tamilnadu

img

சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் கவிஞர் தமிழ் ஒளி - எஸ்.ஏ.பெருமாள்

புரட்சி கவிதைகளை அக்னிச் சிதறல்களாய் ஆர்ப்பரிக்க எழுதிய நெருப்புக் கவிஞர் தமிழ் ஒளி. திராவிட இயக்கத்தின் மடியில் வளர்ந்து, பின்பு தன்னை செங்கொடி இயக்கத்தில் நிலை நிறுத்தியவர்.

“கத்தி முனைதனிலே பயங் காட்டும் உலகினிலே சத்திய பேரிகையை நான் தட்டி முழக்கிடுவேன்; ஊரை எழுப்பிடவே துயர் ஒன்றை நொறுக்கிடவே தாரை முழக்கிடுவேன் தமிழ் சாதி விழித்திடவே”

என்று புதியதோர் பிரகடனம் செய்தவர் தமிழ் ஒளி. புதுவை மண்ணில் பிறந்து வளர்ந்து பாரதி, பாரதிதாசன் அடியொற்றித் தனது கவிதைப் பயணத்தைத் துவங்கிய பின்பு தனக்கென ஒரு தன்னேரிலாப் பாதையில் முன்னேறிச் சென்றவர். குறுகிய காலமே வாழ்ந்தாலும் தனது கவிதைக் கொடியினை வானளாவப் பறக்கவிட்டவர். வெறும் கனவுலகைப் பாடாமல் நனவுலகு பற்றி மட்டும் பாடியவர். ஏழை, எளிய உழைப்பாளி மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த அவர் தனது கவிதைகளையும் அந்த மக்களுக்காகவே படைத்தார். வாழ்வின் புதிர்கள் பற்றிப் புரியாத மனிதர்களுக்குத் தனது கவிதைகள் மூலம் புத்தொளி பாய்ச்சி அடையாளம் காட்டியவர். ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி போல இங்கும் ஒரு புரட்சி எழ வேண்டும்; எளியவர்கள் துயரம் என்றென்றும் அகல வேண்டும்; இங்குள்ள முதலாளிகள், நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு முடிவு கட்டிப் புதியதோர் சமுதாயம் காண வேண்டும் என்று போராடினார். இதற்கு வாள் முனையை விடப் பேனா முனை வலிமை வாய்ந்தது என்பதைத் தனது செஞ்சொற் கவிதைகளால் நிரூபித்தவர் தமிழ் ஒளி. உலகப் பாட்டாளிகளின் விடியல் தினமான மே தினம் பற்றி இன்று வரை யாரும் எழுதாத ஒப்பற்ற கவிதையினை கவிஞர் தந்துள்ளார்.

“தொழிலாளர் சாதனையைத் தூக்கிக் கொடிபிடித்து வாராய் மணி விளக்கே வந்திடுவாய் மேதினமே!  யுத்தஒலி கேட்கிறது, ஊர் மிரட்ட எண்ணுபவர் பித்தம் அணுகுண்டாய் பேயாய் அலைகிறது; ரத்தவெறி பிடித்த லாப அரக்கர்களின்  கத்தி, மனிதர் கழுத்தறுக்க நீள்கிறது! நீல நெடுந்திரையாய் நீள்கின்ற கைகளினால் ஞாலத் தொழிலாளர் நல்லரசைத்  தோற்றுவிப்போம்” 

என்று பாடினார். இன்றைக்கும் உலகை மிரட்டி வரும், ஒவ்வொரு நாட்டையும் குண்டு வீசி அடக்கி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். நியூயார்க் நகரின் வால்தெருவிலுள்ள ஆயுத உற்பத்தி செய்யும் முதலாளிகள் பதினான்கு பேர் தங்கள் லாபத்திற்காகப் போர்களைத் தூண்டி வருகிறார்கள். அந்த மரண வியாபாரிகளைக் கண்டித்து,

“நாசக் கிருமிகளாய் ஞாலப் பெருநோயாய் வாசம் புரிகின்ற வால்தெருவின் மூடருக்குக்  ‘காலத் திறுதியாகக் காண்’ என்று  செங்கொடியை ஞாலத்தெரு முனையில் நாட்டுகின்றாய் வானுயர!”

