tamilnadu

img

காஷ்மீரில் களையிழந்த பக்ரீத்!

ஸ்ரீநகர், ஆக. 12- நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீரில் கட்டுப்பாடுகளை ராணுவத்தினர் மீண்டும் அதிகரித்துள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் தொழுகைக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்குச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 5 ஆம் தேதி முதல் ராணுவத்தினர் கையிலிருந்த காஷ்மீரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாக பாஜக ஆதரவு ஊடகங்கள் கூறின. ஆனால் சில பகுதிகளில் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதாகவும், கடைகள் திறக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே கடைகளை அடைக்க காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டதாகவும் பின்னர் முழுமையான ராணுவக் கட்டுப்பாடு அமலானதாகவும் தகவல்கள் உறுதி செய்கின்றன.

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகை தினத்தன்று ஸ்ரீநகரில் உள்ள மசூதிகளில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கலவரம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவின்பிடியிலேயே ஸ்ரீநகர் வைக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் அதிகமானோர் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதால், மக்கள் தங்களின் வீடுகளுக்கு அருகே இருக்கும் மசூதிகளுக்கு சென்று தொழுகை செய்தனர். இந்த சூழ்நிலையிலும் பொதுமக்கள் உடனடியாக வீடுகளுக்கு திரும்புமாறு ஒலிபெருக்கியில் போலீசார் அறிவித்தனர். பக்ரீத் பண்டிகை முன்னெப்போதும் காஷ்மீரில் இப்படி இருந்ததில்லை என்று உள்ளூர் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 2016ல் புர்கான் வாணி கொலை செய்யப்பட்ட போதும், 19ஆம் நூற்றாண்டில் பயங்கரவாதிகள் பிடியில் காஷ்மீர் இருந்த போதும் இவ்வாறு பக்ரீத் பண்டிகை களையிழந்து காணப்பட்டதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.