tamilnadu

img

வங்கிகள் தனியார்மயம் பொதுமக்களின் உணர்வுகளுக்கும், நலன்களுக்கும் எதிரானது

கோவை:
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப் படுத்தும் நடவடிக்கை பொதுமக்களின் உணர்வு மற்றும் நலன்களுக்கு எதிரானது. இத்தகைய முடிவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறிப்பிட்டுள்ளதாவது:

இந்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவதற்கான உரையாடல் துவங்கிவிட்டதாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் மூலம் வெளியிடப்படும் அறிக்கைகள் வழியாக தெரிந்து கொண்டேன். இத்தகைய முயற்சிகள் அரசாங்கத்தினுடைய நிதி ஆயோக்கின் வலியுறுத்தலின்படி நடைபெறுகிறது. அவர்களுடைய ஆலோசனையாக நீண்டகால தனியார் மூலதனத்தை வங்கி துறையில் அனுமதிப்பது மற்றும் சிலதேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் துவங்குகிற வங்கிகளுக்கு அனுமதி வழங்குவது. 1.4.2020 முதல் பத்து வங்கிகளாக இணைக்கப்பட்ட வங்கித் துறையில் விடுபட்டுபோன இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் அண்டு சிந்து வங்கி, மகாராஷ்ட்டிரா வங்கிஆகிய இந்த மூன்று வங்கிகளை தனியார்மயப்படுத்த உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வங்கி சீர்திருத்தம் என்றபெயரில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் மூலம் வங்கிகள் தனியார்மயப்படுத்த பரிந்துரைகள் வழங்கியுள்ளன. 

வங்கி ஊழியர் சங்கங்களின் தொடர்ந்த போராட்டங்கள் மற்றும் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தொடர் போராட்டங்களின் நிர்பந்தம் காரணமாக கடந்த கால அரசாங்கங்கள் தனியார்மயமாக்கலை நிறுத்தி வைத்திருந்தன. உங்களது அரசாங்கம் 2014ல்ஆட்சிக்கு வந்ததும் சீர்திருத்தம் என்ற பெயரில் 27 வங்கிகளை 12 வங்கிகளாக குறைக்கின்ற முயற்சிகள் வேகம் பெற்றுள்ளன. இதுவரை பல்வேறு காரணங்களுக்காக 14 வங்கிகள் பொதுத்துறை வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை (எல்ஐசி) 51 சதவீத பங்குகளை கட்டாயத்தின் பேரில் வாங்க வைத்து ஐடிபிஐ வங்கியை தனியார் வங்கியாக இக்காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

பொதுத்துறை வங்கிகளே தீர்வு கண்டன
தனியார்துறை வங்கிகள் தங்களுக்குள் பல்வேறு பிரச்சனைகளால் சிரமத்திற்குள்ளாகி உள்ள இந்த காலத்தில் தனியார் வங்கிகள்தான் மிகச்சிறந்த செயல்திறன் வாய்ந்தது என கற்பிதம் உருவாக்கப்படுகிறது. பல தனியார் வங்கிகள் சந்திக்கின்ற தீவிரமான பிரச்சனைகளையெல்லாம் அன்றே பொதுத்துறை வங்கிகள் தீர்வு கண்டு தங்களுடைய வாடிக்கையாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். வங்கிகள் தேசவுடமை யாக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளில் தனியார்மயமாக்கப்பட்ட முதல் வங்கி ஐடிபிஐ வங்கி. இந்தியாவில் தனியார் வங்கிகளில் நான்காவது பெரிய வங்கியான யெஸ் வங்கி மிக அதிகமான வராக்கடனால் ஏற்பட்ட நெருக்கடியும், அதில் ரிசர்வ் வங்கி தலையிட்டு வாடிக்கையாளர்களுடைய சேமிப்பையும், நலன்களையும் பாதுகாப்பதற்காக யெஸ் வங்கியின் இயக்குநர் குழுவை ரத்து செய்ததும், மாற்றியமைத்ததும் நீங்கள் நன்கு அறிவீர்கள். 

தன்னுடைய நிதி நெருக்கடிக்கு மத்தியில் எஸ்பிஐ வங்கி ரூ.7,250 கோடியை முதலீடு செய்து 49 சதவீத யெஸ் பேங்க்கின் மூலதன உரிமங்களை வாங்கியது. பல கூட்டுறவு வங்கிகளும், வங்கிசாராத நிதி நிறுவனங்களும் தீவிரமான நெருக்கடிகளை தற்போது சந்தித்து வருகின்றன. பொதுத்துறை வங்கிகள் இத்தகைய வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் காப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பொருளாதார துறையின் வணிக நிறுவனங்களையும் காப்பாற்றி வருகின்றன. 

எதிர்பாராத இந்த கொரோனா தொற்று நோய் நெருக்கடி காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் நொறுங்கிய நிலையில் உள்ளது. மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் பல திட்டங்களை அறிவித்துள்ளன. எல்லா திட்டங்களையும் பொதுத்துறை வங்கிகள் மூலமாகத்தான் அமலாக்க முடியும்.ஏற்கனவே இணைப்பின் மூலமாக பத்துவங்கிகளாக சுருங்கியுள்ள பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய கடமைகளை நிறைவேற்றுவதில் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. ஒட்டுமொத்தமான நெருக்கடியில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வரும்போது இத்தகைய தனியார்மயப்படுத்தும் முயற்சிகள் ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிவாரண நடவடிக்கைகள் பாதகத்தை உருவாக்கும். சமீபத்தில் பிஎம்சி (மகாராஷ்டிரா) பேங்க் மற்றும் யெஸ் பேங்க் வங்கிகளில் ஏற்பட்ட நெருக்கடி வாடிக்கையாளர்களுடைய நம்பிக்கையை உலுக்கிய காரணத்தால் தனியார் வங்கிகள் 2019 -20 ஆண்டுக்கான சேமிப்பு தொகைகளை மிகச்சிறிதளவே உயர்த்த முடிந்தது. எனவே பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது பொதுமக்களுடைய உணர்வுகளுக்கும், நலன்களுக்கும் எதிரானது.  

இந்த அரசாங்கம் நாட்டின் நலன், மக்கள் நலன் ஆகியவற்றிற்கு எதிரான வெறுக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேசிய ஊரடங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்பதை நான் உறுதியாக உணர்கிறேன்.  ஆகவே,நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்களை நடத்தாமல் இத்தகைய பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.இவ்வாறு அக்கடிதத்தில் கூறிப்பிடப் பட்டுள்ளது.