொலைத்தொடர்புச் சந்தையில், 4ஜி சேவையை வழங்க முடியாமலும், தனியார் நிறுவனங்களைப் போல கட்டணங்களைக் குறைக்க முடியாமலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனினும், வங்கிகளில் கடன்பெற்றும், வேறு பல வகைகளிலும் எப்பாடுபட்டாவது, 4ஜி மற்றும் 5ஜி சேவையை துவங்கி விட்டால், பின்னர் நிறுவனத்தை லாபத்திற்கு கொண்டுவந்து விடலாம் என்று கணக்குப் போட்டு, பிஎஸ்என்எல் அதிகாரிகள், அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.ஆனால், அதற்கும் மோடி அரசு தடையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை சுற்றறிக்கை ஒன்றை, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தற்போது அனுப்பி வைத்துள்ளது. அதில், ஜூன் 2-ஆம் தேதிக்குப் பிறகு, திட்டமிடப்பட்ட அனைத்து முதலீட்டுச் செலவுகளையும், அனைத்து டெண்டர்களையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது, புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம் என்ற ரீதியில் இந்த உத்தரவைப் பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பிஎஸ்என்எல் கேட்கும் நிதியைத் தானும் தராமல், நிறுவனமே சில முயற்சிகளை மேற்கொண்டு முன்னேறப் பார்த்தால் அதற்கும் தடை விதிப்பதாகவே மோடி அரசின் இந்த உத்தரவு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மேலும், அரசின் இந்த உத்தரவால், ஏற்கெனவே அறிவித்த காலத்திற்குள் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் 4ஜி, 5ஜி சேவைகளை வழங்க முடியாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது.