புதுதில்லி:
கடந்த 2011- 12 ஆம் ஆண்டு முதல் 2016-17 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பொருளாதாரம் வெறும் 4.5 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளதாக முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய புள்ளியல் அலுவலகம் 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 2016-17 ஆம் ஆண்டு வரையிலான பொருளாதார வளர்ச்சி குறித்த தகவலை வெளியிட்டிருந்தது. இதற்கு முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரமானது 6.98 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.அதாவது, கடந்த நிதியாண்டில் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி 7.2 சதவிதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த நிதியாண்டில் இதன் வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதம் என்ற அளவில் இருப்பதாக தெரிவித்து இருந்தது.
மேலும் இந்த வளர்ச்சியானது, மூன்றாவது காலாண்டில் 6 சதவிகிதம், நான்காவது காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) 5.8 சதவிகிதம் என்று சரிந்துள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தது.
ஆனால், ஜிடிபி சரிவு, இதைவிட அதிகம் என்று இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன், அதிர்ச்சி அளித்துள்ளார். இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி, வெறும் 4.5 சதவிகிதம்தான். ஆனால், மத்திய ஆட்சியாளர்கள் 2.5 சதவிகிதம் அதிகரித்து காட்டியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
“ பொருளாதார வளர்ச்சியானது 2004-05 வருட அடிப்படையில் கணக்கிடப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென்று 2011-12 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு சொல்லப்படுகிறது. இது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகளை ஒப்பிட்டுக் கொள்வதற்கு உதவுமே தவிர, நாட்டின் மொத்த வளர்ச்சியை இவ்வாறு கணக்கிட முடியாது.
உண்மையான, பழைய கணக்கெடுப்பைக் கொண்டு ஒப்பிடுகையில் தற்போது வேலையின்மை அதிகரித்துள்ளது. வேலையின்மை, வளர்ச்சியை பெருமளவில் குறைக்கும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இந்த வேலையின்மையால், தனிமனித பொருளாதார வளர்ச்சியும் வீழ்ச்சி கண்டுள்ளது. எனவே, வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு நாம் கணக்கிட்டால் தற்போதைய நாட்டின் வளர்ச்சி வெறும் 4.5 சதவிகிதம்தான். ஆனால், மத்திய அரசோ 7 சதவிகிதம் என்கிறது. அதாவது 2.5 சதவிகிதத்தை அதிகரித்துக் காட்டுகிறது” என்று அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.