என்று கவிதை ஆரவாரம் செய்கிறார். தொழிலாளரும், உழைக்கின்ற இதர பகுதியினரும் தங்களது உரிமைகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவு போராடும் போது பொதுமக்கள் ஒதுங்கி நிற்கிறார்கள். சிலரோ முதலாளித்துவப் பிரச்சாரங்களுக்குப் பலியாகிப் போராட்டங்களை எள்ளி நகையாடுகிறார்கள். சிலர் புரியாமல் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இவர்களைப் பார்த்துக் கவிஞர்,

“தொழிலாளர்களின் துயர  வாழ்க்கையை நீக்கிடப் பெரிய நீண்ட போராட்டம் தொடங்கிடச் சங்கம் துணிந்திடும் போதில் ஏ, செந்தமிழா! என்னுடைச் சோதா! நீ, யார் பக்கம்? நின்றிட வேண்டும்!  கொள்ளையடித்திடும் கொடியவர் பக்கமா? துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா? நீ யார் பக்கம்

என்று கோபமாய் வினாத் தொடுக்கிறார், மேலும் போராட்டத்தை ஆதரிக்காமல் ஒதுங்கி நிற்போரைப் பார்த்து,

“ஒதுங்கி நிற்பவர் ஊமையர், பேடியர் பேதையர் ஆவர்! பிறப்பினில் நீயோ ஊனமிலாத உயர்வலியுடையோன் என்னுடைக் கடமையை உதறித்தள்ள எண்ணிட வேண்டாம! இப்பொழுதே நீ எவர் பக்கம்? என்றியம்பிடுவாயே!” என்று அறைகூவல் விடுக்கிறார்.  

கவிஞர், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தவர். 1948ல் தொடங்கிய அடக்குமுறைக் காலத்தில் கட்சிப் பத்திரிகைகளின் ஆசிரியராக, எழுத்தாளராக இருந்தவர். தனது எழுத்துக்களால் அந்தக் காலத்தின் போராளிகளுக்கு உத்வேகமும், உற்சாகமும் ஊட்டியவர்.  காளியை வணங்கித் தெருவோரம் கழைக்கூத்தாடிப் பிழைக்கும் ஒரு ஏழை, வயிறு வளர்க்கப் பாலகனாம் தன் மகனைத் தென்னைமர உயரக் கம்பத்தில் சுழல வைத்து வேடிக்கை காட்டுகிறாள். சிறுவன் தவறிக் கீழே விழுந்து சாகிறான். அதிர்ச்சியில் தகப்பனும் சாகிறான். நமது கவிஞர் மனங்குமுறுகிறார்.

காளியும் கூளியும் காக்கவில்லை மூடக் கட்டுக்கதைகளை நம்பியதால்! தேளையும் பாம்பையும் கும்பிடுவார் இவர் தீமை அடைந்துமே செத்திடுவார்!

கவிஞர் தமிழ் ஒளி 40 வயது வரை தான் வாழ்ந்தார். கொடும் நோய்க்கு பலியாகி உயிர் நீத்தவர். கம்யூனிஸ்ட் கவிஞர்களில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக பாடல்களை எழுதி குவித்தவர் தமிழ் ஒளி.  ஆரியர் கொணர்ந்த இந்து மதம் இந்தியாவில் நால்வருண பேதத்தை உருவாக்கியது. பிறப்பால் மனிதனைத் தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கியது. மக்களை மாக்களாய் நடத்தும் இக்கொடுமைகளை உருவாக்கியவர்களைப் பற்றித் தாழ்த்தப்பட்டோர் நெடுங்காலம் அடையாளங் காணவில்லை. தலைவிதி என்றும், ஆண்டவன் படைப்பு என்றும் நொந்து கொண்டனர்.

இந்தியாவில் தோன்றிய லோகாயதத்தையும், புத்தம், சமணம் போன்ற மதங்களையும், மக்கள் பின்பற்றிய காலத்தில் இந்தத் தீண்டாமைக் கொடுமைகள் முளைக்கவில்லை. இம்மதங்களை அழித்து இந்து மதம் கோலோச்ச வந்தது. இந்து மதவெறிதான் தீண்டாமையின் ஊற்றுக்கண் என்று கவிஞர் துல்லியமாய்க் காட்டுகிறார். தமிழர்களுக்கு உலகின் புரட்சிகர காட்சிகளையெல்லாம் எடுத்துக்கூறி அதேபோல் இங்கேயும் உருவாக்க வேண்டுமென்றார். சீன மக்கள் செய்த புரட்சியையும், தெலுங்கானா விவசாயிகளின் வீரகாதைகளையும் எடுத்துக் கூறுகிறார். ஏழை மக்கள் உலகை ஆள வந்தோம், அடிபணியோம் என்று மார் தட்டுகிறார். நமது வருங்காலப் பயணம் அதைநோக்கியே...

தொடரும்...