புதுதில்லி:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில், கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘ராம ஜென்மபூமி தீர்த்தக் க்ஷேத்ர அறக்கட்டளை’ அழைப்பு விடுத்துள்ளது.
“நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் இயக்கங்களின் கணக்கீடுகளின் அடிப்படையில் பிரதமரின் வருகைக்கு ஆகஸ்ட் 3 மற்றும்5 ஆகிய இரண்டு நல்ல தேதிகளை நாங்கள்பரிந்துரைத்துள்ளோம்” என்று ராமர் கோயில்அறக்கட்டளையின் தலைவர் நிருத்யா கோபால் தாஸின் செய்தித் தொடர்பாளர் மஹந்த் கமல் நயன் தாஸ் தெரிவித்துள்ளார்.“பூமி பூஜை பிரதமரால் செய்யப்பட வேண்டும் என்றே முழு நாடும் கருதுகிறது” என்று கூறியுள்ள அறக்கட்டளையின் 15 உறுப்பினர்களில்ஒருவரான காமேஷ்வர் சவுபால், “நாட்டின் தற்போதைய நிலைமை, எல்லைப் பிரச்சனைமற்றும் தொற்றுநோய் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி, பொருத்தமாக இருக்கும் என்று கருதும் நாளில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
தங்களின் அழைப்பை கொள்கையளவில் பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார் என அறக் கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராயும் கூறியுள்ளார்.இவ்வாறு ஆகஸ்ட் 3 அல்லது 5 தேதிகளில் ஏதாவது ஒருநாளை பூமிபூஜைக்கு ஒதுக்குமாறு, ராம ஜென்மபூமி அறக்கட் டளை பிரதமர் மோடியிடம் கூறியுள்ள நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதிதான், அடிக்கல் நாட்டு விழா நாளாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏனெனில், ‘ஆகஸ்ட் 5’ என்பது, பாஜக தாங்கள் நினைத்தது போல, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் 370-ஆவது பிரிவை ரத்து செய்து, மாநில அந்தஸ்தையும் பறித்த நாளாகும். அதன்ஓராண்டு நிறைவும் தற்போது வரவிருக்கிறது.
காஷ்மீருக்கான 370-ஆவது பிரிவு நீக்கம், ராமர் கோயில், பொது சிவில் சட்டம்ஆகியவைதான் பாஜக-வின் அரசியல் நிகழ்ச்சி நிரல். இவற்றில் முதலிரண்டையும், மீண்டும் ஆட்சிக்கு வந்த மோடி அரசு செய்துமுடித்துள்ளது. இதையே தங்களின் சாதனையாகவும் கூறி வருகிறது. ஆகவே, ‘370’ நீக்கப்பட்ட நாளிலேயே ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை மோடி அரசு நடத்தும் என்றுகூறப்படுகிறது.அன்றைய தினம், வெள்ளியில் 40 கிலோ எடையுள்ள செங்கலை வைத்து வழிபட்டு பூமி பூஜை நடத்தப்படுகிறது.